Published:Updated:

கை கொடுக்குமா ஐ.நா?

டி.அருள் எழிலன்

கை கொடுக்குமா ஐ.நா?

டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

லகெங்கும் அதிகாரத்தால் பாதிக்கப்படும், சித்ரவதை செய்யப்படும், சொந்த பந்தங்களை இழக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 17 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் அந்தக் கண்ணாடி மாளிகை, பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் இறங்கியிருக்கிறதா? குரல் கொடுத்திருக்கிறதா? அதிகார சக்திகளைத் தண்டித்திருக்கிறதா?

முதலில் ஐ.நா. உருவான விதத்தைப் பார்த்துவிடுவோம். பிரிட்டனும், ஜெர்மனியும், பிரான்ஸும் புதிதாக வளர்ந்து வந்த அமெரிக்காவும் 'நாடு பிடிக்கும் போட்டி’யில் களம் இறங்கின. வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளை அபகரித்துக்கொண்டன. பிரிட்டன் இந்த உலகின் பெரும்பாலான தேசங்களைத் தன் காலனிப் பகுதியாக ஆக்கிக்கொண்டது. இவர்களின் நாடு பிடிக்கும் ஆசைதான் முதல் உலகப் போரை உருவாக்கியது. பல லட்சம் மக்களின் மரணத்துக்குப் பின், ஜெர்மானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. ஜெர்மனியின் காலனி நாடுகளை பிரிட்டன் ஆக்கிரமித்துக்கொண்டது. வென்றவர்கள் ஒன்றுசேர்ந்து 'தேசங்களின் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை (League of Nations) 1920-ல் ஜெனிவாவில் உருவாக்கினார்கள். பத்தே வருடங்களில் தேசங்களின் கூட்டமைப்பு’ எங்களை அவமானப்படுத்துகிறது என்று ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிலிருந்து வெளியேறின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்... ஆனால், நசுக்கப்படுகிறோம்!''என்று நாஜி ஜெர்மனியைக் கட்டியெழுப்பிய ஹிட்லர், போலந்து மீது படைஎடுக்க இரண்டாம் உலகப் போர் துவங்கியது. போர் ஆரம்பித்த வேகத்தில் 'தேசங்களின் கூட்டமைப்பு’ உடைந்து சிதறியது. 1945 - மே மாதம் ஜெர்மனி சரணடைந்ததும், ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு பேரழிவு ஏற்பட்டதும், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர், வென்றவர்கள்... தோற்றவர்கள் இரு தரப்புக் குமே பொருளாதார அவலங்களைத் தோற்றுவித்தது.

கை கொடுக்குமா ஐ.நா?

'உலகம் இன்னொரு போரைத் தாங்காது!’ என்பதைக் கடைசியாக உணர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு என்ற ஒரு புதிய அமைப் பைத் தோற்றுவித்தார்கள். ஆனால், இதிலும் வெற்றிபெற்றவர்களின் கைகள்தான் ஓங்கியிருந்தன. நீதியின் அடிப்படையில் குற்றங்களை வரையறுத்த ஐ.நா., அதை ஒழிப்பதற்கான சட்டங்களை இயற்றியது. இனப்படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுத்தது. அதை விசாரிப்பதற்கான சர்வதேச நீதிமன்றங்களை உருவாக்கியது. அகதிகளுக்கான ஆவணங்களை உருவாக்கியது. உண்மையில் ஐ.நா. உருவானபோது, அது மனிதகுலத்துக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. இரண்டு உலகப் போர்களிலும் கொல்லப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் இருந்து இந்தச் சட்டங்களும் தண்டனை முறைகளும் உருவாக்கப்பட்டன.

ஐ.நா. தோன்றிய பின் இந்த உலகம் மூன்றாவது உலகப் போர் ஒன்றைச் சந்திக்கவில்லைதான். ஆனால், உலகெங்கிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனித்தனியே போர்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இனத்தின், மொழியின், மதத்தின் பெயரால் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். இந்தப் போர்களை உள்நாட்டு அளவிலேயே முடித்துவைத்து உலக அளவில் பரவாமல் பார்த்துக்கொள்வதில் ஐ.நா-வின் பங்கு இருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்-கொள்ளலாம். 1994-ல் ருவாண்டாவில் எட்டு லட்சம் சிறுபான்மை டுட்சிக்கள் அரசு ஆதரவு டன் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக் குப் பொறுப்பாளியான ராணுவத் தளபதி பிஸிமுங்கைக் கைதுசெய்த ஐ.நா., தான்சானியா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து, 30 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்தது. இந்தத் தீர்ப்பை வழங்கியவர் சிறீலங்காவின் நீதிபதியான அசோக் டி.சில்வா.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சூடானில் உள்ள 10  லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை பழங்குடி மக்கள் அரசு ஆதரவுக் கூலிப் படையால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் மீது போர்க் குற்ற வழக்கு தொடர்ந்து, 2008-ல் பஷீரைக் குற்றவாளி என அறிவித்து அவரைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். 'ஐ.நா-வில் உறுப்பு நாடுகளாக இருக்கும் எந்த நாடும் பஷீரைக் கைதுசெய்யலாம்’ என்னும் நிலையில், ஐ.நா -வில் வீட்டோ பவரில் இருக்கும் சீனா பஷீரைக் காப்பாற்றிவருகிறது. காரணம், சூடானின் பெருமளவு எண்ணெய் வயல்களால் ஆதாயம் அடைவது சீனா.

1995-ம் ஆண்டு ஜூலையில் ஐ.நா. வேடிக்கை பார்க்க... செர்பிய ராணுவம் போஸ்னியாவை ஆக்கிரமித்தது. ஸ்ரெப்ரெனிகா என்னும் இடத்தில் 8,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா. இந்தக் கொலைபற்றி அப்போது வாயே திறக்கவில்லை. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நடந்த துயரங்களை உலகம் கண்ணீர் வழிய வேடிக்கை பார்த்தது. இந்தப் படுகொலையை இனப்படு கொலை என அறிவித்தது, ஹேக்கில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். போஸ்னியப் படுகொலையின் காரணகர்த்தா ராட்கே மிலா டிக் கைதுசெய்யப்பட்டு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறார். 'அரபு வசந்தம்’ என்று அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி, சிரியாவில் பற்றியபோது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா. சிரியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தபோது, ரஷ்யாவும் சீனாவும் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிரியாவைக் காப்பாற்றியது.  

வளைகுடாப் போரை ஐ.நா-வையும், அப்போதைய ஐ.நா. செயலரான கோபி அன்னானையும் மீறி அமெரிக்கா முன்னெடுத் தது. அப்போது ஐ.நா-வால் வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 2001 - செப்டம்பரில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானில் இன்று வரை அமெரிக்காவால் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். எண்ணைய் வளம் மிக்க அரபு நாடுகளை எண்ணெய் வளமே இல்லாத இஸ்ரேலைக் கொண்டு மிரட்டிவருகிறது அமெரிக்கா. உலகம் எங்கும் அமெரிக்கா தலையிடாத நாடோ, செய்யாத மனித உரிமை மீறல் களோ கிடையாது.  

கை கொடுக்குமா ஐ.நா?

இது எல்லாம் தெரிந்தும் ஐ.நா. வாயே திறப்பது இல்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் என வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவு இருந்தால் போதும். எந்த நாட்டிலும், எந்தத் தவறையும் செய்துவிடலாம். இதுதான் ஐ.நா-வின் மனித  உரிமை அறமாக இருக்கிறது.

சரி... இலங்கையில் சர்வதேச நாடுகளின் லாபி என்ன? நேரடியாக இலங்கையில் எந்த ஆதாயமும் இல்லாத அமெரிக்கா, புவியியல்ரீதியாக சீனாவை எதிர்கொள்ள இந்தியாவைப் பயன்படுத்துகிறது. புவியியல்ரீதியாகத் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த இலங்கை... அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் என எல்லா நாடுகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.

இத்தனை லாபி நடப்பதால், இலங்கைக் கொலைகள் தொடர்பாக ஐ.நா. இதுவரை நேரடியாக வாய் திறக்கவில்லை. அது மனித உரிமை அமர்வுகளில் மட்டும் பேசப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை ஈழத் தமிழர் கொலைகள்தான். ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தைத் தாண்டி, ஐ.நா. மன்றத்தில் ஈழத் தமிழர் படுகொலை பேசப் பட்டால், ஒருவேளை ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம். இந்தியா, சீனா, பாகிஸ்தான் என இலங்கைக்குப் பல நாடுகளின் ஆதரவு இருப்பதால், ராஜபக்ஷேவின் வெள்ளைச் சட்டையில் ஒரு கரும்புள்ளிகூட இப்போதைக்கு விழ வாய்ப்பு இல்லை. இது இலங்கைக்கும் தெரியும். ஐ.நா-வுக்கும் புரியும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism