Published:Updated:

மூவர் தூக்கு... இனி, என்ன நடக்கும்?

டி.அருள் எழிலன், ஓவியம்: பாரதிராஜா

மூவர் தூக்கு... இனி, என்ன நடக்கும்?

டி.அருள் எழிலன், ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
##~##

ந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நேரத்தில், வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் டெல்லியில் இருக்கும் தகவல் ஆணையரிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகத் தன்னுடைய கருணை மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற கேள்வியைக் கேட்கிறார். இந்தியாவிலேயே சிறையில் இருக்கும் கைதி ஒருவருடன் தலைமை - தகவல் ஆணையர் பேசுவது இதுவே முதல்முறை என்றாலும், பேரறிவாளன் கேட்ட கேள்வி களுக்குப் பதில் கிடைக்குமா என்பது விடை தெரியாத கேள்விதான்!

1993-ல் டெல்லியில் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒன்பது பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பின் குற்றவாளியாக பஞ்சாபில் தனி நாடு கோரிய காலிஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், தேவேந்தர் பால்சிங் புல்லருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2003-ல் ஜனாதிபதிக்குக் கருணை மனு தாக்கல் செய்தார். எட்டு ஆண்டுகளாக அவருடைய கருணை மனு நிலுவையில் இருக்க, புல்லரின் மனைவி உச்ச நீதிமன்றத்தில், 'கருணை மனு மீது முடிவெடுக்க ஏற்படும் இந்தக் கால தாமதம் தூக்கில் நிறுத்தப்பட்டுள்ளவரை அன்றாடம் தூக்கில் ஏற்றுகிறது’ என்று மனுத் தாக்கல் செய்தார். மனுத் தாக்கலைத் தொடர்ந்து சில நாட்களிலேயே புல்லரின் கருணை மனு 2011-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்படுகிறது. விசாரணையின்போது, 'ஏன் அவசர அவசரமாகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டது?’ என உள்துறை அமைச்சகத்தைக் கடிந்துகொண்டார் நீதிபதி சிங்வி. இதற்கு இடையில் பாலாறு வெடிகுண்டு வழக்கில் சைமன், ஞானபிரகாசம், மாதையன், பிலவேந்திரன் ஆகியோரும் ஒன்பது ஆண்டுகள் கால தாமதமாகக் கருணை மனு நிராகரிக்கப்பட்ட கோரிக்கையோடு உச்ச நீதிமன்றத்தில் போய் நிற்க, புல்லரின் வழக்கைப் பொறுத்தே இவர்களின் கோரிக்கையிலும் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று இவர்களின் தூக்குக்கும் ஆறு வாரங்கள் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இப்போது புல்லரின் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. 'கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால், அந்த முடிவின் மீது கேள்வி எழுப்பும் மனுதாரரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை’ என்று புல்லரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இனி, அடுத்தடுத்து கால தாமதத்தைக் காரணம் காட்டி... தூக்குத் தண்டனையில் இருந்து விலக்குக் கோரிய 14 பேரின் வழக்குகளும் அடுத்தடுத்து தீர்ப்புகளுக்காக வரவிருக்கும் சூழல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூவர் தூக்கு... இனி, என்ன நடக்கும்?

இந்த நிலையில், மூவர் தூக்குக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியோடு ஆஜரான வழக்கறிஞர் குழுவில் ஒருவரான சந்திரசேகரனிடம், 'புல்லரின் தீர்ப்பு மூவரின் மேல் முறையீட்டு மனுவைப் பாதிக்குமா?’ என்று கேட்டபோது...

''எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக புல்லரின் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. குஜராத்தில் திருவேனி பென்... 'தன் கணவருடைய கருணை மனு மீது முடிவெடுக்க கால தாமதம் ஏன்...’ என்ற கேள்வியோடு உச்ச நீதிமன்றம் செல்ல, 'தூக்கை ஆயுளாகக் குறைக்க  இரண்டாண்டு கால தாமதமே போதுமானது’  என்று தூக்கை ஆயுள் தண்டனையாக மாற்றியது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கை புல்லர் மனு வில் சுட்டிக்காட்டியபோது... 'இது தடா என்கிற சிறப்புச் சட்டத்தின் கீழான வழக்கு என்பதால், இதுவும் அதுவும் ஒன்றல்ல!’ என்பது பதிலாகக் கிடைத்திருக்கிறது. ராஜீவ் வழக்கைப் பொறுத் தவரை தடா சட்டத்தின் கீழ் ராஜீவ் வழக்கை விசாரித்தது செல்லாது என்றும், இந்த வழக்கை விசாரிக்க தீவிரவாதச் சட்டமோ, அதற்குச் சமமான சட்டங்களோ தேவையில்லை. சாதாரண தண்டனைச் சட்டங்களே போதுமானது என்றும் நீதிமன்றம் சொல்லியிருப்பதால், புல்லரின் வழக்கு எந்த விதத்திலும் மூவர் தூக்கைப் பாதிக்காது என்றே நம்புகிறேன். உண்மையில் புல்லரின் மனு தூக்குத் தண்டனை தொடர்பாக நீதிமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் நடைபெறும் விவாதங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறது. விரைவில் தூக்குத் தண்டனைக்கே விடை கிடைக்கும்!'' என்றார்.

காலதாமதத்துக்குக் காரணமாக நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன காரணங்களில் ஒன்று, உலகெங்கிலும் இருந்து  குடியரசுத் தலைவரின் செயலகத்துக்குத் தனி நபர்கள், அரசியல் சமூக அமைப் புகள், மனித உரிமை அமைப்புகள் என ஏராளமானோர் அனுப்பும் கருணை மனுக்களை வாசித்து முடிப்பதிலேயே காலதாமதம் ஏற்ப டுகிறது என்றது மத்திய அரசு. அதை நீதிமன்றமும் சுட்டிக்காட்டி யுள்ளது. இந்தியாவிலேயே முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்குக்குத்தான் உலகெங்கிலும் இருந்து சுமார் 8,000 கோரிக்கை மனுக்கள் ஜனாதிபதியின் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மூவர் தூக்கு... இனி, என்ன நடக்கும்?

உச்ச நீதிமன்றத்தில் 14 அமர்வுகள் உள்ளன. தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரும் ஒருவரின் மனு, எந்த நீதிபதியின் மேஜையில் தீர்ப்பு எழுதப்படுகிறது என்பதைப் பொறுத்தே பெரும்பாலும் தீர்ப்புகள் உள்ளன என்கிற நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கை எதிர்கொள்ளும் மூவரின் வழக்கும் புல்லரின் மனுவை நிராகரித்த நீதிபதி சிங்வியின் முன்பே வரவிருக்கிறது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் தமிழகத்தில் மௌனம் நிலவுகிற நிலையில் வேலூர் சிறையில் உள்ள மூவரிடமும் வழக்கறிஞர்கள் மூலமாகப் பேசினோம்.

பேரறிவாளன்: ''அரசாங்கத்தாலும் நீதிமன்றங்களாலும் முடிவுகள் எடுக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும், நான் நிரபராதி என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். என்னை நம்பிக்கையோடு நகர்த்திச் செல்லும் என் தாயார் அற்புதம்மாளுக்கு எந்தப் பின்னடைவும் வந்துவிடக் கூடாது என்றே நான் கவலை அடைகிறேன்.  நீதியின்பாலும் நீதிமன்ற அறத்தின்பாலும்தான் எங்களைப் போன்றோர் கடைசி வரை நம்பிக்கை கொள்ளமுடியும், தமிழக மக்களும் எங்கள் உயிரின் மீது அக்கறை கொண்டிருப்போரும் எங்களுக்கு அந்த நம்பிக்கையை வழங்குகிறார்கள். என் தாயார் மீண்டும் ஜனாதிபதிக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார். நான் தமிழக ஆளுநருக்கு மீண்டும்கருணை மனு அனுப்பியிருக்கிறேன். தமிழக முதல்வரும் எங்களுக்கு ஆதரவாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். தூக்கு மர நிழலில்ஆடிக் கொண்டிருக்கும் ஒருவனின் மன உணர்வுகள் இதுவல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?'' என்று கேட்கிறார் பேரறிவாளவன்.

தனது படிப்பில் அதிகக் கவனம் செலுத்தும் முருகன் தன் மனைவி நளினியை புல்லர் வழக்குத் தீர்ப்புக்குப் பின் சந்தித்து வந்திருக்கிறார். ''ஜூன் மாதத்தோடு நான் சிறைக்கு வந்து 22 ஆண்டுகள் முடிகின்றன. என் குழந்தை அரித்ராவுக்கு 20 வயது ஆகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை களின் முன்னரும் பின்னரும் என் வாழ்க்கை தொடர்பாகப் பல விதமான குழப்பங்களுக்கு ஆளானேன். 19 பேர் தீக்குளித்தும் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுமே ஒன்றரை லட்சம் மக்கள் கொலையை நிறுத்த முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற மன உணர்வே எஞ்சியிருந்தது. ஆனால், மூவர் தூக்குக்கு எதிராக எழுந்த எழுச்சி நம்பிக்கை அளித்தது. உண்மையில், இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை. இது இந்த வழக்கோடு தொடர்புடையவர்களுக்கும் தெரியும் என்கிற நிலையில், 'நான் உண்மையைப் பேசுகிறேனா, பொய் பேசுகிறேனா?’ என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி என் விஷயத்தில் அரசே ஒரு முடிவுக்கு வரட்டும்!'' என்று முடித்துக்கொண்டார் முருகன்.

சாந்தனின் தந்தை இறந்த செய்தியை அவரிடம் சொன்னபோது, அதைச் சலனமற்று எதிர்கொண்டிருக்கிறார் சாந்தன். ''கடவுளிடம்தான் நான் தஞ்சம் அடைந்திருக்கிறேன். 2,000 ஆண்டு கால ஆன்மிகப் பாரம்பரியம் மிக்க இந்தியாவில், நான் நம்புகிற கடவுள் என்னைக் காப்பாற்றுவார்'' என்கிறார் சாந்தன் சாந்தமாக.

புல்லர் வழக்குக்கும் முந்தைய பச்சன் சிங் வழக்கில் தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. எந்தக் குற்றத்துக்கு எல்லாம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறதோ, அந்த வழக்குகள் அனைத்தும் 'அரிதினும் அரிதான’ பிரிவின் கீழ் அடங்குகிறது. 'அரிதினும் அரிதான’ என்ற சொல்லுக்குச் சட்டரீதியான விளக்கங்களோ, பொருளோ அரசியல் சட்டத்தில் ஏதும் இல்லாத நிலையில், அது தீர்ப்பை எழுதும் நீதிபதியின் மத, கலாசார, சமூக விழுமியங்கள் சார்ந்த ஒன்றாகிவிட்டது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism