Published:Updated:

களத்தில் மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

களத்தில் மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
##~##

லங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கொந்தளிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை நள்ளிரவில் போலீஸாரை ஏவிக் கைது செய்கிறது அரசு. 'அம்மா’வின் அரசியல் அப்படி. போலீஸ் அதிகாரிகளோ, ''இதில் அரசியல் எதுவும் இல்லை. மாணவர்களின் உயிரைக் காக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது!'' என்று சமாளிஃபிகேஷன் தட்டுகிறார்கள்.

 கடந்த 8-ம் தேதி லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 'திருக்குறள்’ திலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டு மாணவர்கள், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு செங்கொடித் திடலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். அனைவருமே 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தி.மு.க-வின் பொது வேலை நிறுத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய ஆளும் கட்சியின் ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று’, 'மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் செய்யும் சதி’ என்பன போன்ற ஏச்சுகளும் பேச்சுகளும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சுழற்றிச் சுழற்றி அடிக்க... ''தங்களது அறப் போராட்டத்துக்கு அரசியல் தீனி போட்டுக் கொச்சைப்படுத்த வேண்டாம்!'' என்பதே மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது.

''முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தைச் சில அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் திசை திருப்பி கேவலப்படுத்தினார்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் போராட்டத்தையும் அப்படித் திசை திருப்பிவிட வேண்டாம்'' என்கிறார் போராட்டக் குழுவின் உறுப்பினர் ஒருவர்.

களத்தில் மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்!

உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளான ஞாயிறு பின்னிரவு 2.15 மணிக்கு சுமார் 400 ஆயுதப் படை போலீஸார் திபுதிபுவெனத் திடலுக்குள் புகுந்தார்கள். உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 124 பேரை அதிரடியாக அப்புறப்படுத்திக் கைதுசெய்தார்கள். உண்ணாவிரதம் இருந்த எட்டுப் பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவரான திலீபனிடம் பேசினேன். ''ஈழத்தில் திட்டமிட்டு லட்சக்கணக்கான தமிழ் மக்களைச் சிங்கள அரசு கொன்று குவித்தது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொடூரம். போரின் பெயரில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அந்த அரசின் மீது சர்வதேச - சுதந்திரப் பொது விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எவையும் பங்கு பெறக் கூடாது. தனி ஈழம் வேண்டுமா... வேண்டாமா? என்பதுகுறித்து முடிவு செய்யும் உரிமை உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. ஈழத்தில் துயரக் கடலில் மூழ்கி இருக்கும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மட்டுமே அந்த முடிவை எடுக்கத் தகுதியானவர்கள். அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டுமே இதற்குச் சரியான தீர்வாக அமையும். சிங்கள இனவெறி அரசின் துணைத் தூதரகத்தைத் தமிழ் மண்ணில் இருந்து அகற்ற வேண்டும். மகாராஷ்டிரா, கேரளாவில் அந்த மாநில மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால், உடனடியாக மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண்கிறது. இரண்டு பேரைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டின் வீரர்களை விடாமல் துரத்தி, இரண்டாம் முறையாகக் கைதுசெய்திருக்கிறது. ஆனால், தினமும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கை ராணுவத்தைக் கண்டிக்கக்கூட இந்திய அரசுக்கு மனம் வரவில்லை. தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு சார்பில் வெளியுறவுத் துறை உருவாக்கப்பட வேண்டும்.

நாங்கள் எந்த அமைப்பின், கட்சியின் சார்பு இல்லாமல் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். சிலர் இறுதிப் போர் நடந்தபோது எங்கே சென்றீர்கள்? என்று கேட்கிறார்கள். அன்று நாங்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள். அன்றைய நாள் எங்களுக்கு உணர்வு மட்டுமே இருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பு இல்லை. அதனால், அப்போது போராட முடியவில்லை. இப்போது எங்களால் முடியும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. மேற்கண்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்''  என்கிறார் உறுதியான குரலில்.

களத்தில் மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்!

இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று மாலை லயோலோ கல்லூரியின் பேராசிரியர்கள் சிலர் மருத்துவமனையில் இருந்த மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். கல்லூரி நிர்வாகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சொன்ன மாணவர்கள், தங்களது அறப்போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்றார்கள். லயோலா கல்லூரியின் மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாலும்கூட, இவர்கள் தொடங்கி வைத்த போராட்ட நெருப்பு தமிழகம் எங்கும் பற்றிக்கொண்டு இருக்கிறது.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, திருச்சி தூய வளனார் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மாணவர் கள் சாலை மறியல், கல்லூரி உள்ளிருப்பு, வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கள். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். மாணவர்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism