பிரீமியம் ஸ்டோரி

மூடப்பட்ட திரையரங்கம்

##~##

காலத்தின் முன் காட்சிப் பொருளாய்
கம்பீரம் குறையாமல் நிற்கிறது
வணிக வளாகமாகவோ
திருமண மண்டபமாகவோ
மாறவிருக்கும் அந்தத் திரையரங்கம்.

கடைசியாக ஓடிய படம்
இதுதானென்று உறுதிப்படுத்துகிறது
கழுதைகளுக்குத் தப்பிய
'வாழ்வே மாயம்’ போஸ்டர்

ராஜநாகம் வாழ்வதாய்க் கேள்விப்பட்டதிலிருந்து
பேய்கள் நடமாட்டம் பார்த்ததிலிருந்து
ஒளிந்து விளையாடும் சிறுவர்கள்
வருவதில்லை இந்தப் பகுதிக்குள்

தியேட்டர் தொடர்பான சொத்துப் பிரச்னை
உச்ச நீதிமன்றம் போய்விட்டதாகப்
பேசிக்கொள்கிறார்கள்
எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள்
வெற்றிலைச் சாறு தெறிக்கும்படி.

சொல்வனம்

குறுகிய தியேட்டர் கவுன்ட்டரில்
கலர் கலராய்க் கிடக்கிறது
ஆணுறைகளும்
ஸ்டிக்கர் பொட்டுகளும்

சிதிலமடைந்த சுற்றுச்சுவர்கள்
தாங்கி நிற்கின்றது
உள்ளூர் ரோமியோ ஜூலியட்களையும்
கரிக்கட்டையில் வரைந்த ஹார்ட்டின்களையும்

மூடப்பட்ட திரையரங்கிலும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
ஒரு திகில் படம்
ஒரு குடும்பப் படம்
ஒரு காமப் படம்
ஒரு காதல் படம்
தினசரி நான்கு காட்சிகளாய்.

- கார்த்தி

உடல் பூ

அடர்பனி பெய்யும்
மார்கழி இரவில்
உடல் மரம் பூக்கும்
வியர்வைப் பூ

மரமாய்
நின்றபடி நான்
வேராய்
படுத்தபடி நீ

நீரோட்டம் பாயும்
தண்டுவடங்களில்
மரம் கொத்திப் பறவையாய்
உன் விரல்கள்

மழையில் தலை குளித்த மரம்
தென்றலில்
தலையுலர்த்தும்

வியர்வையில்
தலை குளித்த நீ
பெருமூச்சில்
உலர்ந்துபோவாய்...

விடியத் தொடங்கும்
வெயிலை
உடுத்தத் தொடங்கும் மரம்
களைந்ததை
தேடத் தொடங்குவாய் நீ...

பிறிதொரு நாள்
பூக்கும்
காய்க்கும்
கனியும்
மரம்...

அப்போதும்
பூத்தே இருப்பாய் நீ.

ஏனெனில்
நீ உதிரும் பூவல்ல...
உடல் பூ.

-  கு.இலக்கியன்

மழைக் காசு

நேரத்தோடு உறங்கிப்போகும்
குழந்தைகளுக்காக
மரங்கள்
சேமித்துவைக்கின்றன
நடுநிசி மழையை!

-  நிர்மலா கணேஷ்

பார்வை

நீ பார்த்ததும்
பள்ளிவிட்டு வரும்
குழந்தையாகிறேன்.

- வே.விநாயகமூர்த்தி

நிலா மீசை

மூன்றாம் பிறை நிலா
பரந்த வானம்
பாரதி மீசை
வைத்திருக்கிறது.

- வே.விநாயகமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு