##~## |
''மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள சிறப்பு என்ன?''
''நீர் - நீர்முழ்கிக் கப்பல் ஊழல்
நிலம் - விவசாயிகள் நிவாரண ஊழல்
காற்று - 2ஜி அலைக்கற்றை ஊழல்
ஆகாயம் - ஹெலிகாப்டர் பேர ஊழல்
நெருப்பு - நிலக்கரி பேர ஊழல்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆக, பஞ்சபூத ஊழல் அரசு என்று மன்மோகன் சிங் அரசைக் குறிப்பிடலாமா?''
- ஆர்.நாகராஜன், சென்னை-61.
''குஷ்புவை ஜெயலலிதாவுக்குச் சரியான போட்டியாகச் சொல்லலாமா?''
''சொல்லலாமே!
தமிழகத்தில் 'குஷ்பு இட்லி’ ஏக பிரபலம். இப்போது 'ஜெ. இட்லி’ (மலிவு விலை இட்லி) பிரபலமாகியிருக்கிறது. அந்த விதத்தில் 'ஜெ’க்கு 'குஷ்பு’ சரியான போட்டிதான்!''
- எஸ்.விவேக், சென்னை.

''மற்ற மாநில அமைச்சர்களுக்கும், நம்ம மாநில அமைச்சர்களுக்கும் உள்ள வித்தியாசம்?''
''மற்ற மாநில அமைச்சர்கள் தங்கள் இலாக்கா அறிவிப்புகளைத் தாங்களே வெளியிடுவார்கள். தமிழ்நாட்டு மாநில அமைச்சர்கள் தங்கள் இலாக்கா அறிவிப்புகளையே மறுநாள் செய்தித்தாள் பார்த்துத்தான் தெரிந்துகொள்வார்கள்!''
- சுஜாதா, சென்னை-61.
''ஜெயலலிதா, கருணாநிதி தொடங்கி பலரும் மன்மோகன் சிங்குக்கு எழுதும் கடிதங்களை சிங் என்ன செய்வார்?''
''மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னான். 'உங்களுக்கு வரும் கடிதங்களுக்கு உடனே பதில் எழுதாமல், அதை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள். சில காலம் கழித்து அதை எடுத்துப் படியுங்கள். அப்போது அதற்குப் பதில் எழுத வேண்டிய அவசியம் இருக்காது!’ நெப்போலியன் சொன்னதை இப்போது ஆத்மார்த்தமாகக் கடைபிடிப்பவர் நம் பிரதமர் மட்டும்தான்!''
- எஸ்.விவேக், சென்னை.
''பேச்சாலேயே சாதனை படைத்தவர்களை நமக்குத் தெரியும். சாதனையாளர்கள் எல்லாம் நன்கு பேசத் தெரிந்தவர்கள்தானா?''
''விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் ஒரு கூட்டத்தில் பல அறிஞர்கள் முன்னிலை யில் கௌரவிக்கப்பட அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பேசுவதற்காக அழைக்கப்பட்டபோது மூத்தவரான வில்பர் ரைட் மைக் பிடித்து, 'என் தம்பி மிக அருமையாகச் சொற்பொழிவுகள் ஆற்றுவார். அவர் பேசுவது பொருத்தமாக இருக்கும்’ என்று கூறி அமர்ந்தார். அடுத்து வந்த ஆர்வில் ரைட் என்ன பேசினார் தெரியுமா? 'என் சகோதரர் மிகப் பிரமாதமாகப் பேசி முடித்துவிட்டார். இனி நான் பேச ஒன்றும் இல்லை’!''
- கே.சரஸ்வதி, ஈரோடு.

''இன்றைய பள்ளிக்கூடங்களின் நிலை எப்படி இருக்கிறது?''
'' 'பேச்சு வரணும்னு
பேச்சியம்மன வேண்டிக்கிட்டு...
டாக்டரம்மா குடுத்த
ருந்தையும் ஊட்டிவிட்டு...
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
'என்னடி சொன்னாங்க
ஸ்கூல்ல’ன்னு
நான் கேட்க...
'பேசாத’ன்னு
சொன்னாங்கம்மான்னு
சொன்னா என் மக!''
க.இளஞ்சேரனின் இந்தக் கவிதை உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறதா!''
- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.
'' 'கம்பெனி கொடுப்பதற்காக மது அருந்தினேன்’ - 'நட்புக்காகக் குடித்தேன்’ என்றெல்லாம் கூறுபவர்களுக்கு ஓர் அறிவுரை...?''
''பிரபல விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மேலை நாட்டுக்குச் சென்றபோது விருந்து ஒன்றில் ஒயின் குடிக்க அன்புடன் வற்புறுத்தப்பட்டார். அப்போது ராமன் ‘‘I want to see Raman’s Effect (ராமன் விளைவு) in alcohol; not alcohol’s effect in Raman”என்று கூறி அன்புடன், அதே சமயம் உறுதியாக மறுத்தார். ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, மறுப்பதும் ஒரு கலை. அதை அவசியமானபோது அவசியம் பயன்படுத்துங்கள்!''
- கே.சரஸ்வதி, ஈரோடு.
''உங்களை மிகவும் குழப்பும் கேள்வி எது?''
'' ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?''
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

'' 'யு.பி.எஸ்.சி. தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி’ என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளாரே?''
''அந்த மாற்றங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது ஒருபுறமிருக்க, இப்போது ஜெயலலிதாவிடம் ஒரு கேள்வி... தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழின் முக்கியத்துவத்தை குறைச்சதுக்கு நாங்க யாருக்கு மேடம் கடிதம் எழுத?''
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.
''நவீன கட்டடக் கலை என்பது குட்டிக் குட்டியான அறைகள்தானோ?''
''எல் லிஸ்சிட்ஸ்கி ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கட்டடக் கலை வல்லுநர். அவர் சொன்னது இது: ''உயிருள்ள உடம்புகளுக்காகத் தயாரிக் கப்படும் வண்ணம் அடிக்கப்பட்ட சவப்பெட்டிகளாக, வாழும் அறைகள் இருக்கக் கூடாது!''
- சுரா.மாணிக்கம், புதுவை.
'' '15 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராகப் பதவி வகிப்பது என்பது எளிய காரியம் அல்ல!’ என்று சோனியா காந்தி சொல்லியிருக்கிறாரே?''
''ஆமாம் தாயி... எங்களாலும் தாங்க முடியலை!''
- யாழினி பர்வதம், சென்னை-78.
