Published:Updated:

சி.ஏ.ஜி!

இந்தியாவின் இரும்பு அமைப்புஎம்.பரக்கத் அலி, எஸ்.கலீல்ராஜா, ஓவியம்: கண்ணா

சி.ஏ.ஜி!

இந்தியாவின் இரும்பு அமைப்புஎம்.பரக்கத் அலி, எஸ்.கலீல்ராஜா, ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

"நாங்கள் சியர் கேர்ள்ஸ்களைப் போல உங்களுக்குப் பொழுதுபோக்க இங்கு வரவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு துறையும் நேர்மையாகச் செயல்படுவதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறோம்!'' - அக்கவுன்ட்ஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கில் வினோத் ராய் கோபம் கொப்பளிக்கச் சொன்ன வார்த்தைகள் இவை.

 யார் இந்த வினோத் ராய்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெகுஜனங்களுக்கு அறிமுகம் ஆகியிராத இந்தியாவின் பவர்ஃபுல் மனிதர்களில் ஒருவர் வினோத் ராய். இந்தியாவின் கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் தலைவர்.  

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், காமன் வெல்த் போட்டி முறைகேடுகள், இப்போது வெடித்திருக்கும் 52 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடித் திட்ட முறைகேடு என மத்திய அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டு இருப்பவர்.

சி.ஏ.ஜி!

அரசு செயல்படுத்தும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள திட்டங்களின் கணக்குவழக்கு கள் சரியாக இருக்கின்றனவா என்பதைத் தணிக்கை செய்வ தற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் Comptroller and Auditor General of India. சுருக்கமாக... சி.ஏ.ஜி. இதன்  கட்டுப்பாட்டுக்குக் கீழே வருவதுதான் இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறை. இந்தத் துறை அரசு அதிகாரத்தின் கீழ் இருந் தால் 'ஆமாம் சாமி’ போட்டுவிடுவார்கள் என்பதால், இதை சுயாட்சிகொண்ட அமைப்பாக அமைத்திருக்கிறார்கள். இந்த அமைப்புதான் இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் மொத்தக் கணக்குவழக்குகளையும் தணிக்கை செய்கிறது. அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் இதன் கழுகுப் பார்வையின் கீழ்வரும். சுருக்கமாகச் சொன்னால், சி.ஏ.ஜி-யின் கீழ் வேலை பார்க்கும் 58 ஆயிரம் பணியாளர்கள்தான் இந்தியாவின் ஆக்டிவ் கேஷியர்கள்.  

எந்த ஒரு மகா, மெகா டெண்டரின் மொத்த விவரங் களும் சி.ஏ.ஜி-யின் கைகளுக்குப் போகும். அதன் வரவு- செலவுக் கணக்குகளை ஒரு புள்ளி விடாமல் சரிபார்ப்பார் கள். அந்த டெண்டர் நேர்மை யாக விடப்பட்டு இருக்கிறதா? இதனால் அரசுக்கு லாபமா, நஷ்டமா என்றெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, தங்கள் முடிவை நாடாளுமன்றத் திலும் மாநில சட்டமன்றங் களிலும் தாக்கல் செய்வார் கள். அதில் அரசைக் குற்றம் சொல்லும் பாதகமானவிஷயங் கள் இல்லை என்றால், பிரச்னை இல்லை. ஆனால், இப்போது நிதர்சனம் அப்படி இல்லை.

'' 'முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்று செல் போன் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதைப் பொது வெளியில் ஏலம் விட்டி ருந்தால், அரசுக்குப் பெருமளவு வருமானம் வந்திருக்கும். அந்த வகையில் அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் வருமான இழப்பு 1 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய்!'' என்று வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கைதான், மன்மோகன் சிங் அரசின் மீது வெடித்த முதல் அணுகுண்டு. அதன் தொடர்ச்சியாக அமளி துமளிப்பட்டது நாடாளுமன்றம். 'அத்தனை லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்?’ என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார் கள் மக்கள். அதன் தொடர் நிகழ்வுகள்தான் ஆ.ராசா, கனி மொழி கைது வரை நீண்டது.

அடுத்தடுத்து காமன் வெல்த் போட்டிகளுக்கான நிர்வாக முறைகேடுகள், நிலக்கரிச் சுரங்க உரிமைகளுக்கானமுறை கேடு, ஹெலிகாப்டர் பேர ஊழல் என்று அஸ்திரங்களை வீசியது சி.ஏ.ஜி. இப்படி சி.ஏ.ஜி. கொடுக்கும் ஒவ்வோர் அறிக்கைக்குப் பின்னரும் சி.பி.ஐ. வந்து நின்றால், காங்கிரஸ் அரசுதான் என்ன செய்யும்?

சுனாமியே வந்தாலும் சும்மா இருக்கும் பிரதமர், இந்த விவகாரத்தில் வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், அவருக்குப் பதிலாகக் கொந்தளித்தார் 'வெற்றிகரமான 15 நாள்’ அமைச்சர் நாராயண சாமி. ''சி.ஏ.ஜி-க்கு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட அதிகாரம் இல்லை. அவர்கள் அடிக்கடி தங்கள் அதிகார வரம்பை மீறிக் கேள்வி கேட்கிறார்கள்'' என்று அவர் கொந்தளிக்க, ''சி.ஏ.ஜி. தன் அதிகார எல்லையைத் தாண்டுவதாக நான் நினைக்கவில்லை. எங்கே இழப்பு ஏற்படுகிறது என்று கண்டுபிடிப்பது சி.ஏ.ஜி-யின் தார்மீகக் கடமை. அதை மட்டுமே செய்கிறோம். இழப்பு ஏற்படுத்து கிற கொள்கையை வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லையே?'' என்று செம நக்கலாகப் பதில் சொன்னார் வினோத் ராய்.  

சி.ஏ.ஜி!

வழக்கமாகத் தங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகளைத் தூக்கி அடிப்பதுதானே அரசியல்வாதியின் லட்சணம். பிறகு ஏன், காங்கிரஸ் அரசு வினோத் ராயைக் கண்டுகொள்ளவில்லை? ஏனென்றால், சி.ஏ.ஜி-க்கான சட்ட அதிகாரம் அப்படி. கிட்டத்தட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உண்டான அதிகாரம்கொண்டது சி.ஏ.ஜி. பதவி. குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் சி.ஏ.ஜி., குறைந்தது ஆறு வருடங்கள் அல்லது 65 வயதாகும் வரை பதவியில் நீடிக்கலாம். அதுவரை அவரை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அதை முடிவு செய்யவேண்டிய அதிகாரம் உச்ச நீதிமன்றம் வசம் மட்டுமே!  

''மத்தியிலும் மாநிலங்களிலும் சி.ஏ.ஜி. ஆண்டுக்கணக்காக ஆயிரக்கணக்கில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கிறது. பல மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீது குறைகளைச் சொல்கிறது. 'சி.ஏ.ஜி’-யின் அறிக்கைதான் இறுதியானது என்றால், எந்த ஆட்சியாளரும் பதவியில் தொடர முடியாது!'' - இது மத்திய அரசின் வெளிப்படையான கோபப் புலம்பல்.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி உதிக்கலாம்... சுதந்திரம் அடைந்த இத்தனை வருடங்களில் இந்த சி.ஏ.ஜி. என்ற ஒன்றையே கேள்விப்பட்டதில்லையே? காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டும் இப்போது இத்தனை சீற்றம் காட்டுவதற்குக் காரணம் என்ன? பதில் மிகவும் சிம்பிள்... இதற்கு முன்னரும் சி.ஏ.ஜி. அறிக்கைகள் அளித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது மீடியா வெளிச்சம் இந்த அளவுக்கு இல்லை. ஊழல் தொகையும் நூற்றிச் சொச்சக் கோடிகளைத் தாண்டவில்லை(!). பரிணாம வளர்ச்சியில் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழலான 2ஜி வெளிவரும்போது, சி.ஏ.ஜி. மீதும் கவனம் பதிந்தது.

இப்போதும் சி.ஏ.ஜி. துறுதுறுக்கக் காரணம் 2008-ல் வினோத் ராய் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முழு வீச்சில் தணிக்கை மதிப்பீடுகளின் முறையை மேம்படுத்தினார். லட்சம் கோடிகளைத் தொடும் ஊழல்களின் முறைகேட்டு முறைகளைத் துல்லியமாக வெளிக்கொண்டு வந்தார். ஆனால், இங்கே ஒரு சோகமான செய்தி... வரும் மே மாதத்தோடு வினோத் ராயின் பதவிக் காலம் முடிவடைகிறது.

இனி, சி.பி.ஐ-யைச் சமாளித்துவிடலாம். ஆனால், சி.ஏ.ஜி-யைச் சமாளிக்க முடியாது. ஏனெனில், சி.ஏ.ஜி. பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றால், அரசாங்கப் பதவி களில் இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

முடியுமா அவர்களால்?!

 தமிழக அரசும் சி.ஏ.ஜி-யின் அறிக்கைகளும்!

 * தமிழகப் போக்குவரத்துத் துறையின் 2009-10ம் ஆண்டு வரவு-செலவுகளைக் கணக்கிட்டு கவனக்குறைவான நடவடிக்கைகளால், 7.79 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதத் தொகையைப் போக்குவரத்துத் துறை வசூலிக்காமலேயே விட்டுவிட்ட விவகாரம்.

* புதிய தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் முன்பே திறப்பு விழா நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்காக தற்காலிகக் குவிமாடம் (டூம்) அமைத்ததில் தேவை இல்லாத வீண் செலவு செய்யப்பட்டது. தற்காலிகக் கூம்பு அமைக்கப்பட்டதில் 3.28 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையில் அதற்கு ஆகும் செலவைவிடக் கூடுதலாக 2.46 கோடி ரூபாய் செலவானது.

* கருணாநிதி அரசு அளித்த இலவச கலர் டி.வி-யும் சி.ஏ.ஜி-க்குத் தப்பவில்லை. ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் 11,354 டி.வி-க்கள் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்குக் கொடுக்கப்பட்டன. இதற்கான வீண் செலவு 2.71 கோடி ரூபாய்.

* மார்ச் 2011 நிலவரப்படி ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டின் மக்கள்தொகையைவிட 1.16 கோடி அதிகம்.

* 2009-ல் வீடுவீடாக ரேஷன் கார்டுகளைச் சரிபார்க்கும் பணி நடந்தபோது சென்னையில் 5.97 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்ததை அரசு கண்டுபிடித்தது. ஆனால், அந்த அட்டைகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு அனுமதித்திருக்கிறது. இதனால் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பதற்காக அரசுப் பணம் விரயம் ஆனதுதான் மிச்சம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism