##~## |
நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை’ என இலக்கியவாதிகளாலும் பல மில்லியன் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் சினுவா ஆச்சிபி கடந்த 21-ம் தேதியன்று தனது 82-வது வயதில் இறந்தபோது, ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவுமே இன, மத, மொழி வேறுபாடு இன்றி தனது சொந்தச் சகோதரனை இழந்ததுபோலத் தவித்தது. ‘Things Fall Apart’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற நாவலை சினுவா எழுதியபோது, அவருக்கு வயது 28தான். நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட, உலகம் முழுவதும் அதிக வாசகர்களைச் சென்றடைந்த அந்த நாவல், ஏறத்தாழ 50 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டு, சுமார் ஒரு கோடிப் பிரதி கள் விற்பனையாகி இருக்கின்றன. ஆப்பிரிக்காவைப் பற்றியும் ஆப்பிரிக் கர்களின் வாழ்வியல்பற்றியும்அதற்கு முன் பல நாவல்கள் வெளிவந்திருந் தாலும் அவை மேலை நாட்டவர் களால் தங்களுக்குத் தகுந்த மாதிரி இட்டுக்கட்டி காலனித்துவ அரசியலை நீக்கி நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்திருந்தன. ஆனால், ஆப்பிரிக்காவை உள்ளது உள்ளபடி படம்பிடித்த, அவர்களின் வாழ்வியலை எந்தவிதச் சமரசமும் இல்லாமல் படைத்த வகையில்
‘Things Fall Apart’ நாவலுக்கு அழியாப் புகழ் உண்டு.
'மற்றவர்களின் கதை உனக்குப் பிடிக்கவில்லை என்றால், உனது கதையை எழுது!’ என்பது சினுவாவின் பிரபல மேற்கோள். சொன்னதற்கு ஏற்பத் தனது நாவலில் அவர் படைத்தது தனது குடும்பத்தின் கதையை. 1990-ல் கார் விபத்தில் சிக்கி, இடுப்புக்குக் கீழே செயற்பட முடியாதவராக ஏறத்தாழ 22 வருடங்கள் தனது வாழ்க்கை யைச் சக்கர நாற்காலியில் கழித்தவர். வாழ்நாள் சாதனையாளருக்கான 'மேன் புக்கர்’ பரிசினை 2007-ல் வென்ற சினு மொத்தமாகப் படைத்தது ஐந்து நாவல்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழங்குடிகளின் மீதான கோர வன்முறையினைத் தனது 'சோளகர் தோட்டி’ நாவலில் படைத்திருக்கும் ச.பாலமுருகன், சினுவா ஆச்சிபி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். ''எனது நாவலில் தங்கள் நிலத்தில் இருந்து பழங்குடியின மக்கள் அப்புறப்படுத் தப்படும் அவலம்பற்றிப் பேச விரும்பினேன். அந்தப் படைப்புக்கான தேடல் மனநிலையில் நான் இருந்தபோது, தற்செயலாக சினுவா ஆச்சிபியின் நாவலை வாசிக்க நேர்ந்தது. தமிழில் 'சிதைவுகள்’ என்ற பெயரில் அந்த நாவலின் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. பழங்குடி சமூகத்தின் வாழ்க்கையில் இழையோடியுள்ள அகம் மற்றும் புறம் சார்ந்த பல்வேறு கூறுகளை ஒரு படைப்பாளி அணுக வேண்டிய விதத்தை நான் சினுவா ஆச்சிபியின் எழுத்துகளில் கற்றுக்கொண்டேன். ஒரு படைப் பில் படைப்பாளி காணாமல் போயிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை அவருடைய படைப்புகள் உணர்த்தின. மேலும், ஒரு படைப்பாளி பழங்குடி சமூகத்தைப் பார்வையாளனாக நின்று பார்ப்பதா அல்லது பழங்குடியாகக் கரைந்து படைப்புக்கு உள்ளிருந்து படைக்க முயலுவதா என்ற கேள்விக்கு இரண்டாவது உத்தியை அவர் கடைபிடித்திருந்தார். நைஜீரிய மண்ணின் சிகரங்களுக்கும் தமிழகத்து மேற்குத் தொடச்சி மலைக்கும் இடையிலான பந்தம் வழியாக எனக்கும் அவருக்கும் ஆசிரியன் - மாணவன் என்ற தொடர்பு இருந்ததாகவே நான் கருதுகிறேன். தனது படைப்புகளில் அவர் எப்போதும் உயிர் வாழ்வார்!''
தனது இறுதிக் காலத்தில் அமெரிக்காவை வாழ்விடமாகத் தேர்வுசெய்து வசித்துவந்தார் சினுவா. அப்போதும் தனது எழுத்துகளில் அவர் ஆப்பிரிக்க மக்களின் வாழ்வியலையும் வலிகளையுமே பிரதானமாகப் பதிவுசெய்தார். 'அமெரிக்காவில் நீண்ட காலம் வசித்திருக்கிறீர்கள். அமெரிக்காவைப் பற்றி ஒரு நாவல் எழுதும் எண்ணம் இல்லையா?’ என்ற கேள்விக்கு, அவர் பதில் இப்படி அமைந்தது... ''அமெரிக்காவைப் பற்றி எழுத நிறைய நாவலாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், நைஜீரியாவைப் பற்றி எழுத ஒரு சிலரே உள்ளனர்!''
'எனது ஆயுதம் இலக்கியம்!’ என வெளிப்படையாக அறிவித்த சினுவா ஆச்சிபியின் மறைவு ஆப்பிரிக்க இலக்கியத்துக்கு மட்டும்அல்ல... உலக இலக்கியத்துக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!