Published:Updated:

இது மூன்றாம் உலகப் போரா?

பாரதி தம்பி

இது மூன்றாம் உலகப் போரா?

பாரதி தம்பி

Published:Updated:
##~##

மெரிக்காவின் ராணுவ சூதாட்டம் இப்போது கொரிய எல்லையைப் பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வட கொரியாவும், தென் கொரியாவும் யுத்த முஸ்தீபுகளுடன் முறைக்கிறது. வட கொரியாவிடம் அணு ஆயுதம் இருக்கிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா விடமும் அணு ஆயுதம் இருக்கிறது. ஒருவேளை போர் உச்சத்தை அடைந்து, இரு தரப்புகளும் ஆணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவு..?

ஒன்றுபட்ட கொரிய நாட்டை 1910-ம் ஆண்டு ஜப்பான் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைய, கிழக்காசியப் பிராந்தியத்தில் தனக்கொரு தளமாகக் கொரியாவைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டது அமெரிக்கா. இதை வடக்குப் பிராந்தியத்தில் இருந்து சோவியத் யூனியன் எதிர்த்தது. இறுதியில், அமெரிக்க ஆதிக்கப் பகுதிகள் தென் கொரியாவாகவும், ரஷ்ய செல்வாக்குப் பகுதிகள் வட கொரியாவாகவும் உருவாகின. வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியும், தென் கொரியாவில் முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசப் பிரிவினைக்கு முன்னர் ஒட்டுமொத்த கொரியாவிலும் கம்யூனிசம்தான் செல்வாக்கு செலுத்தியது என்பதால், இயல்பாகவே தென் கொரியாவிலும் கம்யூனிஸ்ட்டுகள் இயங்கினார்கள். இவர்களை தென் கொரியப் படையினருடன் சேர்ந்துகொண்டு மிக மோசமாக வேட்டையாடியது அமெரிக்கப் படை. பல்லாயிரம் பேர் எவ்வித விசாரணைகளும் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டு, சுரங்கங்களிலும் பதுங்கு குழிகளிலும் தூக்கி வீசப்பட்டனர். பல தென் கொரிய நகரங்களில் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டன. ஆனாலும், அமெரிக்கா இதுவரை இதற்காகத் தண்டிக்கப்படவில்லை. தொடர்ந்து தென் கொரியாவில் தனக்குத் தலையாட்டும் பொம்மை அரசுகளை அமெரிக்கா நிறுவிவருவதால், அரசுத் தரப்பு அழுத்தங்களும் இல்லை.

இது மூன்றாம் உலகப் போரா?

இந்தப் பின்னணியில், 1950-களில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடிய அமெரிக்கத் துருப்புகளை எதிர்த்து, வட கொரியா, தென் கொரியா மீது திடீர் போர் ஒன்றை நிகழ்த்தியது. தென் கொரியத் தலைநகர் வரை, வட கொரியா வின் படைகள் முன்னேறின. உடனே, ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டுப் படையை அனுப்பியது. அது பெயருக்குத்தான் பன்னாட்டுப் படை. மூன்று லட்சம் பேரைக் கொண்ட படையில் 2.60 லட்சம் பேர் அமெரிக்கர்கள். அவர்கள் வந்து வட கொரியப் படைகளை விரட்டியடித்ததோடு நில்லாமல், வட கொரியாவுக்குள்ளும் ஊடுருவினார்கள். உடனே, வட கொரியாவுக்கு ஆதரவாக சீனா தன் படைகளை அனுப்பியது. அதை எதிர்பார்க்காத ஐ.நா. படை பின்வாங்கியது. இப்படியாக மூன்று ஆண்டுகள் நீடித்த அந்தப் போரின் முடிவில், சுமார் 20 லட்சம் உயிர்கள் செத்துமடிந்தன.

