Published:Updated:

"மீன்வளம் மிக்க கடலைக் குத்தகைக்கு எடுங்கள்!”

மீனவர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வுபாரதி தம்பி, படம்: உ.பாண்டி

"மீன்வளம் மிக்க கடலைக் குத்தகைக்கு எடுங்கள்!”

மீனவர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வுபாரதி தம்பி, படம்: உ.பாண்டி

Published:Updated:
##~##

த்தாலிய மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள மீனவக் குடும்பங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது கேரள அரசு. அந்த மாலுமிகளைத் திருப்பி அனுப்ப மறுக்கும் இத்தாலிய அரசுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுக்கிறார். ஒட்டுமொத்தக் கேரள அரசியல்வாதிகளும், 'இது கேரள மாநிலத்தின் பிரச்னை’ என்ற அம்சத்தில் ஓர் அணியில் நிற்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன?

 கடந்த வாரம்கூட 50-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டனர்; கடத்தப்பட்டனர். இந்திய அரசு பெயர் அளவுக்குக்கூட இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவில் தேர்தல் இல்லாததால், தமிழக ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் அதைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள். ராமேஸ்வரத்து மீனவனின் துயரம் முடிவில்லாமல் தொடர்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முதலில் ஒரு விஷயத்தை உடைத்துப் பேச வேண்டும். 'எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள்’ என்பதுதான் இலங்கைக் கடற்படை நம்மவர்களைச் சுடுவதற்கு சொல்லும் காரணம். இது உண்மையா என்றால், ஆம்... உண்மைதான். எல்லை தாண்டித்தான் மீன் பிடிக்கிறோம். ஆனால், அப்படித் தாண்டாமல் தொழில் செய்ய முடியாது. 'இந்தப் பக்கம் எனக்கு; அந்தப் பக்கம் உனக்கு’ எனக் கோடு போட்டுக்கொள்வதற்கு, கடல் ஒன்றும் கிரிக்கெட் மைதானம் அல்ல; அது ஓர் எல்லையற்ற பரப்பு. அதில் தனக்கான உணவைத் தேடி மீனவன் வலைபோடுகிறான். இங்கு இல்லை என்றால் அங்கு, அங்கும் இல்லை என்றால் அடுத்த இடம்... எனக் கடலில் மீனவனின் வேட்டை நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு கடல் பழங்குடி என்ற வகையில் காலம்காலமாக மீனவர்களின் வேட்டைத் தொழில் இப்படித்தான் இருக்கும். திடீரென தேச எல்லைகளைப் பிரித்துக்கொண்டு அந்தப் பக்கம் போகாதே, இந்தப் பக்கம் போகாதே என்றால், கடலில் தொழில் செய்ய முடியாது. எங்கு மீன் இருக்கிறதோ, அங்குதான் வலைபோட முடியும். மீன் இல்லாத இடத்தில் வலை போட்டு, வெறுங்கையோடு கரை திரும்ப முடியுமா? இந்த உண்மையை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம்தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும்'' என்கிறார் அருளானந்தம். ராமேஸ்வரத்தில் செயல்படும் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவரான இவர், மீனவர்கள் அனுதினம் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் பின்னணியை விவரிக்கிறார்.

"மீன்வளம் மிக்க கடலைக் குத்தகைக்கு எடுங்கள்!”

ஆனால், இது சட்டத்தை மீறிய வாதம்போல தோன்றுகிறதே... தேச எல்லைகளை மதித்து நடக்க வேண்டாமா? மீன் இருக்கும் இடத்தில்தானே வலைபோட முடியும் என்பதற்காக, அடுத்தவர்களின் சொத்துக்களை அபரிகரிக்க முடியுமா?

''முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சமவெளியும் கடலும் ஒன்றல்ல. சமவெளியில் பட்டா நிலம் இருப்பதைப் போல, யாருக்கும் பட்டா கடல் எல்லாம் கிடையாது. இந்தப் புரிதல் மீனவர்களுக்கு இடையில் இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக மீனவர்களுக்கு இடையில் பிரச்னை வந்தது இல்லை. தேச எல்லைகளைப் பிரித்து, கடற்படையை உருவாக்கிய பிறகுதான் இந்த எல்லைப் பிரச்னை எல்லாம் வருகிறது. அதுவும் கடற்படையும் கடலோரப் பாதுகாப்புப் படையும்தான் தொல்லைகொடுக்கிறதே தவிர, மீனவர்களுக்கு இடையில் பெரும்பாலும் பிரச்னை வருவது இல்லை. ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கைக் கடல் எல்லையில் ஒரே ஒரு இடத்தில்தான் மீன் பிடிக்கிறார்கள். ஆனால், இலங்கை மீனவர்கள்  இந்தியக் கடல் எல்லைகளில் 10 இடங்களில் மீன் பிடிக்கிறார்கள். இது எங்களுக்கும் தெரியும். ஆனால், நாங்கள் இதை ஒரு பிரச்னையாக மாற்றுவது இல்லை. ஏனெனில் இந்தத் தொழிலை இப்படித்தான் செய்ய முடியும். சமீபத்தில் நாங்கள் இலங்கை மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்கூட, எல்லை தாண்டுவதை அவர்கள் ஒரு பிரச்னையாகவே சொல்லவில்லை. 'இழுவலையைப் பயன்படுத்தாதீர்கள்’ என்பதுதான் அவர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை. இதுதான் யதார்த்தம்.

"மீன்வளம் மிக்க கடலைக் குத்தகைக்கு எடுங்கள்!”

அதையும் தாண்டி சட்டப்படிதான் பேசுவோம் என்றால், உலக நடப்போடு ஒப்பிட்டுப் பேச வேண்டியது அவசியம். உலகில் எங்கெல்லாம் மீனவன் இருக்கிறானோ, அங்கெல்லாம் எல்லை தாண்டுவதும் நடக்கிறது. இலங்கை, மியான்மர், ஜப்பான், தைவான், உகாண்டா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என அனைத்து நாடுகளின் மீனவர்களும் எல்லை தாண்டுவது சர்வ சாதாரணம். அதற்காக அவர்களைக் கைதுசெய்வார்கள்; அபராதம் விதிப்பார்கள்; அதிகபட்சம் சிறைத் தண்டனை விதிப்பார்கள். ஆனால், உலகின் எந்த நாட்டிலும் எல்லை தாண்டும் மீனவனைச் சுடுவது இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கதி.

1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இலங்கைக் கடற்படையால் முதன்முதலாக ராமேஸ்வரம் மீனவன் சுடப்பட்டான். அது இன்றுவரை தொடர்கிறது. காஷ்மீர் எல்லையில் ஒரு இந்தியன் சுடப்பட்டால், தேசமே பதறுகிறது. 'இந்தியாவுக்கு சுரணை இல்லையா?’ என்று ஊடகங்கள் அலறுகின்றன. ராமேஸ்வரமும் இந்த நாட்டின் எல்லைதான். அங்கு இத்தனை இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களே... ஏன், யாரும் பதறுவது இல்லை? வேறு ஏதோ ஒரு நாட்டில் இத்தனை மீனவர்கள் சுடப்பட்டு இருந்தால், இந்த நேரத்துக்கு ஒரு போர் மூண்டிருக்கும். ஆனால், இங்கு மீனவர்களாகிய நாங்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுகிறோம்!'' என்று கோபமாகிறார் அருளானந்தம்.

மீனவர்கள் மீதான அடக்குமுறை என்பது வெறுமனே துப்பாக்கியால் மட்டும் நிகழ்த்தப்படுவது இல்லை. நீரோடி முதல் பழவேற்காடு வரையிலும் தமிழ்நாட்டின் சுமார் 1,078 கி.மீ. நீளக் கடற்கரையில் 500-க்கும் அதிகமான மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 15 லட்சம் மீனவர்கள் வசிக்கிறார்கள். பல்வேறு வகையான தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் கடலில்தான் கொட்டப்படுகின்றன. கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது ஒரு பக்கம் என்றால், சுற்றுலா என்ற பெயரில் மீனவர்களின் கடல்பரப்பு அதிவேகமாக சுருக்கப்படுகிறது. 'சுனாமி’ பயம் காட்டி கடலோரத்தில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளைக் கட்டுகின்றனர். இறால் பண்ணைகள், சேது கால்வாய்த் திட்டம், கல்பாக்கம்; கூடங்குளம் அணு உலைகள் என அனைத்தும் மீனவர்களையே குறிவைக்கின்றன. இத்தனை இன்னல்களுக்கு இடையில் பாடு பார்க்க கடல் சென்றால், இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்துகிறது. எல்லை தாண்டுவதால்தான் இது நடக்கிறது என்றால், இதை நிறுத்துவதற்கான சாத்தியமான வழி உள்ளதா?

''இருக்கிறது. நாங்களே அதை அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறோம். மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரிக்கு அருகில் வெர்ச்பேங்க் என்ற கடற்பகுதி இந்தியக் கடல் எல்லையைச் சேர்ந்தது. நிறைய மீன்வளம் கொண்ட அந்தப் பகுதியை இலங்கை அரசு, இலங்கை மீனவர்களுக்காகக் குத்தகைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. இலங்கையில் போர் நடந்தபோதும், இப்போதும் இலங்கை மீனவர்கள் அங்குதான் மீன் பிடித்துவருகிறார்கள். அதேபோல ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் மீன்வளம் மிக்க ஓர் கடல் எல்லையைக் குத்தகைக்கு எடுத்துத் தர வேண்டும். போருக்குப் பிறகான இலங்கையின் புனர்வாழ்வுக்கு 4,200 கோடி ரூபாய் தருகிற இந்திய அரசு தன் சொந்த நாட்டு மீனவர்களின் நலனுக்காக 500 கோடி ரூபாய் செலவழித்தால் இது சாத்தியமான திட்டம்தான். பாக் நீரிணையில் ஒரே ஒரு இடத்தில்தான் ராமேஸ்வரத்து மீனவர்கள் எல்லை கடக்கிறார்கள். அங்கு மட்டும்தான் தொடர்ந்து பிரச்னையும் ஆகிறது. அந்தப் பகுதியையோ, அதை ஒட்டிய மீன்வளம் மிகுந்த பகுதியையோ குத்தகைக்கு எடுத்துத் தந்தால், இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். 1952 வரை தங்கச்சிமடம் மீனவர்கள் லைசென்ஸ் பெற்றுக்கொண்டு இலங்கைக் கடற்பகுதியான தலைமன்னாருக்குப் போய் தங்கியிருந்து மீன் பிடித்திருக்கிறார்கள். அந்த முறையையும் திரும்பக் கொண்டுவரலாம்!'' என்கிறார் அருளானந்தம்.

"மீன்வளம் மிக்க கடலைக் குத்தகைக்கு எடுங்கள்!”

ராமேஸ்வரத்து மீனவர்கள் பயன்படுத்தும் அதிநவீன வலைகளைத்தான் இலங்கைத் தமிழ் மீனவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். 30 ஆண்டு காலப் போரின் விளைவாக அவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் கிடைக்கவில்லை. அவற்றைப் பெறுவதற்கு அவர்களுக்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவரையிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் வலை பயன்படுத்தும் முறையை ஒழுங்குபடுத்துவதும், அதை ஓர் ஒப்பந்தம் மூலம் செயல்படுத்துவதும் இதற்கு ஒரு தற்காலிகத் தீர்வைத் தரலாம் என்கிறார்கள் மீனவப் பிரதிநிதிகள். மீன்வளம் மிக்க மூக்கையூர் கடல் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை உருவாக்கினால், சரிபாதி ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கொண்டுவர முடியும் என்பதும் அவர்களின் கருத்து.  

இது ஒரு பக்கம் இருக்க... நல்ல உடல் வலுவும், வீரமும், திருப்பித் தாக்கும் வலுவும், மன உறுதியும்கொண்டவர்கள் மீனவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுப்பது மீனவர்கள் என்பதால்தான், அது ஒரு வருடத்தைக் கடந்தும் கட்டுப்பாட்டுடனும் மன உறுதியுடனும் தொடர்கிறது என்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது கடலில் தன் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை எத்தனை காலம்தான் மீனவர்கள் பொறுத்துக்கொள்வார்கள்?

''தாங்கள் எல்லை கடந்து மீன் பிடிக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான், இந்த அடக்குமுறைகளை மீனவர்கள் பொறுத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்காது. தங்களுக்கு என்று ஓர் அரசியல் இயக்கமோ, தலைமையோ இல்லாததன் விளைவுதான் இவை எல்லாம் என்பதை மீனவ இனம்  உணரத் தொடங்கியிருக்கிறது. மீனவக் கிராமங்களுக்கு இடையிலான இணைப்பும், போராட்ட வழிமுறைகளையும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மீனவ மக்கள் திரண்ட சக்தியாகப் போராடும் காலம் ஒன்று விரைவில் வரும்!'' என்று உறுதியாக முடிக்கிறார் அருளானந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism