Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

டைமிங் தமிழர்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''இப்போது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் இருப்பது யார்?''

 ''அந்த ஆட்சியில் கரன்ட் இல்லைனு இவங்களுக்கு ஓட்டுப் போட்ட நாமதான்!''

- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

'' 'ஊழலுக்கு எதிராகப் போராடும் கட்சி காங்கிரஸ்’ என்கிறாரே சோனியா காந்தி?''

''ஒரு சின்ன திருத்தம்... 'ஊழல் புகார்களுக்கு எதிராக’ என்று போட்டுக்கொள்ளவும்!''

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

'' 'இன்னும் 45 வருடங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாது!’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறாரே மணி சங்கர் அய்யர்?''

''இதைச் சொல்வதற்கு இத்தனை வருஷமா?''

- பிருந்தா சுந்தரம், சென்னை-26.

'' 'அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப்போவது அம்மாதான்’ என்கிறார்களே அ.தி.மு.க. அமைச்சர்கள்?''

'' 'அம்மாதான் அடுத்த பிரதமர்’னு சொல்லிட்டு இருந்தீங்க. என்ன திடீர்னு! அமைச்சர் பதவி நிலைக்கணுமா... வேண்டாமா?''

- தீ.அசோகன், சென்னை-19.

''அண்மையில் உங்களை ஆச்சர்யப்படுத் தியது?''

''சோறு, கூட்டு, குழம்பு, பொரியல், இட்லி, தோசை, சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், மோர், கொழுக்கட்டை, பணியாரம், உப்புமா, சுண்டல், பொரி, வடை, போண்டா, பஜ்ஜி, பக்கோடா, சப்பாத்தி, குருமா, பரோட்டா, இடியாப்பம், ஆப்பம்... இதெல்லாம் என்னன்னு கேட்குறீங்களா? இந்தப் பேர்ல எல்லாம் இதுவரை ஏதாச்சும் சினிமா வந்திருக்கா? இல்லையே... இறக்குமதி அயிட்டமான 'பீட்சா’ பேர்ல படம் வந்திருக்கே!''

- கி.குமுதா, சங்கரன்கோவில்.

'' 'கூட்டம் கூட்டமாக் கொடி பிடிச்சு வர்றாங்க’ என்பதற்கு ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?''

நானே கேள்வி... நானே பதில்!

''ஏன் இல்லை? சூர்யா- ஜோதிகா, சினேகா-பிரசன்னா, அம்மா ஷோபா வுடன் விஜய் என்று குடும்பத்தோடு விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்களே. முன்பு குடும்பத்தில் இருந்தவர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது விளம்பரத்தில். நாளை அரசியலிலா?''

- எஸ்.கணேசன், தேனி.

'' 'அட, ஒரு விஷயத்தை இப்படியும் பார்க்க முடியுமா?’ என்று சமீபத்தில் வியந்தது எதற்கு?''

''எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் மாமனார் வழக்கறிஞர் முத்துநாராயணன் ஒரு பெரியாரிஸ்ட். அவர் பெரியாரோடு பழகிய அனுபவங்கள், பெரியாரின் சிந்தனைகள், அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை பட்டுக் கோட்டை பிரபாகர் தொகுத்து, 'பெரியார் ஒரு தீவிரவாதி’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு சம்பவம்... பெரியார் திருச்சியில் பேசும்போது, 'போரில் ராவணன் ஆயுதத்தை இழந்து நிராயுதபாணியாக நிற்கும்போது, 'இன்று போய் நாளை வா’னு சொன்னதைப் பெருந்தன்மையாச் சொல்றாங்க. ரெண்டு பேருக்குச் சண்டை வந்து ஆயுதங்களை இழந்துட்டா, அடுத்து கைச் சண்டைதான். மல்யுத்தம்தான் நடக்கும். ராவணன் உருவத்துல பெரியவன். அதனாலதான் மல்யுத்தத்துக்குப் பயந்து ராமன், 'இன்று போய் நாளை வா’னு சொன்னான்’ என்றாராம் பெரியார். இது எப்படி இருக்கு?''

- இரா.மங்கையர்கரசி, கோயம்புத்தூர்-5.

''தமிழ்நாட்டில் 'டைமிங் பஞ்ச்’ அடிப்பதில் கில்லாடி யார்?''

''அடிச்சுக்கவே முடியாது... கருணாநிதிதான்! அண்மையில் முதல்வர் ஜெயலலிதா சூரிய சக்திக் கொள்கையை வெளியிட் டார். உடனே, கருணாநிதி சொன்னார், 'கடைசியில் இந்த அரசுக்கு சூரியன்தான் கை கொடுத்திருக்கிறது’. படையப்பாவில் ரஜினிகாந்தைப் பார்த்து 'நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணன், 'உன்னை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது தெரியுமா? வயசானாலும் உன் ஸ்டைல் மட்டும் மாறவே இல்லை’ என்று சொல்வாரே... அதற்கு வாழும் உதாரணம் கருணாநிதிதான்!''

- ஜா.ஜான்சி, கடலூர்.

''ஏழைகள் மீது கரிசனத்துடன் பேசும் அமைச்சர்கள், வர வர குறைந்துகொண்டே வருகிறார்களே?''

''உங்கள் ஏக்கத்தைப் போக்கும்விதமாகச் சமீபத்தில், 'ஏழைகள் நேர்மையான கடனாளிகள். அவர் களுக்குக் கடன் வழங்கினால் கண்டிப்பாகத் திருப்பிச் செலுத்தி விடுவார்கள். ஆகவே, வங்கிகள் ஏழைகளுக்குக் கடன் வழங்கு வதில் தயக்கம் காட்டக் கூடாது’ என்று பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், அவரது கரிசனத்தின் உண்மை அர்த்தம் வேறு.

கந்துவட்டிக்குப் பணம் கொடுப் பவர்கள் முறையாகத் திருப்பித் தருபவர்களுக்கு வலிய வந்து மீண்டும் கடன் தருவதைப் பார்த்திருக்கிறீர்களா... அதைத்தான் ஜிகினா வார்த்தைகளில் நீட்டி முழக்குகிறார் நிதியமைச்சர். ஆனால், இப்போது கிட்டத்தட்ட திவால் ஆகியிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியிருக்கும் மொத்தக் கடன் தொகை 7,524 கோடி ரூபாய். இது முழுவதும் மக்கள் பணம்.

பல்லாண்டுகளாக வாராக் கடனாகவே இருக்கிறது. அதைத் திருப்பி வாங்கவோ, கிங்ஃபிஷரின் சொத்துக்களை முடக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏழைகளுக்கு மேலும் கடன் கொடுத்து, அவர்களிடம் மிஞ்சிஇருக்கும் கோவணத்தையும் பிடுங்குவதற்கு என்ன வழி என்று யோசிக்கிறார் சிதம்பரம்!''

- கா.சுசித்ரா, கும்பகோணம்.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு