Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

கஷ்டப்பட வேண்டாம் பிரதமரே!

''அரசியல்வாதிகள்தானே நம் நாட்டின் அனைத்துச் சீர்கேடுகளுக்கும் காரணம்?''  

நானே கேள்வி... நானே பதில்!
##~##

''மொரார்ஜி தேசாய் மத்தியத் தொழில் துறை மந்திரியாக இருந்தபோது, அயல்நாட்டுத் தையல் இயந்திர நிறுவனம் ஒன்று இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதி வேண்டியபோது மறுத்துவிட்டார். 'அந்நிய முதலீட்டுக்கு நீங்கள் விரோதியோ?’ என்று கேட்டபோது, மொரார்ஜி சொன்னார், 'எனக்கு முதலில் என் தேசம்தான் முக்கியம். இப்போதுதான் எங்கள் நாட்டில் தையல் இயந்திரங்கள் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரம் வெளிநாட்டு நிறுவனத்தை அனுமதித்தால், பெரிய முதலீட்டுடன் அவர்கள் தொழில் செம்மையாகும். எங்கள் நாட்டுத் தொழில் சீரழியும். எங்கள் நாட்டுத் தயாரிப்புகள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் என் முதல் விருப்பம்!’

இப்படி கோகோ கோலா உள்ளே வராமல் தடுத்ததும் இதே மொரார்ஜி தேசாய்தான். ஆக, ஆவதும் அரசியல்வாதிகளாலே, அழிவதும் அரசியல்வாதிகளாலே!''

- அ.யாழினி பர்வதம், சென்னை.

''உள்ளாட்சித் தேர்தலை அடுத்து கூட்டுறவு சங்கத் தேர்தலையும் அ.தி.மு.க. அரசு உற்சாகமாக நடத்துகிறதே?''

''இன்னொரு லட்டு தின்ன ஆசைதான்!''

- சுஜாதா, சென்னை-61.

'' 'நட்புக்கோர் இலக்கணம்’ என்று எதைக் குறிப் பிடலாம்?''  

''இந்தியா - இலங்கை நட்பைத்தான்!''

- ஆர்.ஆர்.உமா,  திசையன்விளை.

'' 'ராகுல் பிரதமராக விரும்பினால், இப்போதே வழிவிடத் தயார்’... 'கூட்டணிக் கட்சி ஆட்சி

நானே கேள்வி... நானே பதில்!

நடத்துவது எளிதல்ல’ என்றெல்லாம் புலம்பத் தொடங்கியிருக்கிறாரே

 பிரதமர் மன்மோகன் சிங்?''

'' 'விவசாயம் செய்வது சிரமமாக இருந்தால் வேறு தொழிலைப் பாருங்கள்’ என்று சொன்ன பிரதமரே, இப்போது நாங்கள் சொல்கிறோம்... 'பிரதமராக இருப்பது கஷ்டமாக இருந்தால், நீங்கள் வேறு தொழிலைப் பாருங்கள்!''

- காந்தி லெனின், திருச்சி.

''ஊழல் இல்லாத நாடுகள் வரிசையில் டென்மார்க் முதல் இடம் பெறுகிறதாமே?''

''அப்போ அது '10 மார்க்’ இல்லை... '100 மார்க்!''

- ராகவ் மகேஷ், தஞ்சாவூர்.

''தவறாகப் பேசிவிட்டால் எப்படிச் சமாளிப்பது?''

''சிம்பிள்... தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார் கள் என்று ஒரே போடு!''

- ஆர்.ஸ்ரீவித்யா, குன்டகல்.

''எதை நினைத்தால் பயமாக இருக்கிறது?''

''அலுவலகத்திலும் சரி... சொந்த வாழ்க்கை யிலும் சரி... எழுதும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. எல்லாவற்றுக்கும் கணினியைப் பயன்படுத்துகிறோம். ஒரு பக்கம் முழுதாக எழுதலாம் என்று அமர்ந்தால், கை நடுங்குகிறது. எதிர்காலத்தில் எழுதுவதே மறந்துவிடும் போலிருக்கிறது!''

- ஜெ.கண்ணன், சென்னை-101.

''இலங்கையில் தமிழர்களின் வீரப் போராட்டம் முடிந்துவிட்டது... அப்படித்தானே?''

''இப்ஸனின் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் இவ்வாறு சொல்லும், 'ஒருவன் ஐந்தாவது அத்தியாயத்தின் இடையிலேயே இறந்துவிட முடியாது’!''

- சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை.

''தமிழக அரசியலில் தலைசிறந்த பேச்சாற்றல் கொண்ட வர்கள்தானே அரியணையை அலங்கரித்திருக்கிறார்கள்?''  

''மறைந்த கவிஞர் கண்ணதாசன், ஈ.வி.கே.சம்பத், வலம்புரிஜான், காளிமுத்து, தமிழ்க்குடிமகன், கா.சுப்பு ஆகியோர் மேடையேறிவிட்டால் தூறல் போட்டால்கூடக் கலையாமல் கூட்டம் கட்டுண்டுகிடக்கும். குமரி அனந்தன், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத், டி.ராஜேந்தர், பழ.கருப்பையா ஆகியோர் கூட்டத்தைக் கூட்டுவதில் இன்றும் வல்லவர்கள். ஆனால், இவர்கள் யாரும்  அரசியலில் பெரிய தலைவராக மிளிர முடியவில்லையே.

அரியணையை அலங்கரிக்கப் பேச்சாற்றல் மட்டும் அல்ல; 'மற்ற சங்கதிகளும் சரக்கு’களும் வேண்டும்!''

- ஆர்.கே.சுந்தரம், சென்னை-26.

''ஒருவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?''

''கலீல் கிப்ரான் கூறுகிறார்...

'ஒருவனின் உண்மை இயல்பு

எதைச் சொல்கிறான் என்பதில் இல்லை;

எதை மறைக்கிறான் என்பதில் உள்ளது.

அவனை அறிந்துகொள்ள

அவன் சொல்வதைக் கேளாதே;

எதைச் சொல்லாமல் மறைக்கிறான்

என்பதை உணர்க!’ ''

- டி.என்.போஜன், ஊட்டி.

''இடம், பொருள் பார்த்துத்தான் பேச வேண்டும் என்கிறார்களே... ஏன்?''

''கசாப்புக் கடைக்குச் சென்று கடைக்காரரிடம் எத்தனை தடவை 'மூளை இருக்கா?’ என்று கேட்டா லும் கோபப்பட மாட்டார். அதுவே, அவர் கசாப்புக் கடையில் இல்லாமல் வெளியிடத்தில் பார்க்கும்போது ஒரே ஒரு தடவை கேட்டுப் பாருங் கள்... இடம், பொருள் என்னவென்று உணர்வீர் கள்!''

- தீ.அசோகன், சென்னை-19.