##~## |
ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு...
காத்திருங்கள்
மீண்டும் தொடரலாம்
ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் ரசனை எதுவாயினும்
உங்கள் சிக்கல் எதுவாயினும்
நீங்கள் விரும்பும் மனிதர்களின்
முகம் தரிசித்துக்கொண்டிருப்பினும்
இயற்கைப் பேரெழிலில்
மனம் லயித்திருப்பினும்
இயற்கைப் பேரழிவில்
மனம் பதைபதைத்திருப்பினும்
கடவுள் துகளின் ஆச்சரியத்தில்
அமிழ்ந்திருப்பினும்
ரொட்டி சுடுவதின் மகத்துவம்
கற்க முனைந்திருப்பினும்
நீண்ட நேரக் கலவிக்கான உத்திகளை
அறியத் தவித்திருக்கும்போதும்
உங்களுக்காகப் போராடுவோரின்
காயம் கண்டு கண்ணீர்விடும்போதும்
புலம் பெயர்ந்தவரின் சோகத்தில்
மனம் இளகும்போதும்
சற்று நேரத்தில் புரட்சியை
வெடிக்கச் செய்துவிடும்
பேருரை நிகழ்ந்துகொண்டிருக்கும்போதும்
யாரோ ஒருவரின் விளையாட்டில்
நாடித்துடிப்பு இயல்பிழக்கையிலும்
ஒரு நகைச்சுவைக் கொண்டாட்டத்தில்
குழந்தையாய் ரசித்திருக்கையிலும்
சாமியார்களின் களியாட்டம் கண்டு
கடவுளையே மறுத்துவிடத் துணிகையிலும்
புலியிடம் மாட்டாது தப்பிக்க
மானுக்காகப் பிரார்த்திக்கையிலும்
எப்போதும் செல்லாத
உங்கள் வாக்கினால்
நம்மை ஆளப் போகிறவர் யார்
என்றறியத் தவித்திருக்கும்போதும்
காத்திருங்கள்
மீண்டும் தொடரலாம்
ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு
அந்த இடைவேளையில் விற்கப்படவே
இங்கு எல்லாமும் நிகழ்கிறது.
- சூரியதாஸ்

வெறும் சிலை அல்ல
ஆசைக்கு
வேறு வேறு
அர்த்தங்கள்
சொல்லிக்கொண்டிருந்த
கூட்டத்தின் பின்னே
ஓசையின்றி
அமர்ந்திருந்தார்
புத்தர்.
- கவிஜி
இயலாமை
கண் திருஷ்டித் தாவரமென்று
கற்றாழையை வாசலில் தொங்கவிட்டு
இரண்டே நாளில்
அதன் நுனி கருக
அத்தனையும் கண்ணெரிச்சலென
கருகிய நுனி கிள்ளியெறிந்து
புலம்பித் தீர்த்தாள் அம்மா.
''கற்றாழை சுருங்கச் சுருங்க
நம்மளும் சுருங்கிருவோம்டா''
அப்பத்தா ஆரூடம் சொல்லியதிலிருந்து
அநேக சமயங்களில்
சுருங்கியிருக்கிறதா என
கற்றாழையைக் கண்கள் தேடுகின்றன.
கடன் கழுத்தை நெரிக்க
கற்றாழையும் கைவிட்டுவிட்டதென
'பணத் தாவரம்’ எனும் ஒரு வகைச் செடியை
நட்டுவைத்துத் தண்ணீர் ஊற்றி
'செடி வளர வளர
வசதியும் வளரும்’ என்ற அப்பாவை
என்னவென்று சொல்வது?
பணத் தாவரமும் கைவிட்டு
வட்டி விழுங்கிய
வாழ்க்கையின் எச்சமாய்
வாழ்வா சாவா போராட்டத்தில்
யாருக்கும் தெரியாமல்
ஒரு மழை நாள் இரவில்
குடும்பத்துடன் பரதேசம் போன
நாளிலிருந்து நான்காவது நாள்
பக்கத்து வீட்டு ரகசிய நண்பன்
அலைபேசுகிறான்,
நீங்கள் விட்டுச்சென்ற
பணத் தாவரத்தில் புதிதாய்
இலைகளிரண்டு துளிர்த்திருக்கிறதென.
- கு.விநாயகமூர்த்தி
அகதி
வீட்டு மாடத்திலும்
மேற்கூரையிலும்
பறவைகள் வசிப்பதை
பெருமையாக நினைக்க ஒன்றுமில்லை
காடுகளை இழந்து
அகதியாய் வாழ்வதில்
என்ன பெருமை இருக்கிறது!
- பூர்ணா
