Published:Updated:

தானே துயர் துடைத்தோம்!

விகடன் தானே துயர் துடைப்பு அணி

தானே துயர் துடைத்தோம்!

விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

யற்கையை வெல்ல முடியுமா? ஆம்... முடியும்!

இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் அதனை வெல்வதற்கான வழி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடலூர் வட்டாரத்தில் 'தானே’ தாண்டவத்தின் மூலமாகக் கொல்லப்பட்ட மரங்களுக்குப் பரிகார மாக, மரங்களை மறுபடியும் வைப்பதுதானே சரி. நம்முடைய துயர் துடைப்புப் பணியின் இறுதிக் கட்டமாக அமைந்தவை, மரம் நட்டு வளர்க்கும் திட்டம்!

மரம் நடும் திட்டம், மரம் வைக்கும் திட்டம் என்பதைவிட, மரம் நட்டு வளர்க்கும் திட்டமாக இதனை உருவாக்கினோம். அதற்காகவே, மரம் இழந்த விவசாயிக்கே மரக்கன்றுகளை வழங்கினால், அவர்கள் சொந்த நிலத்தில் வைத்து தனிச் சொத்தாகப் பாதுகாப்பார்கள்தானே. இந்தஅடிப் படையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதற் கான அடித்தளம் இடப்பட்டது. இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து எட்டாயிரம் மரக் கன்றுகளை கடலூர் மாவட்டம் முழுவதும் விகடன் தானே துயர் துடைப்பு அணி விதைத்துள்ளது. அந்த மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் வீசும் காற்று, விகடன் வாசகர்களின் மனிதாபிமானக் காற்றாக இருக்கப்போகிறது!

2011-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி இரவும் அதிகாலையுமான நேரத்தில் கடலூர் மாவட்டத்தை மையம்கொண்டு வீசிய புயலைவிடக் கொடுமையான சூறாவளியில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கியது. பலரும் வீடுகளை இழந்தார்கள். அரை நூற்றாண்டு காலம் சோறு போட்ட பலா மரங்களை இழந்தார்கள். கால் நூற்றாண்டு காலம் பணம் கொழித்த முந்திரி மரங்களைப் பறிகொடுத்தார்கள். கரும்பைப் போல, நெல்லைப் போல இது ஆறு மாத காலச் சாகுபடியாக இல்லாமல், முந்திரியும் பலாவும் மகசூல் கிடைக்க 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நடைமுறை யதார்த்தமும் அவர்கள் வாழ்க்கையை அதிகம் பாதிக்கிறது. அதைவிட முக்கியமாக விழுந்துகிடந்த பலா, முந்திரி மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கும் வழி இல்லாமல் பெரும்பாலான விவசாயிகள் அப்படியே விட்டுவிட்டு கவலையோடு உட்கார்ந்துவிட்டார்கள். 'என்ன செய்வது?’ என்று சித்தம் கலங்கிக் காணப்பட்டார்கள். அவர்கள் துயரங்களில் பங்கேற்கும் விதமாக நடுத்திட்டு, வசனங்குப்பம் ஆகிய இரண்டு கிராமங்களைத் தேர்வுசெய்து, மரங்களை வெட்டிக் கொடுக்கும் பணியைத் தொடங்கினோம். நடுத்திட்டு கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பிலும் வசனங்குப்பத்தில் 220 ஏக்கர் நிலப்பரப்பிலும் விழுந்துகிடந்த 21 ஆயிரம் மரங்களை வெட்டி இது வரை அப்புறப்படுத்தியுள்ளோம். பண்படுத்தி அதனை நிலங்களாக மாற்றிக் காட்டினோம். ''ஒரு ஏக்கர் நிலத்தைச் சுத்தப்படுத்துறதா இருந்தா, எங்களுக்கு 10 ஆயிரம் ரூபா செலவாகி இருக்கும். அதை விகடன் சார்பில் அப்புறப்படுத்திக் கொடுத்தது மாதிரி, இந்த இடத்துல வைக்கத் தேவையான மரங்களையும் நீங்களே வாங்கி நட்டுக்கொடுத்தா, உதவியா இருக்கும்'' என்பதும் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. அதன் அடிப்படையில் மரக் கன்றுகளை வாங்கும் பணியில் மூழ்கினோம்.

தானே துயர் துடைத்தோம்!

நாம் சுத்தப்படுத்திக் கொடுத்தவர் நிலங்களுக்கு மட்டும் அல்லாமல், முந்திரி விவசாயம் செய்யத் தயாராக இருந்தவர்கள் அனைவருக்கும் அதனைத் தருவது என்று முடிவெடுத்தோம். விவசாய நிலங்கள் தவிர, பொது இடங்கள், பள்ளிகள், சாலை ஓரங்கள், அரசு அலுவலகங்களில் வைப்பதற்காக மற்ற மர இனங்களை வாங்கவும் திட்டமிட்டோம்.

நம்முடைய பசுமை விகடன் குழுவினர் பரிந்துரை செய்த வாகை, மந்தாரை, புளியம், பூவரசு, அம்பர்லா, நாவல், மலை வேம்பு, புங்கன், மகிழம்பூ, மகோகனி, ரோஸ்வுட், கொன்றை ஆகிய மரக்கன்றுகளை வாங்கினோம். வேலூர் வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 20 ஆயிரம் மரக் கன்றுகளை வளர்த்து வழங்கினார்கள். மீதம் உள்ள மரக் கன்றுகளை புதுக்கோட்டையில் இருந்து வாங்கி வந்தோம்.

கடலூர் முந்திரி, உலகப் பிரசித்தி பெற்றது. எனவே, அவர்களுக்கு எந்த வகையான முந்திரிக் கன்று வேண்டும் என்று கேட்டபோது, ''அதிக மகசூலைத் தரக்கூடிய வி.ஆர்.எல்.3 ரகம்கொண்ட முந்திரிகள்தான் வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்கள். நடுத்திட்டு, வசனங்குப்பம் பகுதி விவசாயிகளை விருத்தாசலம், ஆண்டிமடம் பகுதிக்கு அழைத்துச் சென்று, உயர்ரக ஒட்டு மற்றும் நாற்றுக் கன்றுகளை வாங்கிவந்தோம். அதனை நடுத்திட்டு கிராமத்தில் பராமரித்தோம். கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் மரக்கன்றை நடுத்திட்டு கிராமத்தில் விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் நிலத்தில் விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் நட்டுவைத்தார். அன்றைய தினம் விஜய் என்பவரது வயலிலும் நட்டுவித்துவிட்டு, வசனங்குப்பம் சென்ற நிர்வாக இயக்குநர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது நிலத்திலும் முந்திரிக் கன்றை நட்டுவித்தார். மேலும், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவியரிடம் மரக்கன்றுகளை வழங் கினார். அவர்கள் தங்கள் பள்ளி வளாகத்தில் நட்டுவைத்து இன்று வரை தண்ணீர்விட்டுக் காத்துவருகிறார்கள்.

தானே துயர் துடைத்தோம்!

நடுத்திட்டு, வசனங்குப்பம், தியாகவல்லி, எஸ்.புதூர், சித்திரப்பேட்டை, ஆண்டாள் முள்ளிப்பள்ளம், காயல்பட்டு, தோண்டூர், கண்ணாரப்பேட்டை, அன்னப்பன் பேட்டை, பூவானிக்குப்பம், பெரியகுப்பம் எனத் திரும்பும் திசை எங்கும் புதிய புதிய மரக்கன்றுகளைக் கொடுத்தோம்.

சாலை ஓரங்களில் நட்டுவிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள், கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு என்.சி.சி., சாரணர் அமைப்புகள் பொறுப்பு எடுத்துக்கொண்டன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுவைக்கப் பட்டதை நித்தமும் ஆனந்தக் கண்ணீரோடு கவனித்து வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

கடலூர் மாவட்ட ஆரம்பக் கல்வித் துறை நம்மிடம் இருந்து 20 ஆயிரம் மரக்கன்றுகளைப் பெற்று, மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் அவற்றை நட்டுவைத்துள்ளது. இது வரை முந்திரிக் கன்றுகள் மட்டும் 63 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 350 முந்திரி விவசாயிகள் நம்மிடம் இருந்து இதனைப் பெற்றுள்ளார்கள். இன்னும் பணிகள் தொடர்கின்றன.

'மரம் வளர்ப்போர் உயிர் வளர்ப்போர்’ என் பார்கள். கடலூர் வட்டாரத்தில் விகடன் வாசகர்களின் நல்லெண்ணம் காரணமாக உயிர் வளர்ப்பு தொடர்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism