Published:Updated:

தானே துயர் துடைத்தோம்!

விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி

தானே துயர் துடைத்தோம்!

விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி

Published:Updated:
தானே துயர் துடைத்தோம்!
##~##

‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காமல் இருக்க முடியுமா நம்மால்?’ என்று விம்மிப் பொருமிய லட்சக் கணக்கான விகடன் வாசகர்களின் உதவியோடு ஒரு தலைமுறையை  மீட்டெடுத்திருக்கிறது விகடனின் 'தானே’ துயர் துடைப்புத் திட்டம்! கடலூர் மற்றும் புதுவை பகுதியின் வளத்தை வாரிச் சுருட்டிய 'தானே’ சீற்றத்தைக் களைவதில் கடந்த ஒரு வருடமாக முழு முன்னெடுப் புடன் பணியாற்றிவந்தது விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி. மருத்துவ முகாம்கள், வீழ்ந்த மரங்களை மண்ணில் இருந்து வேரோடு அகற்றுவது, குடியிருப்புப் பகுதிகளை நிர்மாணித்தல், அத்தியாவசியக் குடும்பப் பொருட்களை வழங்குதல், பள்ளிகளைச் சீரமைத்தல், கல்விப் பொருட்களை வழங்குதல் என அரங்கேறிய நலத் திட்ட உதவிகளால் பயனடைந்த பயனாளிகள் ஏகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விழா கடந்த மார்ச் 30-ம் தேதி கடலூரில் நடந்தது. மஞ்சக்குப்பம் விக்னேஷ் மஹாலுக்கு காலை 9 மணி முதலே  சொந்தங்களின்திருமணத்துக்கு வருவதைப் போல பயனாளிகள் வந்து குவியத் தொடங்கினார்கள். சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தார்கள். முழுக்க முழுக்க நம் திட்டத்தால் பயன் அடைந்த மக்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக இதனை அமைத்திருந்தோம். பெரியகுப்பம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் சீருடையுடன் வந்திருந்தார்கள். ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பங்கேற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பேச்சாளரும் எழுத்தாளருமான தமிழருவி மணியன் அழைக்கப்பட்டு இருந்தார். 'தானே’ துயர் துடைப்புத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் தான் பங்கேற்கும் கல்லூரி விழாக்கள், பொது மேடைகளில் விகடனின் இந்தத் திட்டம்பற்றிச் சொல்லி, நிதி திரட்டி ஒப்படைப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தவர் தமிழருவி மணியன்!  

தானே துயர் துடைத்தோம்!

விழாவில் கடந்த ஓர் ஆண்டு காலத்தில் கடலூர் வட்டாரத்தில் விகடன் மேற்கொண்ட களப்பணிகள் அனைத்தும் காணொளியாகத் திரையிடப்பட்டது. 2011-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி 'தானே’ புயல் தாக்கியதில் தொடங்கி... கடந்த மாதம் 1,08,000 மரங்களை நாம் நட்டு முடித்தது வரையிலான அனைத்து நிகழ்வுகளும் வரிசையாக காட்சிகளாக வந்துபோயின. தடுக்க முடியாத ஆனந்தக் கண்ணீருக்கிடையே 'தானே பாதித்த சமயம்’, 'தானே பாதிப்புக்குப் பின்’னான தங்கள் நிலைமையின் வித்தியாசம் நினைவில் நிழலாட, கைதட்டி ஆர்ப்பரித்தார்கள் பயனாளி கள். அவர்களில் சிலர் மன்றத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

நடுத்திட்டு கிராமத்தைச் சேர்ந்த அழகிய தாடாளசாமி, ''தானே புயலால் பாதிக்கப்பட்ட நாங்கள் இன்று மலர்ந்த முகத்தோடு உட்கார்ந்துள்ளோம். காலத்தினால் செய்த  உதவி சிறிதென்றாலும் அது இந்தப் பிரபஞ்சத்தைவிடப் பெரியது. தஞ்சையில் வறட்சி வந்தபோதும் குஜராத்தில் பூகம்பம் வந்தபோதும் விகடன் வாசகர்கள் உதவி செய்தார்கள். இப்போது எங்களுக்கும் உதவி செய்துள்ளார்கள். தமிழகத்தில் மக்க ளுக்காகச் செயல்படும், உழைக்கும் மக்கள் பத்திரிகை என்றால், அது விகடன் மட்டுமே!'' என்றார் பூரிப்பு பொங்க.

தியாகவல்லியைச் சேர்ந்த உதயச்சந்திராவின் பேச்சு உருக்கமாக இருந்தது. ''தானே புயல்ல எங்க வீடு மொத்தமா போச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை. அப்பதான் ஆனந்த விகடன்ல இருந்து வந்து பார்த்தாங்க. 'உங்களுக்கு வீடு கட்டித் தர்றோம்’னு சொல்லிட்டுப் போனாங்க. சொன்ன மாதிரியே முதல் வீடா எங்களுக்குக் கட்டிக்கொடுத்தாங்க. எங்க ஊர்ல மட்டும் 44 பேருக்கு கட்டிக் கொடுத்திருக்காங்க. எங்க சொந்தக்காரங்களோ, அரசு அதிகாரிகளோகூட வந்து என்ன, ஏதுன்னு விசாரிக்காத சமயம், யார், எவர்னே தெரியாதவங்க மூலம் எனக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கு விகடன்... மனசுக்குள்ள என்னன்னவோ தோணுது. ஆனா, எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியலை'' என்றபடி கதறி அழத் தொடங்கிவிட்டார்.

தானே துயர் துடைத்தோம்!

குறிஞ்சிப்பாடி ஈழ மக்கள் சார்பில் குணா பேசினார். ''தானே புயலால் நாங்கள் பாதிக்கப்பட்டபோது பல தொண்டு நிறுவனங்கள் வந்து உதவி செய்தன. தாங்கள் கொண்டுவந்த பொருட்களை எங்களுக்குக் கொடுத்து விட்டுப்போனார்கள். ஆனால், விகடன் சார்பில் வந்தவர்கள் எங்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்று விசாரித்து அறிந்து, அவற்றை வாங்கி வந்து கொடுத்தார்கள். அதேபோல் குறிஞ்சிப்பாடி, அம்பலவாணன் பேட்டை முகாமைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியருக்கும் கல்விக் கட்டணத்தை விகடன் சார்பில் கட்டினார்கள். நாங்கள் இங்கே கஷ்டம் இல்லாமல் வாழ்வதற்கு எத்தனையோ பேர் உதவி செய்துவருகிறார்கள். ஆனால், எங்கள் நாட்டில் அமைதி திரும்பியதும் அங்கே போய் வாழத்தான் நாங்கள் விரும்புகிறோம். அப்படி எங்கள் நாட்டுக்கு நாங்கள் போனாலும் விகடன் வாசகர்களை மறக்க மாட்டோம்!'' என்றபோது பலத்த கைதட்டல் அரங்கை அதிரச் செய்தது!  

நடுத்திட்டு, வசனங்குப்பம் ஆகிய பகுதிகளில் விழுந்துகிடந்த மரங்களை நாம் அப்புறப்படுத்திக் கொடுத்தோம். அவர்கள் சார்பில் வசனங்குப்பம் செல்வராஜ் பேசினார். ''விகடன் சார்பில் இப்படி உதவிகள் செய்து தரப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நான் அவர்களது அலுவலகத்துக்குச் சென்றேன். 'என்ன உதவி வேண்டுமோ அதனைக் கேளுங்கள்’ என்று அவர்கள் சொன்னார்கள். 'விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு எங்களிடம் வசதிகள் இல்லை. எனவே, அதனை அப்புறப்படுத்திக் கொடுங்கள்’ என்று கேட்டேன். அதன்படி அவர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பத்தினருக்கு உதவினார்கள். வேலை இல்லாமல் தவித்த எங்கள் ஊர் மக்களுக்கு இரண்டு மாத காலம் வேலை கொடுத்து சம்பளம் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுவதும், பொது மக்க ளின் பாதிப்புக்குக் குரல் கொடுப்பதும்தான் பத்திரிகைகளின் கடமை என்ற புரிதலையே மாற்றிக் காட்டியது விகடனின் பெருமை!'' என்று நெகிழ்ந்தார்.

தானே துயர் துடைத்தோம்!

பெரியகுப்பம் பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் பேசும்போது, ''எங்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. ஜன்னல்கள் அனைத்தும் உடைந்துவிட்டன. சுற்றுச்சுவர் அப்படியே சாய்ந்துவிட்டது. மாணவியர் கழிவறை இடிந்துவிட்டது. இவை அனைத்தையும் எப்படி மராமத்து செய்யப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. விகடன் சார்பில் வந்து பார்த்தார்கள். ஏதாவது ஒரு சில காரியங்களைச் செய்துகொடுப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர்கள் எங்கள் பள்ளியையே முழுமையாகப் புதுப்பித்து வழங்கினார்கள். சுற்றுச்சுவர், கழிவறையைக் கட்டிக் கொடுத்தார்கள். அரசுப் பள்ளியை, இப்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியைப் போல மாற்றிக் காட்டிவிட்டார்கள்'' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடந்த ஓர் ஆண்டு காலம் நாம் செய்த அனைத்துப் பணிகளுக்குமான ஒப்புதல் வாக்குமூலமாக இவை அமைந்திருந்தன. தமிழருவி மணியன் அந்த மக்களிடம் உற்சாக மூட்டும் வகையில் பேசினார்...

''என்னுடைய 40 ஆண்டு கால பொதுவாழ்வில் பல்லாயிரம் மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால், வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம் இது. புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விகடன் சார்பில் செய்துதரப்பட்ட உதவிகளைக் காட்சிப் படமாகப் பார்த்தபோது என் கண்ணில் ஈரம் கசிந்தது. எப்பேர்ப்பட்ட விளம்பரமும் ஆரவாரமும் இல்லாமல் ஆத்மார்த்தமாக இந்தச் சேவையைச் செய்து முடித்துள்ளார்கள். அவர்களைக் கையெடுத்து வணங்குகிறேன். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை இயன்ற அளவு இவர்கள் முயன்று செய்துள்ளார்கள். 'அன்பில் சிறந்த தவமில்லை’ என்றான் பாரதி. அத்தகைய அன்பு ஆனந்த விகடனின் தலைவரில் இருந்து அங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கி வழிவதால்தான் இத்தகைய நிவாரணப் பணிகளைச் செய்ய முடிகிறது.

'வாசகர்களே... கடலூர் மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டு ஆனந்த விகடன் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அப்படி இருக்காமல் முதலில் தன் பங்காக 10 லட்சம் ரூபாயைக் கொடுத்து விகடன் நிர்வாக இயக்குநர் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதன் பிறகு விகடன் வாசகர்கள் சுமார் 2 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தார்கள். இந்தத் திட்டப் பணிகளைச் செய்வதற்கான செலவினங்களை, குவிந்த நிதியில் இருந்தே விகடன் எடுத்துக்கொண்டி ருந்தாலும் யாரும் குற்றம் சொல்ல மாட்டார் கள். ஆனால், அந்த நிர்வாகச் செலவுகளுக்காகச் செலவான  லட்சங்களையும் கூட விகடனே ஏற்றுக்கொண்டது. ஏனென்றால், வாசகர்கள் கொடுத்த பணத்தில் ஒரு பைசாகூடக் குறையாமல் மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று விகடன் நினைத்தது. அதனால்தான் நானும்கூட களமிறங்கி நிதி  திரட்டிக்கொடுத்தேன். அதனை வைத்துப் பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளார்கள்.

சக மனிதருக்காகச் சிந்திப்பதுதான் வாழ்வு. இந்த உதவியைப் பெற்ற நீங்கள், இதே சிந்த னையை அடுத்தவருக்குக் கைமாற்ற வேண்டும். 'உனக்கு நீயே ஒளியாவாய்’ என்றார் புத்தர். அந்த வழியில் வாழ்க்கையைத் தொடங்குங்கள்!'' என்று உணர்ச்சிமயமாகப் பேசினார் தமிழருவி மணியன்.

தானே துயர் துடைத்தோம்!

விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் நிறைவுரை ஆற்றினார். '' 'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே’ என்ற தாயுமானவர் வாக்கை வெறும் வாய் வார்த்தையாகக்கொள்ளாமல் செயல்படுத்திக் காட்டுபவர்கள் விகடன் வாசகர்கள். 15 மாதங்களுக்கு முன் வீசிய புயல் 15 ஆண்டுகள் மறக்க முடியாத சுமையை ஏற்படுத்திப் போய்விட்டது. இதனை வெறும் செய்தியாக மட்டும் பார்க்காமல், ஒரு கட்டுரை மட்டும் எழுதி முடித்துவிடாமல் அந்த மக்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தோம். எந்த சேவை முயற்சிகளை நாங்கள் எடுத்தாலும் எங்கள் வாசகர்கள் தோள்கொடுப்பார்கள். 1993-ல் லத்தூர் பூகம்பம், 2001-ல் குஜராத் பூகம்பம், 2003 தஞ்சை வறட்சி, 2005-ல் சுனாமி, இப்போது 'தானே’... இப்படி எப்போது வேண்டுகோள் வைத்தாலும் கொடைத் தன்மையுடன் நிதி வழங்குவார்கள் எங்களது வாசகர்கள். அந்த வாசகர்கள் அனைவருக்கும் ஆத்மார்த்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழருவி மணியன் நம் பணியோடு தன்னையும்இணைத்துக் கொண்டார். விகடன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. கோஷம் போடலாம், நிதி திரட்டலாம். ஆனால், களத்தில் இறங்கி நாம் விரும்பிய செயலைச் செய்து முடிக்கும் களப்பணி என்பது வலி மிகுந்த வேதனை. அந்தச் சாதனையைச் சாதித்த எங்களது சகாக்கள் டி.கலைச்செல்வன், க.பூபாலன், நா.இள.அறவாழி, ஜெ.முருகன், எஸ்.தேவராஜன் ஆகியோருக்கு நன்றி. இத்தகைய ஊழியர்களை, வாசகர்களைப் பெற்றிருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்!'' என்றவர், ''முடியும் ஒவ்வோர் இரவும் விடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி முடித்தார்.

பெரியகுப்பம் பள்ளி மாணவியரின் தேசியகீதத்துடன் விழா முடிய, நம் பணி தொடர்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism