Published:Updated:

வியாசர்பாடி சாம்பியன்ஸ்! C/O வறுமை

க.ராஜீவ்காந்தி

பிரீமியம் ஸ்டோரி

சேரிகளும் கடல் வாசல் தெளிக்கும் குடிசைகளுமாக வளர்ச்சி அடையாத வட சென்னையில் உருவான கால்பந்து அணி ஒன்று உலகத்தரம் வாய்ந்த அணிகளை உதைத்துப் பந்தாடுகிறது என்றால் நம்ப முடிகிறதா?  

 ஆம்... வட சென்னைப் பகுதியான வியாசர்பாடியின் 'சேரிப் பகுதிக் குழந்தை கள் கல்வி விளையாட்டு மேம்பாட்டு சங்கம்’ உருவாக்கும் கால்பந்து வீரர்கள் உலக அரங்கில் அழுத்தமாக முத்திரை பதித்து வருகிறார்கள்.

நம்பிக்கை மின்னப் பேசுகிறார் வியாசர்பாடி கால்பந்து அணியின் பயிற்சியாளர் உமாபதி...

''15 வருஷத்துக்கு முன்னாடி தூர்ந்து போன குளத்துல பசங்க விளையாட ஆரம்பிச்சதுதான் இப்போ நாடு கடந்த சாதனைகளுக்கான முதல்படி. இத்தனைக்கும் இங்கே ஒரு உருப்படியான மைதானம்கூடக் கிடையாது. மழைக் காலத்துல அந்த சின்ன மைதானமும் தெப்பக்குளம் ஆகிடும்!'' சிரித்துக்கொண்டே மைதானம் என்பதாக அவர் காட்டும் காலி இடத்தில் ஆறு பேர் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அங்கு அத்தனை பேர்தான் கால்பந்தாட முடியும். அருகே 40 பேர் பயிற்சிக்காகக் காத்திருக்கிறார்கள்.

வியாசர்பாடி சாம்பியன்ஸ்! C/O வறுமை

''ஆட்டோ டிரைவர் தொடங்கி மலம் அள்ளும் தொழிலாளிகளின் குழந்தைகள் வரை இங்கே சுமார் 1,000 கால்பந்து வீரர்கள் இருக்காங்க. அதுல 20 பேர் ஸ்டேட் லெவல் பிளேயர்ஸ். அவங்கள்ல இருந்து  உருவானதுதான் வியாசர்பாடி டீம். தமிழ்நாட்டுல இந்தியன் ஆயில், ஐ.சி.எஃப்., கஸ்டம்ஸ், போலீஸ்னு இருக்கிற 11 அணிகளுக்கும் செம போட்டி கொடுப்பது எங்கள் அணிதான். ஆனா, அவங்கள்லாம் விளையாட்டை முழு நேரமா வெச்சுட்டு இருக்கிறவங்க. நல்ல வேலையிலும் இருக்காங்க. ஆனா, எங்க பசங்க படிச்சுட்டோ, கூலி வேலை பார்த்துட்டோதான் விளையாடு றாங்க. எங்க டீம் கேப்டன் தியாகராஜன் காலையில ரெண்டு மணி நேரப் பயிற்சி முடிச்ச பிறகு அன்னைக்குச் சாயங்காலத்துக்குள்ள 150 தண்ணி கேன் டெலிவரி பண்ணணும்.  

பசங்களுக்கு சத்தான உணவுகளாவது கிடைக் குமேனு முன்னாடி எங்க பசங்களை மத்த அணி களில் சேர்ப்போம். ஆனா, ஒரு அணியா வெற்றி களைக் குவிச்சாதான் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும்னு இப்போ ஒரே அணியா விளையாடிட்டு இருக்கோம். 2008-ல தான் ஒரு அணிக்கான அங்கீகாரம் கிடைச்சது. நாலே வருஷத்துல சூப்பர் டிவிஷன் ஆகி இருக்கோம். 2008-ல இருந்து இப்ப வரை நாங்க தான் சென்னை லீக் சாம்பியன். கால்பந்து விளையாட சத்தான உணவுகள், நல்ல மைதானம், விளையாட்டு உபகரணங்கள், டெக்னிக்கல் பயிற்சிலாம் முக்கியம். இதுல ஒண்ணாவது எங்களுக்குக் கிடைக்காதானு ஏங்கிட்டு இருக்கோம்.

தரமான ஜெர்ஸிகூட இல்லாமல் ஸ்வீடனுக்குப் போனோம். அங்கே சர்வதேசத் தரம் வாய்ந்த அவங்க நாட்டு அணியைத் தோற்கடிச்சோம். இப்போதைக்கு எங்க டீமுக்கு உடனடியா ஒரு ஸ்பான்சர் கிடைச்சா, சர்வதேச அளவில் இன்னும் பல வெற்றிகளைக் குவிப்போம்!'' என்று ஒரே மூச்சில் முடிக்கிறார் உமாபதி.

நம்பிக்கை ஆக்சிஜன் ஏற்ற மனம் இருக்கிறதா நல்லவர்களிடம்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு