Published:Updated:

நானே கேள்வி...நானே பதில் !

வெற்றி வேட்பாளர் ஆற்காட்டார் !

நானே கேள்வி...நானே பதில் !

வெற்றி வேட்பாளர் ஆற்காட்டார் !

Published:Updated:

''உலகிலேயே மிகச் சிறிய சிறுகதை எது?''

##~##

''ஹெமிங்வே எழுதியது. ஆறே வார்த்தைகள். 'விற்பனைக்குக் கிடைக்கும் - குழந்தையின் காலணிகள். இதுவரை அணியாதது!’ இதுபோல இன்னும் உண்டு. 'ரத்தக் கறை படிந்த கைகளுடன் நான் விடைபெறுகிறேன்’ - ப்ராங்க் மில்லர். 'நான்தான் உன் எதிர்காலம்... குழந்தையே அழ வேண்டாம்!’ - ஸ்டீஃபன் பாக்ஸ்டர். 'குழந்தையின் ரத்த வகையா? பெரும்பாலும் மனித வகைதான்!’ - ஆர்சன் ஸ்காட் கார்டு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஜி.லட்சுமிபதி, சென்னை-117

''ஈழத் தமிழர்களுக்காக இந்தியத் தமிழர்கள் போராடுவது சரியா?''

''பிரிட்டிஷ் பொருளாதார அறிஞரான ஹெரால்ட் லாஸ்கி ஒரு கூட்டத்தில், ஜெர்மனியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சியைப் பற்றிப் பேசினார். அப்போது பாதிரியார் லாவோஸ் என்பவர், 'நீங்கள் சொல்கிற கொடுமைகள் ஜெர்மனியில்தான் நடக்கின்றன. அங்கே போய்ப் பேசாமல் லண்டனில் ஏன் வீணாகப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?’ என்றார் கேலியாக. லாஸ்கி நிதானமாக, 'தாங்கள்கூட மக்களை நரகத்தில் இருந்து காப்பாற்றத்தானே பாடுபடுகிறீர்கள்? பின் ஏன் அங்கே போகாமல், இங்கே இருந்துகொண்டு பிரசாரம் செய்கிறீர்கள்?’ என்று போட்டாரே ஒரு போடு!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

நானே கேள்வி...நானே பதில் !

''தற்போதைய நிலையில், எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் யார்?''

''ஆற்காட்டார்தான். அடேயப்பா, உங்க வீட்டு அனுதாப அலையா, எங்க வீட்டு அனுதாப அலையா... தமிழ்நாடே குற்ற உணர்வில் துடிக்குதே. தி.மு.க. ஆட்சி யில் மின்வெட்டுக்காக அவரைத் திட்டியதற் காக!''

- அ.சுகுமார், காட்டுக்கானூர்

''சமீப காலமாக 'பைபோலார் டிஸ்ஆர்டர்’ பற்றிய திரைப்படங்களாக வருகின்றனவே?''

''ஒரு நல்ல விஷயம்... 'பைபோலார் டிஸ்ஆர்டர்’ என்றால் என்ன என்பதைப் பலருக்கும் தெரியவைத்து இருக்கின்றன இந்தப் படங்கள். நம் குடும்பத்திலேயே இருக்கும் நபர் ஒருவர் படபடவெனக் கோபப்பட்டாலோ அல்லது அசாதாரணமானவராக இருந்தாலோ 'அவரு பயங்கரக் கோபக்காரர்’ என்ற ஒற்றைச் சொல்லுடன் கடந்துவிடாமல், அதற்குச் சிகிச்சை இருக்கிறது; மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளன இந்தப் படங்கள். முன்பு புற்றுநோய் தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெற்று இருந்தது. அப்படி 'பைபோலார் டிஸ்ஆர்டர்’ ஆகிவிடாமல் இருந்தால் போதும். அது சரி... தமிழ் சினிமாவில் ஒரு வியாதியைவைத்து தொடர்ந்து படம் எடுக்கும் வியாதிக்கு என்ன பெயர் வைப்பது?''

- கு.மணிமாறன், திருச்சி -4

''வட மாநிலத்தவர்களை 'மாற்றான்’ படத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களாகக் காட்டுகிறார்களே?''

''சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அருகே அண்மையில் ஒரு விபத்து. ஒரு பேருந்தின் அடியில் இரு சக்கர வாகனம் சிக்கிக்கிடந்தது. சுற்றிலும் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது - நான் உட்பட. அப்போது எதிரே மெட்ரோ ரயில் நிலையப் பணிகளைச் செய்துகொண்டு இருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் பதறிப்போய் இந்தியில் கத்திக்கொண்டு ஓடி வந்தார்கள். அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிடத்தில் விபத்துக்குள்ளானவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு, அவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் சென்னைவாசிகளின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கப்போகும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்!''

- எஸ்.எம்.காவியபாரதி, சேலம்.

''அண்மையில் ஆச்சர்யப்படுத்திய செய்தி?''

''இங்கிலாந்தின் செல்போன் காப்பீட்டு நிறுவனம் ஒன்று தங்களின் வாடிக்கையாளர்கள் என்னென்ன காரணங்களைச் சொல்லி காப்பீடு கேட்கிறார் கள் என்று சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் பல காரணங்கள் சிரிப்பாகவும் நம்ப முடியாதவையாகவும் இருக்கின்றன. 'பசு மாடு கன்றை ஈன்றபோது, அதற்கு உதவ மொபைல் போனில் உள்ள டார்ச்சைப் பயன்படுத்தினேன். அப்போது போன், பசுவின் வயிற்றுக்குள் போய்விட்டது. பின்னர், சேதம் அடைந்த நிலையில் வெளியே வந்தது’ என்றார் ஒரு விவசாயி. 'மகளின் பிறந்த நாளுக்காக கேக் தயாரித்தேன். தவறுதலாக செல்போனை மாவுக்குள் வைத்து அவித்துவிட்டதால் சேதமாகிவிட்டது’ என்றார் ஒரு பெண். கடற்கரையில் நின்றபோது கடல் பறவை மொபைல் போனைக் கொத்திச் சென்றுவிட்டது. காரில் இருந்து போட்டோ எடுத்தபோது போனைக் குரங்கு பிடுங் கிக்கொண்டு ஓடிவிட்டது என்று விதவிதமான காரணங்கள்!''

- வி.தமிழரசி, திருப்பூர்.

''சாட்டை இல்லாத பம்பரம்?''

''நாஞ்சில் சம்பத் இல்லாத ம.தி.மு.க-வைச் சொல்கிறீர்களா?''

- விஜயலட்சுமி, பொழிச்சலூர்

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில்  QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism