Published:Updated:

தம்பிகளுக்குப் பிரியாவிடை!

க.நாகப்பன்

##~##

'உன்னால் முடியும் தம்பி’ என இரு தலைமுறை தமிழர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்த எம்.எஸ்.உதய மூர்த்தி மறைந்துவிட்டார்.  

 மயிலாடுதுறை அருகில் உள்ள விளநகர் கிராமத்தில் பிறந்த உதயமூர்த்தி, அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்றவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர், தொழிலதிபர் ஆன கதை சுவாரஸ்யமானது. சிகாகோவில் ஒரு கடையில் பீட்ஸா வாங்கிச் சாப்பிட்டார். அது மோசமாக இருந்தது. அடுத்த நாள் கடைக்குச் சென்று, உரிமையாளரைச் சந்தித்து, 'பீட்ஸா வியாபாரம் ஆகிறதா? விற்பனை டல் அடிக்குமே?’ என்று பக்குவமாகக் கேட்டு, அதற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருக்கிறார். உதயமூர்த்தியின் அணுகுமுறையும் வியாபார நுணுக்கமும் முதலாளியை ஈர்க்க... உதயமூர்த்தியையே தங்கள் நிறுவனத்தின் ஆலோசகராக நியமித்தார். கடையின் விளம்பரப் பலகை யில் தனது முதல் மாற்றத்தைத் துவங்கியவர், வியாபாரத்தைச் சூடு பிடிக்க வைத்தார். அதோடு நிற்காமல், தானே சொந்தமாக

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தம்பிகளுக்குப் பிரியாவிடை!

'பார்க்லே’ எனும் புதிய ரசாயன உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி, அமெரிக்காவின் சிறந்த தொழில் முனைவோர் விருது வென்றார்.

மக்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து முன்னேற வேண்டும் என்ற நோக்கில், 1988-ல் தமிழ்நாட்டில் 'மக்கள் சக்தி இயக்கம்’ ஆரம்பித்தார். இப்போது பிரபலமாக உள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றதில் இந்த இயக்கத்தின் பங்கு முக்கியமானது. நாடெங்கும் இன்றும் விவாதப்பொருளாக இருக்கும் நதிநீர் இணைப்பு எம்.எஸ்.உதயமூர்த்தியின் பெரும் கனவுகளில் ஒன்று. ''வடக்கில் உள்ள மகாநதியைக் கோதாவரியுடன் இணைப்பதாலும், கிருஷ்ணாவை வட பெண்ணாறு, பாலாறு முதலிய ஆறுகளுடன் இணைப்பதாலும், கேரளத்து உபரி நீரைத் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலமும் நாம் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க முடியும். ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் பல லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன நிலங்களாகும்'' என்றவர் நதிநீர் இணைப்புகுறித்து இறுதிவரையிலும் பேசிக்கொண்டு இருந்தார்.

'உயர் மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, 'எண்ணங்கள்’, 'நீதான் தம்பி முதலமைச்சர்’ போன்று ஏராளமான நூல்களை எழுதிய உதயமூர்த்தியின் எழுத்துகள் இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை விதைகள். இவரின் எழுத்துப் பணிக்குக் கௌரவம் சேர்க்கும் விதமாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் 'உன்னால் முடியும் தம்பி’ என்று படம் இயக்கினார்.

உடல் நலக்குறைவு காரணமாக 80-வது வயதில் உதயமூர்த்தி இறந்துவிட்டார். ஆனால், அவர் எழுதிய புத்தகங்களில் என்றென்றைக்கும் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருப்பார்!