அப்போதிருந்து இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் பகை தொடர்கிறது. 241 கி.மீ. நீளமுள்ள தென் கொரிய - வட கொரிய எல்லை, உலகின் பதற்றம் மிகுந்த பகுதிகளில் ஒன்று. ஒப்பீட்டளவில் சிறியதும், வளங்கள் குறைந்ததுமான வட கொரியா, தனது உள்நாட்டுத் தேவைகளைச் சமாளிக்கவே திணறிவருகிறது. ஆனாலும், தனது ராணுவ வலிமையை விட்டுக்கொடுக்க வட கொரியா தயார் இல்லை. 2 கோடியே 30 லட்சம் மக்கள் தொகையைக்கொண்ட வட கொரியாவில் ராணுவத்தில் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதைவிடப் பெரிய நாடான தென் கொரியாவில் இதில் பாதிப் படையினர்தான் இருக்கின்றனர் என்றபோதிலும், அமெரிக்கா இருக்கும் தைரியம் அவர்களுக்கு.

இது மூன்றாம் உலகப் போரா?

இந்த நிலையில்தான் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பரில் வட கொரியா அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இப்போதைய பதற்றத்தைத் துவக்கிவைத்ததும் அதுதான். பெரும்பாலான உலக நாடுகள் இதற்காக வட கொரியாவைக் கண்டிக்க, அமெரிக்கா ஒரு படி மேலே சென்று தென் கொரியப் படையினருடன் இணைந்து, வட கொரிய வான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டது. உடனே வட கொரியா, தாங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகவும், தேவை இல்லாமல் சீண்டினால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் எனவும் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தது.

இது மூன்றாம் உலகப் போரா?

தென் கொரியாவின் தற்போதைய அதிபரான பார்க் ஹ்யாங் ஹே, வட கொரியா அதிபர் கிம் ஜாங் இல் இருவருமே ராணுவ சர்வாதிகாரிகளின் வாரிசுகள். ஒரு வெளிப்படையான ஜனநாயகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக இரு நாட்டு மக்களும் அனுபவிக்கவில்லை. அணு ஆயுதம் இருந்தாலும் அதைச் செலுத்தும் ஏவுகணைத் தொழில்நுட்பத் தில் வட கொரியாவுக்கு நிபுணத்துவம் இல்லை. ஆகவே, எப்படிப் பார்த்தாலும் வட கொரியா பலவீனமாகவே இருக்கிறது. உள்நாட்டுப் பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி, ராணுவ நிலைமை என அனைத்து நிலைகளிலும் பலவீனம் அடைந்திருக்கும் வட கொரியாவைச் சீண்டிவிட்டு, வேண்டுமென்றே யுத்தத்தை நோக்கி அமெரிக்கா இழுக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

வட கொரியா சிறிய நாடு என்றபோதிலும், போர் என்று வந்துவிட்டால் சீனாவும் ரஷ்யாவும் அதை ஆதரிக்கக்கூடும். ஏற்கெனவே ஜப்பான், வட கொரியாவை வஞ்சம் தீர்ப்பதற்காக அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. அமெரிக்கப் படைகளின் ராணுவத் தளம் ஜப்பான் தீவுகளில்தான் நிலைகொண்டிருக்கின்றன. ஆகவே, நிலைமை மோசமடைந்து போர் மூண்டால், அது தவிர்க்க முடியாமல் மூன்றாம் உலகப் போராக மாறலாம். லட்ச லட்சமாக மனித உயிர்கள் பலியெடுக்கப்படலாம். இந்தப் பூமி ஆயுதங்களால் சுடுகாடாக்கப்படலாம்.

மத்தியக் கிழக்கில் இராக், சிரியா, மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தான், இப்போது கிழக்கு ஆசியாவில் வட கொரியா... என எல்லாப் பிராந்தியங்களிலும் திட்டமிட்டுப் போரை ஊருவாக்கி ஆயுத வியாபாரம் செய்யும் அமெரிக்காவின் நாசகார அரசியல், இன்னொரு மனிதப் பேரவல அத்தியாயம் படைக்கக் காத்திருக்கிறது!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism