Published:Updated:

"என் அம்மாவின் சிரிப்பு பிடிக்கும்!”

பாரதி தம்பி

"என் அம்மாவின் சிரிப்பு பிடிக்கும்!”

பாரதி தம்பி

Published:Updated:
##~##

வாழ்க்கை விசித்திரமானது என்பதற்கு சங்கர் சர்க்கார் ஓர் உதாரணம். சங்கர் இப்போது கொல்கத்தாவின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். ஆனால், அவர் வசிப்பது ஒரு 'சிவப்பு விளக்கு’ ஏரியாவில். ஒரு பாலியல் தொழிலாளியின் மகன் அவர். கடந்த 10 ஆண்டுகளாகத் தன் அம்மா கபிதாவைத் தான் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து Facing one’s own என்ற தலைப்பில் லண்டனிலும் மேலும் பல உலக நாடுகளிலும் காட்சிக்கு வைத்திருக்கும் சங்கருக்கு இப்போது வயது 22.

''நான் ஒரு 'செக்ஸ் வொர்க்கரின் மகன்’ என சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை எதுவும் இல்லை. ஆனால், அதை மறைப்பதால் புதிய அவமானம் எதுவும் வந்துவிடப்போவது இல்லை. அதனால்தான் இந்தப் புகைப்படங்களைத் தொகுத்திருக்கிறேன்'' என்கிற சங்கர் எதையும் வெளிப்படையாகப் பேசுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரியாவில் உள்ள மால்கங்கிரி என்ற கிராமத்தில் பிறந்தேன். குடிப் பழக்கத்துக்கு அடிமையான அப்பா இறந்த பிறகு, என்னைப் பாட்டி யிடம் விட்டுவிட்டு அம்மா மட்டும் கொல்கத்தா வுக்கு வேலை தேடி வந்தார். இங்கு அவர் தஞ்சம் அடைந்த சேத் லேன் என்பது வடக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய சிவப்பு விளக்குப் பகுதி. எனக்கு மூன்று வயதான பிறகு நானும் அம்மாவுடனேயே வந்து தங்கிக்கொண்டேன்.

"என் அம்மாவின் சிரிப்பு பிடிக்கும்!”

விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு, மற்றவர்களுக்கும் எங்களுக்குமான வித்தியாசம் எனக்கு மெதுவாகப் புரிந்தது. சேத் லேனில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அதன் வாசல் வரையிலும் எங்கள் ஏரியா. அதன் பிறகு அவர்கள் இருப்பார்கள். அவர்கள் என்றால், பாலியல் தொழில் செய்யாத மற்றவர்கள். சிறுவர்களான நாங்கள் பட்டம் விடுவோம். அது அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் விழுந்துவிடும். அதை எடுக்கப்போனால் அவமானப்படுத்தி அனுப்புவார்கள். பள்ளிக்கூடத்திலும் இதுதான் நடந்தது. சக மாணவர்களும், ஆசிரியர்களும் கூட அசிங் கமாகப் பேசுவார்கள். இதனால்,  ஐந்தாம் வகுப்போடு பள்ளிக்கூடத்தை நிறுத்த வேண்டி வந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நரகத்தில் இருந்து விடுபட்டதைப் போல உணர்ந்தேன். அப்படி மற்றவர்கள் அசிங்கமாகப் பேசும்போதுமனதுக்கு வருத்தமாக இருக்கும். என் அம்மா மீது கோபம் வரும். ஆனால், அவர் எனக்காகத்தான் இந்தத் தொழிலைச் செய்கிறார் என்பதைப் பிறகு புரிந்துகொண்டேன்.

"என் அம்மாவின் சிரிப்பு பிடிக்கும்!”

2000-ம் ஆண்டில் ஒரு நாள் 'ட்ரிக் இந்தியா’ என்ற புகைப்பட நிறுவனத்தைச் சேர்ந்த சுவண்ட் சாட்டர்ஜி என்பவர் எங்கள் சேத் லேனுக்கு வந்தார். பாலியல் தொழில் செய்யும் பெண்களின் குழந்தைகளை மேம்படுத்துவது தொடர்பான யுனிசெஃப் திட்டத்தின் கீழ் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் எங்களுக்கு கேமராவைக் கையில் கொடுத்து எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதை சொல்லித் தந்தார். எனக்கு அந்தக் கருவி மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. உடனே, அதை வாங்கிச் சென்று என் அம்மாவைத்தான் புகைப்படம் எடுத்தேன். என் அம்மா சிரிப்பது எனக்குப் பிடிக்கும். நான் போட்டோ எடுக்கும்போது எல்லாம் அவர் சிரிப்பார். அதற்காகவே நான் போட்டோ எடுப்பேன். இப்படித்தான் என் அம்மாவை நான் விளையாட்டாக புகைப்படங்கள் எடுக்கத் துவங்கினேன். பிறகு, இந்த புகைப்படக் கலையே என் வாழ்க்கையானது.

"என் அம்மாவின் சிரிப்பு பிடிக்கும்!”

'ட்ரிக் இந்தியா’ நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில் என் அம்மாவை நான் எடுத்த புகைப்படங்களில் ஒரு கதை இருப்பதைக் கண்டேன். அது ஒரு வலிமிகுந்த, இந்தச் சமூகத்தின் இறுதி விளிம்பில் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணின் கதை. அந்த நினைப்பு மனதுக்குள் ஊடுருவிய பிறகு, என் அம்மாவை புகைப்படம் எடுப்பது வலி நிறைந்ததாக இருந்தது.  

இந்தப் புகைப்படங்களைக் கண்காட்சிக்கு வைக்கப்போகிறேன் என்றதும் என் அம்மா மறுத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் 'இதன் மூலம் புதிய அவமானங்கள் எதுவும் வரப்போவதில்லை’ என்பதை அவர் புரிந்துகொண்டார்.  

"என் அம்மாவின் சிரிப்பு பிடிக்கும்!”

வாழ்க்கையின் கடுமையான துயரங்களைச் சகித்துக்கொள்ளவும், மீண்டு வரவும், கஷ்டத் தில் புன்னகைக்கவும் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கும் அவரே எனக்குக் கற்றுத் தந்தார். இப்போது என் அம்மா ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். பழைய மகிழ்ச்சியை அவர் திரும்பப் பெற்றுவிட்டதைப் போல உணர்கிறார். எனக்கு இதுதான் வேண்டும்!'' என்கிற சங்கர் சர்க்காரின் புகைப்படங்கள் இங்கிலாந்து, பங்களாதேஷ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் முன்னணி கேலரிகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், அவரோ இன்னமும் அதே சேத் லேனின் ஒற்றை அறையில்தான் தன் அம்மாவுடன் வசித்துவருகிறார்.

''ஏனென்றால் அது என் வீடு. உங்கள் வீடு எங்கிருந்தாலும் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா?!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism