Published:Updated:

நடிகையின் வாழ்வில்...

நடிகையின் வாழ்வில்...
நடிகையின் வாழ்வில்...

நடிகையின் வாழ்வில்...

(அவள் விகடன்: ஜனவரி 21, 2000)

எம்.ஜி.ஆர். என் பேரை மாற்றச் சொன்னார். எனக்கு அது பிடிக்கவில்லை!

'உயர்ந்த மனிதன்’, 'நாடோடி’, 'அவளுக்கென்று ஒரு மனம்’, 'தங்கச் சுரங்கம்’, 'மாயமோதிரம்’ என்று அந்தக் காலப் படங்களின் கதாநாயகி பாரதி இன்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கிறார்! அசப்பில் வைஜயந்திமாலா பாலி சாயலில் இருக்கும் பாரதி, பேசுவதும் நடப்பதுமே அபிநயம் நிறைந்த நாட்டிய நாடகம் போல் இருக்கிறது. ''சினிமா நடிகைகள் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி வாழ்ந்து வருகிறேன்'' என்று பெருமையுடன் சொல்லும் பாரதி, தன் வாழ்க்கை பற்றிய சில சுவாரஸ்யமான அனுபவங்களை விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து...

''மகாராணி கல்லூரியில் பி.யூ.ஸி. முதல் வருஷம் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியின் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருந்தார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக் கொண்டிருந்த நேரம்... என்னை நடிக்க கூப்பிட்டார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.

நடிகையின் வாழ்வில்...

சினிமா பார்க்ககூட தியேட்டருக்கு எங்களைக் கூட்டிப்போகாத கன்சர்வேடிவ் குடும்பம் என்னுடையது. யாராவது ஆண் சற்று நேரம் தொடர்ந்தாற்போல உற்றுப் பார்த்தால் தர்மசங்கடமாக இருக்கும்.

எனக்கு நடிப்பதில் துளியும் இஷ்டமில்லை. என் கல்லூரி ஆசிரியர்களோ, ''நீ அழகா இருக்கே. நல்லா நடனமாடுறே. தேடி வந்த வாய்ப்பை தவறவிடாதே!'' என்று அறிவுரை சொன்னார்கள். கல்லூரியை விட்டுப் போக மனமில்லாமல் விருப்பமின்றி நடிக்க ஆரம்பித்தேன்.

இரண்டு வருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என்று பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்தந்த மொழிப் படங்களில் நடிக்கும்போது அந்தந்த மொழியைக் கற்றுக் கொள்வேன். அப்படி இன்று எனக்கு எட்டு மொழிகள் தெரியும்.

தமிழில் முதல் படமே பெரிய பேனர். 'உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்தேன். அடுத்து பத்மினி பிக்சர்ஸின் 'நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆரோடு நடித்தேன்.

நடிகையின் வாழ்வில்...

தெலுங்கில் 'அனக அனகா’, 'ஒக்க தண்ட்ரி’, 'ஆட பில்லல’, 'தண்டரி புட்டிந்தி கௌரவம்’ ஆகிய படங்கள் எனக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன.

கன்னடத்தில் கிருஷ்ணதேவராயா படம் வெள்ளிவிழா கண்டதோடு எனக்கு மாநில விருதையும் பெற்றுத் தந்தது.

முதலில் மனதுக்குள் அழுது கொண்டே நடித்த நான், பிறகு இது கடவுள் கொடுத்த வரம் என்று சமாதானம் ஆகிவிட்டேன். இதுதான் தொழில் என்று ஆனபிறகு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பள்ளி - கல்லூரிகளில் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் அதிகம். பின்னாளில் விளையாட்டு வீராங்கனை ஆவேன் என்று கற்பனை செய்தேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கனவு கண்டேன்.

ஆனால், விதி வலியது. அது கொண்டு செல்லும் பாதையில்தான் போக வேண்டும். காலத்தின் கைகளில் நாம் வெறும் பொம்மைதான் என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.

தொழில் என்றான பிறகு நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தினேன். என் முதல் 'டேக்’ டைரக்டர் சொன்னபடி செய்ததால் ஓகே ஆகிவிட்டது. நான் ஒரு சின்சியர் ஸ்டூடண்டாக இருந்தது எனக்குப் பெருமளவு உதவியது. நடிப்பிலும் நடனத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாதிரி, சினிமா தொழிலின் இயல்பும் எல்லோருக்கும் தெரியும். கடவுள் எல்லோருக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு.

எனக்கு வம்பு பேசுவதும், வெட்டி அரட்டை அடிப்பதும் பிடிக்காது. படப்பிடிப்பு தளத்தில் நடித்து முடித்து அடுத்த ஷாட்டுக்கு காத்திருக்கும்போது கையில் ஏதாவது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டுவிடுவேன். அல்லது, ஸ்ரீராமஜெயம் எழுதுவேன்.

நடிகையின் வாழ்வில்...

நான் தமிழில் நடிக்க வந்த போது என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அவர்கள் சொன்ன எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அறுபது வயதுக்காரிக்கான பெயர்போல் இருந்தது. அதோடு என் அப்பா, அம்மா எனக்கு வைத்த பெயரை நான் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? முடியாது என்று மறுத்துவிட்டேன்.

நான் எப்போதும் கால் மேல் கால் போட்டு அமர்வது வழக்கம். எனக்கு அது வசதியாக இருக்கிறது (பேசும்போதும் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்திருந்தார்). ஆனால் மற்றவர்கள் என்னிடம், 'கால் மேல் கால்’ போடாதீர்கள். அதுவும் எம்.ஜி.ஆர். முன்னால்’ என்று எச்சரித்து வைத்திருந்தார்கள்.

கால் மேல் கால் போட்டால் என்ன? தரையில் வைத்தால் என்ன? மரியாதை மனதில் இருந்தால் போதாதா என்று விவாதித்தாலும் மற்றவர்கள் சொன்னதால் எம்.ஜி.ஆர். முன் கால் மேல் கால் போடாமல் அமர்ந்திருப்பேன். அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்த அடுத்த விநாடியே ஆட்டோமேடிக்காக கால்மேல் கால் போட்டுக் கொண்டு விடுவேன்.

ஒரு முறை அவர் வருவதைக் கவனிக்காமல் நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். பந்துலு சார் எம்.ஜி.ஆரிடம் 'அவ சின்னப்பெண். தெரியாம செய்துட்டா’ என்றாராம். எனக்கு இப்படிப் போலி மரியாதை தருவதில் நம்பிக்கை இல்லை.

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாகக் கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவள். சினிமா நடிகைகளுக்கு இயல்பான, அமைதியான குடும்ப வாழ்க்கை கிடையாது என்ற நிலை இருந்தது. அதை மாற்றி நடிகைகளாலும் எந்தப் பிரச்னையும் இன்றி குடும்பம் நடத்த முடியும் என்று நிரூபிக்க விரும்பினேன்.

சினிமாக்காரரைத் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பணம், புகழ் பார்த்து வந்தால் பலனில்லை. சுற்றி எவ்வளவோ பார்த்துவிட்டோம். அப்பா, அம்மா பார்த்து வைக்கிறவரை திருமணம் செய்துகொள்வோம் என்று நினைத்தேன்.

இதற்குள் தங்கைகளுக்குக் கல்யாணமாகிவிட்டது. '21, 22 வயசுல இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களே’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பந்துலு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நல்ல கணவன் கிடைக்க ராகவேந்திரரை வேண்டிக் கொள்ள சொன்னார்கள். நல்ல மனதோட ஒரு மனிதர் கணவராகக் கிடைத்தால் அவரோடு மந்திராலயம் வருவதாக வேண்டிக்கொண்டேன்.

நடிகையின் வாழ்வில்...

'மனபௌகித சொசெ’ என்ற படத்தில் நடிக்கும்போது நான் சீனியர். விஷ்ணுவர்தன் ஜூனியர். அவருக்கு என்னிடம் பயம். இருவரின் குடும்பமும் கன்சர்வேடிவ். அவர் முதலில் என் பெற்றோரிடம்தான் நன்றாகப் பழகி நல்ல பேர் எடுத்தார். என் பெற்றோர்தான் இவரைப் பற்றி என்னிடம் பேச்செடுத்தார்கள். என் வேண்டுதலின்படி என்னை நேசிக்கிற மனிதரே எனக்குக் கணவராக ஆனதும் கணவரோடு மந்திராலயம் போய் நன்றி சொன்னேன்.

இனிமையான, அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தினேன். நானே கடைக்குப் போய் பொருட்களை வாங்கி வருவேன். திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணவர்தான் 'உனக்குப் பிடித்தால் தொடர்ந்து நடி’ என்றார். எனக்குப் பிடித்த, பொருந்துகிற வேடங்கள் கிடைக்கும்போது நடிக்கிறேன்.

இனிய குடும்பம், திருப்தியான தொழில் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.''

-பால கல்பனா

படம்: சு.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு