Published:Updated:

குழந்தைகளுக்கு மேக் அப் அவசியமா?

க.நாகப்பன்

குழந்தைகளுக்கு மேக் அப் அவசியமா?

க.நாகப்பன்

Published:Updated:
##~##

வ்வொரு குழந்தையும் அழகுக் குட்டிச் செல்லங்கள்தான். ஆனால், அழகுக்கு அழகு சேர்க்கிறோம் என்று குழந்தைகளின் மீது ஏகப்பட்ட மேக்அப் சமாசாரங்களைப் பூசி, அப்பும் பழக்கம் நம்மவர்களிடம் அதிகம். இது சரியா? குழந்தைகளுக்கான ஒப்பனைகளின்போது மேற்கொள்ள வேண்டிய கவன விதிமுறைகள் என்ன?

 ''குழந்தைகளுக்கு மேக்அப்பே வேண்டாம் என்பதுதான் மிக முக்கியமான பாதுகாப்பு விதிமுறை!'' என்று ஒற்றை வரி அதிரடியுடன் ஆரம்பிக்கிறார் அழகுக் கலை மருத்துவர் யு.ஆர்.தனலட்சுமி.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருமண நிகழ்ச்சிகள், விசேஷங்கள், பள்ளி ஆண்டு விழாக்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்களின் முகத்தில் அழுத்தமாக ஒப்பனை செய்யும் பழக்கம் கிட்டத்தட்ட அனைத்துப் பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால், 15 வயது வரை குழந்தை களின் சருமம் மிருதுவாகவும் மென்மையாகவும்தான் இருக்கும். அந்தப் பருவத்தில் மிகவும் வீரியமான அல்லது தரமற்ற ஒப்பனைப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள் குழந்தைகளின் சருமத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.  

குழந்தைகளுக்கு மேக் அப் அவசியமா?

குழந்தைப் பருவத்தில் செயற்கை அலங்காரம் தேவை இல்லை. குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றிக் குளிக்கவைத்தாலே  புத்துணர்ச்சி அடைந்துவிடுவார்கள். அந்தக் குளியலே அவர்களது முகத்திலும் உடலிலும் உற்சாகத்தைப் புகட்டும். தரமான பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயை முடியில் தேய்த்துத் தலை சீவி நெற்றியில் ஒற்றைப் பொட்டு வைப்பது தான் குழந்தைகளுக்கான அதிகபட்ச ஒப்பனையாக இருக்க வேண்டும். விசேஷங்களுக்கு அழைத்துச் செல்லும்போது இந்த ஒப்பனைக்குப் பிறகு குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப பால் அல்லது பழரசம் கொடுத்தாலே அவர்கள் வெளியிடங்களில் உற்சாகமாக இருப்பார்கள்.

ஒருவேளை நீங்கள் மேக்அப் போடுவதில் தீர்மானமாக இருந்தால், ஒப்பனைப் பொருட்களின் தரத்திலும் அளவிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 'ஒரு நாள்தானே மேக்அப் போடுகிறோம்!’ என்று தரம் இல்லாத ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் பிரத்யேக சீப்பு, பவுடர் ஸ்பாஞ்ச் ஆகியவற்றால் ஒப்பனை மேற்கொள்ள வேண்டும். குழந்தைக்கு உபயோகப்படுத்திய பொருட்களை பெரியவர்கள்

குழந்தைகளுக்கு மேக் அப் அவசியமா?

உபயோகப்படுத்தவே கூடாது. உதடுகளும் கண்களும்தான் முகத்தின் அழகை எடுப்பாகக் காட்டும் பகுதிகள். அங்கு ஒப்பனை செய்யும்போது, அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். கண் இமைகளில் தரமான கண் மை மட்டுமே இடுங்கள். அதிக அளவு கண் மை விழிகளில் எரிச்சலை உண்டாக்கும். மிருதுவான கண் மைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் பல வருடங்கள் நிலைத்து நிற்கும் தரமான நிறுவனங்களின் லிப்ஸ்டிக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விலை மலிவான, தரமற்ற லிப்ஸ்டிக்கு களைப் பயன்படுத்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதடுகள் தன் இயல்பான நிறத்தை இழந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

பள்ளிக்குச் செல்லும்போதுகூட அதீத மேக்அப்புடன் செல்கிறார்கள் பல குழந்தைகள். வகுப்பறையில் மேக்அப்பின் நெடி மற்ற மாணவர்களுக்கு உறுத்தலாக இருக்கும் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். 15 வயது வரை குழந்தைகளுக்கு ஃபேஷியல் ப்ளீச்சிங் செய்யாமல் இருப்பது நலம்.

மேடை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கெடுத்தால், அதீத மேக்அப்புக்குப் பதிலாகப் பளிச் நிறத்தில் புதிய ஆடைகளை அணிவித்தாலே, மலர்ச்சியாகத் தெரிவார்கள் குழந்தைகள்.

ஒப்பனை செய்வதைக் காட்டிலும் அதைக் கலைப்பதில் அதீத கவனம் செலுத்துவது அவசியம். விசேஷங்கள் முடிந்த பிறகு சுத்தமான நீரால் முகத்தை நன்கு அலம்பி ஒப்பனையைக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் உண்டாவதோடு, சருமத்தின் இயல்புத்தன்மை பாதிக்கப்படும். ஃபேஷன் ஷோ, நடன அரங்கேற்றங்களின்போது மேற்கொள்ளப்படும் அழுத்தமான ஒப்பனைகளைக் கலைக்க, தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும். அழகுக்கு ஆபத்து இல்லாமல் அழகு சேர்ப்போம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism