Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

அன்று ஒரு டீ... இன்று 4 சி!

நானே கேள்வி... நானே பதில்!

அன்று ஒரு டீ... இன்று 4 சி!

Published:Updated:
##~##

''உட்கட்சி எதிரிகளைப் பழி தீர்க்கும் கொலைகளைச் செய்யும் கூலிப் படைக்கு நான்கு கோடி ரூபாய் வரைக்கும் கொடுக்கப்படுகிறதாமே?''

 ''வேதனை... வெட்கம். வேறென்ன சொல்வது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. தொடங்கப்பட்ட 1960-களில் அறிஞர் அண்ணா தனது சகாக்களுடன் அமர்ந்து பேசுகையில், சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பவர் வருகிறார். அண்ணா எல்லோருக்கும் டீ கொடுக்கச் சொல்கிறார். காசு அண்ணா கொடுப்பார் என மற்றவர்களும், மற்றவர்கள் கொடுப்பார்கள் என அண்ணாவும் எண்ணியபடி டீ குடித்து முடிக்க, கடைசியில் யாரிடமும் காசு இல்லை. ஜார்ஜ் டவுன் செம்புதாஸ் தெருவில் ஒரு மாடி அறையில் தங்கி இருந்த கே.ஏ.மதியழகன் தன் அறைக்குச் சென்று நாலணா(!) எடுத்துவந்து கொடுத்தார். ஆனால், இன்றோ சாதாரண வட்டம்கூட இன்னோவா காரில்தான் வந்து இறங்குகிறது!''

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

நானே கேள்வி... நானே பதில்!

'' 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுவரை யாரும் செய்யாததைச் செய்வோம்’ என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?''

''ஆனால், அதற்கு தமிழக வாக்காளர்களும், 'இதுவரை செய்யாததை’ச் செய்ய வேண்டுமே?!''

- எஸ்.விவேக், சென்னை-5.

''அ.தி.மு.க. தலைமை, தி.மு.க. தலைமை ஒப்பிடுக?''

''அ.தி.மு.க. தலைமைபற்றி புகழ்ந்து பேசப் பேச, பதவி உயர்வு வரும். தி.மு.க-வுல தலைவர் யாரென்று பேசினாலே, அடிதடி, செருப்பு வீச்சுதான் மிஞ்சும்!''

- சுஜாதா, சென்னை-61.

''மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுவதைக் கேட்டுச் சிரிக்காதவர் யாரேனும் இருக்கிறார்களா?''

''ஏன், நம் மன்மோகன் சிங் இல்லை?!''

- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

''குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது எதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்?''

''பெரியார் ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டிய கதையைக் கேளுங்கள்... ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு ஒரு குழந்தைக்கு 'லண்டன்’ என்று பெரியார் பெயர் வைக்க... அதைக் கேட்ட பெற்றோர் தயங்கியவாறே பெரியாரிடம் பெயரை மாற்றிச் சூட்டக் கோரினர். பெரியாரோ, 'ஒரு ரூபாய்க்கு ஒரு பெயர்தான் வைக்க முடியும் போ’ என்று கூறிவிட்டார். மேலும், 'பழநி, திருப்பதி, சிதம்பரம் என்ற பெயரையெல்லாம்விட, லண்டன் இன்னும் காஸ்ட்லிதான். வேறு பெயர் வைத்திருந்தால், உன் குழந்தை பெயரைக் கேட்ட மாத்திரம் சாதி, சமயம் தெரிய வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் கடந்த பெயர் லண்டன்!’ என்று கூறினாராம். உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்ததா?''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

'' 'ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு’ என்ற பழமொழிக்கு யாரை உதாரணமாகக் கூறலாம்?''

''நிச்சயமாக தமிழக வாக்காளர்களைக் கூறலாம். ஒருவர் மீது ஆத்திரப்பட்டு, இன்னொருவரை ஜெயிக்கவைத்த பின்பு, 'ஏண்டா இவரை ஜெயிக்கவைத்தோம்!’ என்று ஆத்திரப்படுகிறோமே. எது எப்படியோ நம் ஆத்திரத்துக்கு மட்டும் விடிவுக்காலமே இல்லைபோலும்!''

- பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

''நாம் சற்றும் எதிர்பாராத மனிதர்களிடம் இருந்து சில சமயங்களில் பெரிய பாடம் கற்றுக்கொள்கிறோமே?''

''ஆம்... அவை அருமையான தருணங்கள்! நாங்கள் ஒருமுறை புனேயில் உள்ள ஒரு பாரம்பரியம் கொண்ட, சிறப்புமிக்க கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம். என் தோழி அந்தக் கோட்டையின் பிரமாண்ட அழகை வியந்தபடியே, அங்கு வந்து சென்றதன் நினைவாக இருக்கட்டும் என, கோட்டைச் சுவரில் இருந்து சற்றே பெயர்ந்திருந்த ஒரு கல்லை எடுத்து கைப்பையில் வைத்தாள். உடனே,  அங்கே மரத்தின் கீழ் அமர்ந்திருந்த பிச்சைக்காரர் ஒருவர், 'அம்மா, இந்தக் கோட்டையை நீ நேசித்தால், அதிலிருந்து கல்லை எடுக்கக் கூடாது. மாறாக, அதைப் பலப்படுத்த வேண்டும்!’ என்றார். அதுவரையிலான பிச்சை கேட்கும் தொனி மறைந்து, உறுதியும் கம்பீரமுமாக ஒலித்த அவரது குரலைக் கேட்டு அதிர்ந்துவிட்டோம். உடனே, என் தோழி என்ன செய்திருப்பாள் என உங்களால் ஊகிக்க முடிகிறதுதானே?''

- கே.சரஸ்வதி, ஈரோடு-12.

''ஜெயலலிதா பிடிவாதக்காரரா?''

''எல்லா விஷயத்திலும் அப்படிச் சொல்ல முடியுமா என்ன? அப்படி இருந்திருந்தால், தமிழக ஆளுநர் ரோசய்யாவின் மஞ்சள் துண்டு, பச்சை நிறத் துண்டாக அல்லவா மாறியிருக்கும்!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

'' 'இலங்கைக்கு வந்து பார்த்தால்தான் தமிழர்களுக்கு நான் செய்துகொடுத்துள்ள வசதிகள் தெரியும்’ என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறாரே?''

''உண்மைதான்! போய்ப் பார்த்தால்தான் தெரியும்... தமிழர்களுக்கு அவர் வெட்டிக்கொடுத்த 'குழி’ படுக்கையும், போர்த்தக் கொடுத்த மண் போர்வையும்!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''மிக 'மலிவான’ செய்தி கேட்டு அண்மையில் நொந்துபோனீர்களா?''

''திஹார் ஜெயிலில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டவருக்கு, விதிகளின்படி ஐந்து ரூபாய் கூலி தரப்பட்டதாம். இந்நாட்டில் மரண தண்டனையும், அதற்கான கூலியும் எத்தனை மலிவாக இருக்கிறது பார்த்தீர்களா?''

-ஆர்.கே.சுந்தரம், சென்னை-26.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space)  விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism