Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:
##~##

''எளிமையாகப் பிரியாணி செய்வது எப்படி?''  

''எளிய பிரியாணி எப்படியோ... 'எலிய’ பிரியாணி செய்வதை சர்வோதயா எக்ஸ்பிரஸ் ரயில்வே உணவு தயாரிப்போர் சொல்லித்தருவார்கள். வைஷ்ணவி தேவி யாத்திரை சென்று திரும்பும்போது, நீலேஷ்பட்டீல் என்ற ஆசிரியர் ரயில்வே பான்ட்ரியில் மூன்று வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். வந்த பிரியாணியைக் கிண்டியபோது நீலேஷின் மகன் மோனிக் கையில் கிட்டியது பெரிய எலி. அந்த ரயிலில் மேலும் 150 பேரும் பிரியாணி கேட்டிருந்தார்களாம். ரயிலில் பிறர் தரும் பிஸ்கட்டைச் சாப்பிடாதீர்கள் என்று கூறுவது போல், இனி ரயில்வே பான்ட்ரி யிலும் ஏதும் வாங்கக் கூடாது போலும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சிதம்பரக்குமாரசாமி, சென்னை-34.

''அந்தத் தனியார் சேனலில் 'ஜெயலலிதா வாரம்’ எதிர்பார்க்கலாமா?''  

நானே கேள்வி... நானே பதில்!

''அவர்களிடம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதற்கான சாதனை விளக்கப் பேட்டி, புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றத் தடை விலக்கப் பூரிப்பு, இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதால் ஆசியப் போட்டிகளை தமிழக அரசு நடத்தாது என்ற பகீர் அறிவிப்பு, வைகோவுடன் குபீர் சந்திப்பு, மலிவு விலை உணவகத் திறப்பு எனக் கடந்த வாரம் முழுக்கவே 'ஜெயலலிதா வா£££££ரம்’தானே!''

- வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை-2

''ராகுல் காந்திக்குக் கிடைத்துவிட்டது. ஸ்டாலினுக்குக் கிடைக்கவில்லையே ஏன்?''

''ராகுல் காந்திக்கு அண்ணன் இல்லையே!''

- எஸ்.பாலசுப்பிரமணியன், சென்னை-90.

 ''40 தொகுதிகளையும் கைப்பற்றி அம்மாவைப் பிரதமராக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் ஆர்வமாக இருப்பது ஏன்?''

''அவர்களில் யாராவது ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்குமே... அதனால்தான்!''

- ஆ.சங்கரன், சங்கரன்கோவில்.

''ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் நன்மைகள் பல இருந்தாலும் அவற்றின் மூலம் வரும் சிக்கல்களும் அதிகமாகி வருகின்றனவே?''

''ஆம்... ஒரு எல்லைக்குள் இருக்கும் வரைதான் 'சமூக’ வலைதளம், 'சுமுக’ வலைதளமாக இருக்கும்!''

- எஸ்.விவேக், அம்பத்தூர்.

''காதலைவிட நட்பு பெரிதா?''

''நிதர்சனம் புரியாமல் பேசாதீர்கள்... காதலியின் செல்போனுக்கு 20 ரூபாய்க்கு டாப்அப் செய்தாலே, காதல் ரீசார்ஜ் ஆகிவிடும். ஆனால், ஒரு பீர் கிட்டத்தட்ட 100 ரூபாய் ஆகிறது. இந்தக் காலத்தில் நட்பு எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா?''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

'' 'இசைக்கு உருகார் எதற்கும் உருகார்’ என்பது உண்மையா?''

''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... சமீபத்திய சம்பவம் ஒன்று இதை உண்மை என்று உணர்த்தி உள்ளது. இந்தியாவில் மென்பொருள் துறை யில் மூன்றாம் இடம் வகிப்பது 'விப்ரோ’. இதன் வருட லாபம் 1,716 கோடி ரூபாய். இதன் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இந்த நிறுவனம் சொத்து வரியாக 19.28 கோடி ரூபாயை பெங்களூர் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வரித் தொகையை 'விப்ரோ’ மாநகராட்சிக்குச் செலுத்தவே இல்லை. பல நோட்டீஸ்கள் அனுப்பியும் 'விப்ரோ’ செவிசாய்க்கவில்லை. யோசித்த மாநகராட்சி, 'டிரம்’ வாசிக்கும் பலரை 'விப்ரோ’ தலைமையகம் முன்பு நிறுத்தி தொடர்ந்து 'இசைக் கச்சேரி(!)’ நடத்தச் செய்தது. சங்கடப்பட்ட விப்ரோ உடனடியாக முதல் தவணையாக ஐந்து கோடியைச் செலுத்தியது. மீதியை ஒரு வாரத்தில் தருவதாக உறுதிமொழி தந்தது... எவ்வளவு பெரிய விஷயம் 'இசை’ யால் தீர்ந்துவிட்டதே!''

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

''டிசம்பர் 2013-ல் தமிழகத்தில் மின்தடை முழுமையாக நீங்கிவிடும்னு சொல்றாங்களே?''

''அட போங்கப்பா... டிசம்பர் 2012-ல்கூடத்தான் உலகம் அழியப்போகுதுனு சொன்னாங்க. நடந்துச்சா?''

- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

''இந்திய சமூகக் கட்டமைப்பில், தாங்கள் கொண்டாடப்படாத நிதர்சன உண்மையை எழுத்தாளர்கள் உணர்ந்து இருப்பார்களா?''

''அது ஒரு மதிய நேரம். அந்தப் பிரபல எழுத்தாளர் தனது வீட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டுஇருந்தார். வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே, நிமிர்ந்து பார்த்தார். மகன் பள்ளியில் இருந்து வீடு திரும்பியிருந்தான். 'என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?’ என்று கேட்டார் எழுத்தாளர்.

மகன் சொன்னான், 'யாரோ ஒரு அரசியல் தலைவர் இறந்துட்டாராம். அதனால லீவு விட்டுட்டாங்க.’

சிறிது நேரம் கழித்து அவன் அப்பாவிடம் கேட்டான்... 'நீங்களும் மக்களுக்காகத்தானே எழுதுறீங்க. நீங்க செத்தாலும் ஸ்கூலுக்கு லீவு விடுவாங்களா?’ எழுத்தாளர் சொன்னார்... 'நான் செத்தால் பள்ளிக்கு லீவு விடுறாங்களோ இல்லையோ... உனக்கு நிச்சயம் லீவு கிடைக்கும்!'' அந்த அப்பா சாகித்ய அகாடமி, பத்மபூஷண் உள்ளிட்ட விருது களைப் பெற்ற, புகழ் வாய்ந்த மராட்டிய எழுத் தாளர் வி.ச.காண்டேகர். இந்த நிதர்சனக் கசப்பை உணர்ந்திருப்பதாலேயே பல எழுத்தாளர்கள் தமது அந்திமக் காலத்தில் யோகி மனநிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்!''

- ஹெச்.பாஷா, சென்னை.

''சிந்தனை தெளிவாக இருக்க மனம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே, மனம் எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்க வேண்டும்?''

''அறிஞர் மார்க்ஸ் அரேலியஸ் இதற்கான விளக் கத்தைக் கொடுத்திருக்கிறாரே, 'திடீரென்று உங்கள் முன் ஒருவர் வந்து நின்று, 'நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்... அப்படியே சொல்லுங்கள்’ என்று கேட்டால், உடனே தயங்காமல் உள்ளது உள்ள படியே... 'இதைத்தான் இப்போது நினைத்துக்கொண்டு இருக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு மனம் இருக்க வேண்டும். அதுதான் சுத்தமான மனம்!’

என்ன, உங்கள் மனம் சுத்தமாக இருக்கிறதா?''  

- பொன்சரவண குரு, ஆர்.ஜே.பாளையம்.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space)  விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!