Published:Updated:

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

வாசகர் கேள்விகள்...படம்: கே.ராஜசேகரன்

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

வாசகர் கேள்விகள்...படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

க.ஏழுமலை, கோட்டூர்.

 '' 'சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்’ என்கிறேன் நான். அதாவது, அரபு நாடுகளைப் போல் 'பல்லுக்குப் பல்... கண்ணுக்குக் கண்’ என்பது மாதிரி. உங்களுடைய கருத்து என்ன? மெக்காலே அடிப்படையில் உருவான இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றப்பட வேண்டிய அம்சங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? சீர்திருத்தம் தேவையெனில், என்னென்ன செய்ய வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. ஊழல் குற்றங்களைத் தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal code) போதவில்லை என்றுதான், 1971-ல் கடுமையான ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் அரசு அலுவலகங்களில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறதா? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். அது உண்மையோ, இல்லையோ... ஆனால், அரசு அலுவலகங்களில் உள்ள மேஜை, நாற்காலிகள்கூட லஞ்சம் கேட்காமல் இருக்காது. நீங்கள் சொல்லும் அரபு நாடுகளில் தண்டனைகள் கடுமையாக இருந் தாலும், குற்றங்கள் குறைந்துவிடவில்லை.

'கண்ணுக்குக் கண் என்பது உலகத்தையே குருடர்கள் உலகமாக்கிவிடும்’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவ முற்பட்டபோது சிவில், கிரிமினல் சட்டங்களைக் கொண்டுவர இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர். ஆனால், கிரிமினல் குற்றங்களைப் பொறுத்தவரை மொகலாயப் பேரரசு, மற்றும் சில சுல்தான்கள், நவாப்கள் இஸ்லாமிய மத அடிப்படையில் உள்ள கிரிமினல் சட்டங்களும், தண்டனைகளுமே இருந்தன. மாறுகால், மாறுகை வாங்குதல்... பொது இடத்தில் கசை அடி என்பன போன்ற தண்டனைகள்தான் நடைமுறையில் இருந்தன. அதை அமல்படுத்தினால் வெகு விரைவில் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று சொல்லி, மெக்காலே பிரபுவை இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal code)  எழுதவைத்தார்கள். அந்தச் சட்டம்தான் இன்று பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் காஷ்மீரில் தண்டனைச் சட்டமாக உள்ளது. அந்தச் சட்டத்தில் இந்த 150 வருடங்களில் நடைமுறைக்கு ஏற்பப் பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன. அது போதாது என்று, கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட மத்தியச் சட்டங்களும், 30-க்கும் மேற்பட்ட மாநிலச் சட்டங்களும், புதிய குற்றங்களையும் அதற்குண்டான புதிய தண்டனைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். அந்தச் சட்டங்களைச் சரியாக அமல்படுத்தினாலே, நீதி கிடைக்கும். புதிய திருத்தங்கள் தேவை யில்லை. அவ்வளவு ஏன்... இன்று முகப்புத்தகத்தில் Like, Share  போட்டாலே, கைவிலங்கு வீடு தேடி வரும் நிலை உள்ளது. இதைக் காட்டிலும் கெடுபிடியான சட்டவிதிகள் வேண்டுமா என்ன?''

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

 ''பொதுவாகவே, வக்கீல்கள் என்றாலே பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இல்லையே... இதை எப்படி மாற்றுவது?''

''ஷேக்ஸ்பியர் 'எல்லா வக்கீல்களையும் கொல்லுங்கள்’ என்று தனது நாடகம் ஒன்றில் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி வக்கீல்களைத் தலால் (தரகர்) என்று குறிப்பிட்டுப் பேசியதற்கு, அவர் மேல் மும்பை வழக்கறிஞர்கள் மானநஷ்ட வழக்குத் தொடுத்துத் தோல்வியடைந்தனர்.

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

எல்லாத் தொழில்களில் ஈடுபடுவோர் மீதும் (டாக்டர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) மக்களுக்குச் சமீபமாக நம்பிக்கை குறைந்துவருகிறது என்பது உண்மை. இத்தகைய தொழில்களில் ஈடுபடுவோருக்குச் சுதந்திரமாகச் செயல்பட, தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட, நாடாளுமன்றம் சட்டங்களை வகுத்துள்ளது. அதுபோல வழக்கறிஞர்கள் நெறியுடனும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வழக்கறிஞர் சட்டம் 1961-ல் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், வழக்கறிஞர்களைக் கண்காணிக்கும் பார் கவுன்சில் தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், 'திருமங்கலம் ஃபார்முலா’ தோற்றுவிடும். வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பார் கவுன்சிலே, இன்று கோர்ட்டைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுக்கும்போது, யாரிடம் இனி முறையிடுவது என்ற ஆதங்கம் தான் ஏற்படுகிறது. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியதுபோல், இனி 'மக்களுக்கான தொழில்’ (Professions for the people) என்று ஊருக்கு ஊர் அமைப்புகள் உண்டாக்கி, மக்களுக்காகச் செயல்படும் சுதந்திரமான மனிதர்களை உருவாக்க வேண்டும்!''

கு.சாரங்கபாணி, செங்கல்பட்டு.

 ''ஓய்வுபெற்ற பிறகு, சில நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் சேர்கின்றனர். அனைவருக் கும் பொதுவாக நீதி வழங்கிய ஒருவர், இப்படி ஒரு கட்சியில் போய்ச் சேர்ந்தால், அவர் பணியாற்றிய காலத்தில் வழங்கிய தீர்ப்புகள் குறித்துச் சந்தேகங்கள் எழாதா? அதோடு, எதிர் காலத்தில் உங்களுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?''

''ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் ஈடுபடுவது தவறு இல்லை. அவருக்கும் ஒரு குடிமகனுக்கு உண்டான எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், பதவி போனதுமே அவர்கள் அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகிக்கொள்ளும் செயல், மக்களை முகம் சுளிக்கவைக்கத்தான் செய்யும். சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா காங்கிரஸ் சார்பில் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நீதிபதி வி.ராமசாமி தன்னை அ.தி.மு.க-வுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டதும் கடும் சர்ச்சைகளை எழுப்பின.

என்னைப் பொறுத்தவரை 1988-ம் ஆண்டு வரை நேர்மையாக அரசியலிலும், அரசியல் கட்சிகளிலும் ஈடுபடுத்திக்கொண்டேன். ஆனால், தற்போது எந்த அரசியல் கட்சிகளோடும் சேரும் எண்ணம் இல்லை. ஆனால், பொதுவாழ்வில் ஈடுபடுவேன். ஒரு நீதிபதி பதவியினால் கிடைத்த கௌரவத்தையும் அனுபவங்களையும் சாதாரண அடித்தட்டு மக்களை மேம்படுத்தும் செயலில் ஈடுபடுத்திக்கொண்டால், அது கண்ணியமான செயலாக இருக்கும்!''

ச.ஐயப்பன், காஞ்சிபுரம்.

 ''வழக்கறிஞர்களின் கட்டணத் தொகை ஏன் வரையறுக்கப்படவில்லை? ஒரு ஜாமினுக்கு ஒரு வழக்கறிஞர் 2,000 ரூபாய் வாங்குகிறார். அதே வழக்கில் ஜாமின் வாங்க மற்றொருவர் லட்சங்களில் கட்டணம் கேட்கிறார். இதற்கு என்னதான் தீர்வு?''

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

''அம்மா மெஸ்ஸில் இட்லி விலை 1 ரூபாய். ஆனால், அதுவே அடையார் பார்க் ஹோட்டலில் 100 ரூபாய். அப்படித்தான் வழக்கறிஞர் கட்டணங்களில் வித்தியாசம் உள்ளது. வழக்கறிஞர்களுக்கான கட்டணம்பற்றி The Legal Practitioner’s Fees Act என்று ஒரு சட்டம் உள்ளது. அதில் குறைந்தபட்சக் கட்டணமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் குறைவாக வக்கீல்கள் ஃபீஸ் வாங்கினால், அது ஒரு சுகாதாரமற்ற போட்டியை உருவாக்கும் என்ற முறையில் உருவாக்கப்பட்ட சட்டம் அது. பார் கவுன்சில் உருவாக்கிய விதிமுறைகளின்படி ஒரு வக்கீல் தனது தரத்துக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப பீஸ் வாங்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில் வழக்கின் வெற்றி, தோல்வி அடிப்படையில் ஃபீஸ் வாங்குவது சூதாட்டத்துக்குச் சமம் (Champerty) என்று தடைசெய்யப்பட்டுள்ளது. வழக்கில் வரக்கூடிய தீர்ப்பு அடிப்படையில் விகிதாசார ஃபீஸ் (Contingency Fees) என்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அரசியல் சட்டம் Article 39A-யின்படி ஏழைகளுக்கு இலவசச் சட்ட உதவி வழங்க Legal Services (சட்ட உதவி ஆணையம்) நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், வருமான அடிப்படையில் கட்டணம் இல்லாமல் வழக்கு மன்றங்களை நாடுவது சாத்தியப்பட்டு உள்ளது. (அதில் உள்ள பேனல் வக்கீல்கள் தங்களிடம் தனியாக ஃபீஸ் கேட்பதாக இப்போது பல புகார்கள் வரத் தொடங்கியுள்ளன). கிரிமினல் வழக்குகளில் வக்கீல் வைக்க முடியாவிட்டால் நீதிமன்றமே வக்கீல் நியமனம் செய்து (State brief) வழக்கு நடத்த அதிகாரம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கமே கட்டணம் செலுத்திவிடும். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கசாப் தொடர்ந்த மேல்முறையீட்டை நடத்த, ராஜு ராமச்சந்திரன் என்ற மூத்த வழக்கறிஞரை கோர்ட் நியமித்தது. அவர் திறமைவாய்ந்த வழக்கறிஞர். அந்தப் பணியைத் தன்னுடைய கடமையாக ஏற்று திறம்பட நடத்தினார். அவருக்கு ஃபீஸ் தொகையாக 14 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியது. அதை அவர் அப்படியே மும்பை வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டமையால், அதை சுப்ரீம் கோர்ட் மகாராஷ்டிர அரசுக்கு அனுப்பிவைத்தது. தனது வழக்கறிஞர் கடமையைச் செய்தது ஒரு பக்கம். தனது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு மறுபுறம் என்று செயல்பட்ட ராஜு ராமச்சந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!''

- அடுத்த வாரம்...

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

''வழக்கறிஞர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்வதைப் போல், உங்களுடைய பணிகள் அமைந்திருக்கின்றன. அப்படியானால், குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் வாதாடுவது சரிதானா?''

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

 ''தூக்குத் தண்டனைகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?''

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

 ''ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவரை நீங்கள் வரவேற்றீர்களாமே? அப்படியானால், நீங்கள் ம.தி.மு.க. அனுதாபியா? நீங்கள் நீதிபதியாக இருந்தபோது வைகோவுக்குச் சாதகமாக நிறையத் தீர்ப்புகளை வழங்கி இருப்பீர்கள் அல்லவா?''

- இன்னும் பேசுவோம்...

நீதிபதி சந்துருவிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை- சந்துரு’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com 

கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்...

விகடன் மேடை சந்துரு பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism