Published:Updated:

நெஞ்சம் மறப்பதில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை!

Published:Updated:
நெஞ்சம் மறப்பதில்லை!
##~##

‘தமிழ்நாட்டுல ஆரம்பத்துல இருந்தே ஒரத்த கொரல்தான்... ஆண் கொரல். சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே.டி, சௌந்தரராஜன், கோவிந்தராஜன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குல்லா! ஆனா, இங்கெயும் வடக்கெ மாரி ஸாஃப்ட்டா பாடலாம்னு காமிச்சது ஏ.எம்.ராஜாவும், சீனிவாசனும்தான்!'' - 80 வயதைக் கடந்த எங்கள் இசையாசிரியர் கிருஷ்ணன் சார், பி.பி.ஸ்ரீனிவாஸை, சீனிவாசன் என்றுதான் சொல்லுவார். 'சீனிவாசன் லேசுப்பட்டவன் இல்லெடே! சம்பிரதாயமா சங்கீதம் படிச்சவன். நெளிவு சுளிவு தெரிஞ்சவன். சஹானால ஒரு பாட்டு படிச்சிருக்காம்லா! அது என்ன பாட்டு?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.பி.ஸ்ரீனிவாஸ் அத்தனைப் பாட்டுகள் பாடியிருந்தாலும் எங்கள் ஆசிரியரின் விருப்பப் பாடல் 'வீரஅபிமன்யூ’ திரைப்படத்தின் 'பார்த்தேன்... சிரித்தேன்’ பாடல்தான். அவர் சொல்வதும் சரிதான். வடநாட்டின் முகம்மது ரஃபி போன்றவர்களைப் போல நாமும் மென்மையாகப் பாடலாம் என்பதைப் பாடிக் காட்டிய தென் இந்தியப் பாடகர்களில் ஸ்ரீனிவாஸ் முக்கியமானவர்.

பி.பி.ஸ்ரீனிவாஸை 'பெண்களின் பாடகர்’ என்று விளிப்பான், கணேசண்ணன். அதற்கு அவன் சொல்லும் காரணம் வித்தியாசமானது. 'பி.பி.எஸ்ஸோட எல்லாப் பாட்டுமே, தனக்காகப் பாடுனதா எல்லாப் பொம்பளையுமே நெனப்பாங்கடே! ஏன்னு சொல்லு பாப்போம்? அவர் கதாநாயகியப் பாத்துப் பாடுற காதல் பாட்டு மட்டுமா பாடுனாரு! தங்கச்சி காதலுக்கும் சேத்துல்லாடே பாடுனாரு’. உண்மைதான்!

'போலீஸ்காரன் மகள்’ திரைப்படத்தின்,

'இந்த மன்றத்தில் ஓடிவரும்,
இளம்தென்றலைக் கேட்கின்றேன்’
என்ற பாடலை ரகசியக் குரலில், தன் காதலனை நினைத்து, அந்தரங்கமாகத் தன்னை மறந்து ஓர் இளம்பெண் பாடிக்கொண்டு இருக்க, அவளது அண்ணன் குரல் இடையில் வந்து சேர்கிறது.

 'தன் கண்ணனைத் தேடுகிறாள்
மனக் காதலைக் கூறுகிறாள்...

இந்த அண்ணனை மறந்துவிட்டாள்’ என்று தன் தங்கைக்கு வலிக்காமல், அவளைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காமல் பாடுவதற்கு ஸ்ரீனிவாஸின் குரலாலேயே முடிகிறது.  

பெண்களின் மன உணர்வுகளை மதிக்கும் வண்ணம், அவர்களுக்கான பாடல்கள் பலவற்றை பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்தான் பாடியிருக்கிறது. இத்தனைக்கும் பெண்களை வருந்தவைக்கும் கடுமையான வரிகளைக்கொண்ட பாடல்கள் அவை.

'என்னருகில் வராதே...
உன் விருப்பம் பலிக்காது’
என்று பெண்ணின் காதலை உதறித் தள்ளும் பாடலைக்கூட, மென் குரலில் சொல்லி, அந்தப் பெண்ணைச் சமாதானப் படுத்தும் விதமாகவே ஸ்ரீனிவாஸ் பாடுகிறார்.

நெஞ்சம் மறப்பதில்லை!

காலத்தால் அழியாப் புகழ்பெற்ற, 'நிலவே என்னிடம் நெருங்காதே’ என்ற பாடலின் வரிகள் அனைத்தையும் ஸ்ரீனிவாஸின் பாடும் முறையினால், 'வேண்டாமய்யா உன் காதல்... இந்தக் குரலே போதும்’ என்று எந்தவொரு பெண்ணுமே சமாதானமாகிவிடுவார்.

'அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் எனையே படைத்துவிட்டான்’
என்கிற வரிகளில் உள்ளதையும்விட, அதிக வலியை, ஸ்ரீனிவாஸின் குரல் நமக்குக் கொடுக்கும். அவரது பெரும்பாலான பாடல் வரிகளின் பொருளை அவரது பாடும் முறையினால் பன்மடங்கு வலிமையுள்ளதாக ஆக்கியிருக்கிறார்.

மெல்லிசைக் கச்சேரிகளில் எல்லாக் குரலிலும் பாடும் பாடக, பாடகியர் இருப்பர். ஆனால், பி.பி.ஸ்ரீனிவாஸின் குரலைப் போன்ற ஒரு குரலை இதுவரை நான் கேட்டது இல்லை. காரணம், ஸ்ரீனிவாஸின் எல்லாப் பாடல்களுமே கேட்பதற்கு எளிமையானவை. பாடுவதற்குக் கடினமானவை. அவரது புகழ்பெற்ற 'காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடலை கல்லிடைக்குறிச்சியில் ஒரு பாடகர், பாட முயன்று கண்டசாலா குரலில் இருமி வெளியேறிவிட்டார். மேடைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த கச்சேரி மேலாளர் சொன்னார். 'அடுத்த மட்டம், பி.பி.எஸ். மாரி தலைக்கு டர்பனும், சட்டைப் பைல ஏளெட்டு கலர்ல பேனாவும் சொருவிட்டு வா. அப்பமாது நீ அவரு கொரல்ல பாட வந்தி ருக்கவன்ங்கிறத ஜனங்க புரிஞ்சுக்கிடட்டும்’!

ஸ்ரீனிவாஸின் குரலை எளிதில் மற்றவர்களால் பாட முடியாமல் போவதற்குக் காரணம், ஸ்ரீனிவாஸ் எந்த ஒரு பாடலையுமே தொண்டையிலிருந்து பாடாமல் மனதிலிருந்து பாடியவர். தனக்குப் பேசும் திறன் இல்லையே என்று புழுங்கிக் கலங்குகிற ஒரு பெண்ணைச் சமாதானப்படுத்தி, வர்ணித்து எழுதப்பட்ட கவிஞரின் வரிகளை ஸ்ரீனிவாஸால் மட்டுமே, அந்தப் பேதைப் பெண் ணின் மனதுக்குள் சென்று அமர்ந்து பாட முடிந்தது.

'முத்துச் சரமே...
நீ பக்கமிருந்தால் வெறென்ன வார்த்தை  
சொல்ல மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் 
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்’.
இந்த வரிகளை ஸ்ரீனிவாஸின் குரலில் கேட்ட பிறகு, நிச்சயம் அந்தப் பெண்ணுக்குத் தான் ஓர் ஊமை என்பது மறந்தே போயிருக்கும்.

மனதிலிருந்து வழியும் அவரது குரல், நம்பிக்கைத் துரோகம் செய்த பெண்ணைக் கதறி அழவும் வைத்திருக்கிறது. அப்போதும் அவர் குரல் வலிந்து வார்த்தைகளை உச்சரிப்பது இல்லை. 'வாழ்க்கைப் படகு’ திரைப்படத்தில் ஒரு சின்னக் குழந்தையை வைத்துக்கொண்டு 'சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ என்று நாயகன் பாடுவதாக அமைந்துள்ள பாடலில்,

நெஞ்சம் மறப்பதில்லை!

'பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா,
புன்னகையும் வேஷமடா,
நன்றிகெட்ட மாந்தரடா,
நானறிந்த பாடமடா’
என்று உயிர் வலிக்கப் பாடிவிட்டு, அடுத்த வரியாக,

'பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லையென்று துன்பமடா’
என்று ஸ்ரீனிவாஸ் பாடும்போது, கடைசி வரியையும்விட முந்தைய வரிகள் மிருதுவாக ஒலிப்பதை நாம் உணரலாம். இத்தனைக்கும் அத்தனை கசப்பை உமிழும் வரிகள் அவை. அதற்குக் காரணம், ஸ்ரீனிவாஸின் குரலின் அடிநாதமாக அன்பும், சாந்தமுமே பொதிந்திருக்கின்றன!

தன்னம்பிக்கையை விதைத்த அவரது பாடல்களான 'மயக்கமா... கலக்கமா’ மற்றும் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ போன்ற பாடல்களை, வாழ்க்கையைக் கண்டு அஞ்சுகிற, எதிர்நீச்சல் போடத் தயங்கிப் பின்வாங்குகிற உள்ளங்களுக்காக, அவர்களின் தொனியிலேயே பாடி, அவர்கள் மனதில் அந்த வரிகளைப் பதியவைத்திருக்கிறார். கறுப்பு-வெள்ளை காலத்தில் அவர் பாடிய அந்தப் பாடல்களிலும் சரி... வண்ணத் திரைப்படமான 'ஊமை விழிகள்’ திரைப்படத்தின்,

'தோல்வி நிலையென நினைத்தால்,
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?’
என்று பாடியபோதும் சரி, புழுங்கித் தவித்துக்கிடக்கும் மனிதர் மனதுக்குள் ஊடுருவிச் செல்கிறது அவரது குரல். உணர்வுபூர்வமாக உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்கிற இந்த வரிகளையும், தனது மாறாத சிநேகத்துடனும், சாந்தத்துடனும் உள்ளத்திலிருந்து பாடியிருக்கிறார் ஸ்ரீனிவாஸ்.

இன்றைக்கும் நள்ளிரவு நேரப் பண்பலைகளில், குறுந்தகடுகளில், தொலைக்காட்சிகளில் பி.பி.ஸ்ரீநிவாஸின் அன்பொழுகும் குரலைக் கேட்டு, அதனுடன் அந்தரங்கமாக உறவாடிக்கொண்டிருக்கும் அத்தனை ஆயிரம் பேரில் யாரேனும் ஒருவரிடம், 'பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமாகிவிட்டார்’ என்று சொல்லிப் பாருங்கள்... நம்ப மாட்டார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism