Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!"

நானே கேள்வி... நானே பதில்!

"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!"

Published:Updated:
##~##

''மதுரை மகா சந்நிதானத்தின் செய்கைகளும் பேச்சுகளும் எப்படி?''

 ''அவர் 'சந்நிதானமா... சந்தானமா?’ என்று சந்தேகம் வருகிறது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- எஸ்.விவேக், அம்பத்தூர்.

''பச்சைப் பொய்... ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?''

''செல்போன் கஸ்டமர் கேரில், 'நீங்கதான் பாட்டை ஆக்டிவேட் பண்ணீங்க’னு சொல்வாங்க பாருங்க, அது மாதிரி ஒரு பச்சைப் பொய்யை நான் கேட்டதே இல்லை!''

- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

'' 'எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருப்பது இரட்டை இலைச் சின்னமே அல்ல’ என்று அரசு வக்கீல் சொல்லி இருக்கிறாரே...''

''உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதானா? அது இரட்டை இலைச் சின்னமே அல்ல. அது மட்டும் அல்ல... அது எம்.ஜி.ஆர். நினைவிடமே இல்லை. மேலும், அது மெரினா கடற்கரையே இல்லை. இதைச் சொன்னவர் வக்கீலும் இல்லை. இதை நான் எழுதவும் இல்லை, நீங்கள் படிக்கவும் இல்லை... அட போங்கப்பா!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

'' 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று சமீபத்தில் எதைப் பற்றி நினைத்தீர்கள்?''

''13-12-12 அன்று சென்னையில் ஆசிரியர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகள் வழங்கினார். தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் முழுப் பக்க அளவில் இதற்கான ஒரு விளம்பரம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் தரப்பட்டு இருந்தது. அதில் முதல்வர் செல்வி ஜெயலலிதா என்ற பெயருடன் 'புரட்சித் தலைவி’ என்ற அடைமொழியும் இருந்தது. அரசு சார்பில் அடைமொழி தருவது முறைதானா? சட்டம் இதற்கு அனுமதிக்கிறதா? எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணுமே!''

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

''சினிமாவும் அரசியலும் ஒன்றா?''

''ஒன்றுதான். கதாநாயகன், காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகர்கள் எல்லோரும் அரசியலிலும் இருக்கிறார்கள். என்ன ஒண்ணு, சினிமாவில் காமெடியனுக்குப் பஞ்சம். அரசியலில் கதாநாயகனுக்குப் பஞ்சம்!''

- தீ.அசோகன், சென்னை-19.

''சத்தீஸ்கர் மாநிலத்தைப் பற்றி ஏதாவது செய்தி உண்டா?''

''வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகம் உள்ள மாநிலம் சத்தீஸ்கர். ஏறத்தாழ 63 சதவிகித மக்கள் அங்கு வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். இந்தியாவின் ஏழை மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடம் அந்த மாநிலத்துக்குத்தான். இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் உருவான நவம்பர் மாதத்தில், மாநில அரசு விழா ஒன்றை நடத்தியது. விழாவில் நடிகை கரீனா கபூர் நடனமாடினார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் 1.40 கோடி ரூபாய். விழாவில் பங்கேற்ற மற்ற பாலிவுட் கலைஞர்களுக்கும் லட்சக்கணக்கில் பணம் வழங்கப்பட்டு இருக்கிறது. மக்களின் வரிப் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது பார்த்தீர்களா?''

- ஜெ.கண்ணன், சென்னை-101.

நானே கேள்வி... நானே பதில்!

''மிரட்டியும் பயமுறுத்தியும் பெறும் மதிப்பும் மரியாதையும் நிலைக்குமா?''

''நிலைக்காது... ஒருமுறை சார்லி சாப்ளின் வெளியே சென்று வீடு திரும்பும்போது அவருடைய கோட்டுப் பையில் யாருடைய தங்க கைக் கடிகாரமோ இருந்தது. அதை அவர் காவல் துறையிடம் ஒப்படைத்தார். அது பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டது. மறுநாள் சாப்ளினுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'ஐயா, நான் ஒரு திருடன். உங்கள் அபிமானி. நான்தான் அந்தத் திருட்டு வாட்ச்சை தங்கள் பையில் போட்டேன். என் பரிசாக அதை ஏற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது. சாப்ளின் அந்தக் கடிதத்தையும் காவல் துறையில் ஒப்படைத்தார். அதுவும் விளம்பரப்படுத்தப்பட்டது. மறுநாள் சாப்ளினுக்கு ஒரு பார்சலும் கடிதமும் வந்தது. அதில், 'ஐயா! அந்த தங்க வாட்ச் என்னிடம் இருந்து திருடப்பட்டதுதான். ஆனால், நான் அந்தத் திருடனைவிட தங்கள் மேல் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவே, அந்த வாட்ச்சையும் இத்துடன் அனுப்பியுள்ள தங்க செயினையும் என் பரிசாக ஏற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது. இப்படித் தாமாக போட்டி போட்டுக்கொண்டு வரும் மதிப்பும் மரியாதை யும்தான் என்றென்றும் நிலைக்கும்!''

- தாமு, தஞ்சாவூர்.

''தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு நடவடிக்கைகூட அழுத்தமாக எடுக்கப்படவில்லையா?''

''ஒட்டப்பிடாரம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தாலுகாவாக இருந்தது. ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவர் (வெள்ளைக்காரர்) தாலுகா அலுவலகத்துக்கு விஜயம் செய்ய... அங்கு தாசில்தார் இல்லை. ஆட்சியருக்குக் கடும் கோபம். மிகவும் தாமதமாக தாசில்தாரர் வர, 'ஏன் இவ்வளவு தாமதம்’ எனக் கேட்டதற்கு, 'பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன்’ என்றிருக்கிறார் தாசில்தார். 'இதே ஊரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்க வேண்டியதுதானே?’ என ஆட்சியர் கேட்க, 'யாரும் வீடு தர மாட்டேங்கிறாங்களே!’ என்றார் தாசில்தார்.

'ஏன்..?’ என்ற ஆட்சியரின் கேள்விக்கு, 'நான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன்’ என்பது தாசில்தாரின் பதில். ஆட்சியர் அந்த நொடியில் எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. 'தாசில்தாருக்கு வீடு தர மறுத்ததால் ஒட்டப்பிடாரத்துக்கு வழங்கப்பட்டுள்ள தாலுகா அந்தஸ்தை ரத்துசெய்து கோவில்பட்டிக்கு தாலுகா அந்தஸ்து வழங்கப்படுகிறது!’

ஆதாரம்: கி.ரா-வின் 'கோபல்லபுரத்து மக்கள்’.''

- சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை.

''வேதனையான கட்டத்தில் சிரித்த அனுபவம்?''

''பகலில் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் மின் விநியோகம் தந்துவிட்டு, 'மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்’ என மின்வாரியப் பொறியாளரின் பத்திரிகை அறிவிப்பைப் படித்ததும் வயிற்றெரிச்சலிலும் சிரிப்புதான் வருகிறது!''

- அ.அரவப்பா, திருச்சி-1.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism