Published:Updated:

மன்மோகனை மடக்கிய ராசா ராக்கெட்!

ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப் கான்

##~##

ஜே.சி.பி. இயந்திரம் மண் ணைத் தோண்டுவதைப் போல, ஜே.பி.சி., இந்தியாவின் ஊழலைத் தோண்டி வெளிச்சத்தில் குவித்துள்ளது. கூட்டாளி கள் இரண்டு பேருக்குள் பகை வந்தால், சேர்ந்து செய்த காரியங்களை வெளிப் படுத்த வேறு ஆள் தேவையில்லை. காங்கிரஸ் கூட்டணியில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்ச ராக அங்கம் வகித்த ஆ.ராசா, 'தவறு செய்தார்’ என்று காங்கிரஸ் ஆட்சி நியமித்த விசாரணைக் கமிஷனே சொல்லியிருக்கிறது. 'இதற்கு நான் மட்டுமே காரணம் இல்லை. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருக்கிறது!’ என்கிறார் ஆ.ராசா. 

ஒழுக்கத்தில் சிறந்தவர் யார் என்று பட்டிமன்றம் வைத்து, இரு தரப்பும் வைக்கும் வாதங்களைப் பார்த்து 'ரெண்டு பேருமே சரியில்லையோ?’ என்று பொதுமக்கள் முடிவுக்கு வருவதைப் போலத்தான் ஸ்பெக்ட்ரம் விவாத மன்றமும் நடக்கிறது. ஆனால், இங்கு தீர்ப்பு இரண்டு தரப்புக்குமே சாதகமாக வராது என்பதே நிஜம்.

இந்தியாவின் புகழை உலக அளவில் பரப்பியது 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு. சி.ஏ.ஜி. எனப்படும் மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை நடத்திய விசார ணைப்படி இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அந்தத் துறையைக் கவனித்து வந்த அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்தார். ராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த நேரத்தில், ''இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து என் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டால், என்னோடு நீங்களும் சிக்க வேண்டிஇருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார் ராசா. பிரதமர் மட்டுமல்ல, அவர் அருகில் இருந்த அவரது மனைவியும் பதறிப்போனார். ராசா அன்று ரகசியமாகச் சொன்னது இன்று ராக்கெட்டாக வெடிக்கிறது.

மன்மோகனை மடக்கிய ராசா ராக்கெட்!

''இவ்வளவு பெரிய விஷயத்தை ராசா மட்டுமே தனிப்பட்டு செய்திருக்க முடியுமா?'' என்று அப்போதே ரகசிய மிரட்டலை கருணாநிதி விடுத்தார். ''பிரதமர் மன்மோகன் சிங்கை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?'' என்று இப்போது கேட்கிறார் கருணாநிதி.

''அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக் கடைப்பிடிக் கப்பட்ட 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையைச் சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைச்சர் ஆ.ராசா திருத்தினார் என்பதை நிரூபிக்கப் போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் உள்ளன'' என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.சி.சாக்கோ கூறி இருக்கிறார்.

''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நான் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் முடிவுகளை எடுத்திருக்கிறேன்'' என்று ஆ.ராசா தான் கூறுவதில் உறுதியாக இருக்கிறார்.

எந்த விசாரணையாக இருந்தாலும், யார் குற்றம் சாட்டப்பட்டவரோ அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்ற, அடிப்படை தார்மீக நெறிமுறையைக்கூட மத்திய அரசு, ஆ.ராசா விஷயத்தில் பின்பற்றவில்லை. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஆ.ராசாவை வரவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மேலிடம் குறியாக இருந்துள்ளது. மூன்று முறை அமைச்சர், இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தில் இருப்பவரது உரிமை அப்பட்டமாகப் பறிக்கப்பட்டது. ஆ.ராசா, எழுத்துப்பூர்வமாகச் சில விளக்கங்களையும் குற்றச் சாட்டுகளையும் வைத்தார். அவர் யாரோ அடையாளம் தெரியாதவர்கள் மீது புகார்களை வைக்கவில்லை. சம்பவம் நடந்த காலத்திலும் இப்போதும் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும்

மன்மோகனை மடக்கிய ராசா ராக்கெட்!

சந்தேகக் கேள்விகளைக் கேட்கிறார். ஜே.பி.சி. இவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அல்லது எழுத்துப்பூர்வமான பதிலைத் தாருங்கள் என்று பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அதையும் ஜே.பி.சி. செய்யவில்லை.

எதிர்க் கட்சிகள் எழுப்பும் கேள்விகளையும், மக்களின் சந்தேகங்களையும் அமுக்க ஒரு கண்துடைப்பு ஆணையத்தை நியமித்து, அதில் ஆ.ராசாவை மட்டும் பலிகடா ஆக்கித் தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்பது இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது!

இந்த விவகாரம் கிளம்பியபோது காங்கிரஸின் காவல் தெய்வங்களான கபில்சிபலும் சல்மான் குர்ஷித்தும் என்ன சொன்னார்கள்? ''சிறு விதிமுறைகூட மீறப்படவில்லை. ஒரு பைசாகூட இந்திய அரசுக்கு இழப்பு இல்லை'' என்று கர்ஜித்தார் கபில். ''இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு எந்த நாடும் முன் வராது'' என்று குட்டிக்கரணம் அடித்தார் குர்ஷித். ஆனால், முறைகேடு நடந்ததாக பி.சி.சாக்கோ சொல்கிறார். இப்போது அவர்கள் என்ன சொல்வார்கள்? இன்று இவர்கள் நோக்கம் மன்மோகனையும் சிதம்பரத்தையும் காப்பாற்றுவது மட்டுமே!

'' 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைப்படியும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வோருக்கு முதலில் உரிமங்கள் கொடுப்பது என்கிற இரு முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டன!'' என்பது ஆ.ராசாவின் வாதம்.

அட்டர்னி ஜெனரல் மாஹன்வதி, ''2008 ஜனவரியில் ஒப்புதல் கொடுத்த ஒரு செய்திக் குறிப்பைத் தனக்கு வேண்டிய நிறுவனங்கள் பயனடையும் வகையில் ஆ.ராசா சில வரிகளைச் சேர்த்தார். கூடுதலாக இடம்பெறச் செய்த அந்த வரிகள் எனக்குத் தெரியாது. அவற்றை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே தன் கைப்படத் திருத்திச் சேர்த்துவிட்டார்'' என்கிறார்.

ராசா சில வரிகளைத் திருத்திச் சேர்த்துவிட்டார் என்பது மன்மோகனுக்கு எப்போது தெரியவந்தது? தெரிந்ததும் என்ன செய்தார்? எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனது நாற்காலி யைக் காப்பாற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அந்த மௌன சாட்சியம்தான், இன்று அவரைக் குற்றத்துக்கு உடந்தையாகச் சிக்கவைத்திருக் கிறது.

'முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்று பல ஆண்டுகளாக இருக்கும் நடைமுறைப்படி 2ஜி உரிமங்களைக் கொடுக்க முடிவெடுத்த அமைச்சர் ஆ.ராசா, அதற்கான ஆவணங்களை 2007 டிசம்பர் 26-ம் தேதி அனுப்பினார். 'இதை விரைந்து பரிசீலிக்கவும்’ என்று அதில் குறிப்பு எழுதுகிறார் பிரதமர். ராசாவின் யோசனைகளை ஏற்பதாக பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர், செயலாளர் ஃப்லோக் சட்டர்ஜி ஆகிய இருவரும் அதில் எழுதியிருக்கிறார்கள். ஏலம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பிரதமர் அலுவலகச் செயலாளர் ஃப்லோக் சட்டர்ஜியும், தொலைத் தொடர்புத் துறைச் செயலாளரான சித்தார்த் பெஹுராவும் சந்திக்கிறார்கள். அப்போதும் ராசாவின் நிலைப்பாடுகள் ஏற்கப்படுகின்றன.

அலைக்கற்றை ஏலம் முடிந்த பிறகு, 2008 ஜனவரி 23-ம் தேதி பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த பி.வி.ஆர்.சுப்பிரமணியத்திடமிருந்து ஒரு கடிதம் தொலைத்தொடர்புத் துறைக்கு வருகிறது. '2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் தள்ளியிருக்கவே விரும்புகிறார்’ என்று. இடைப்பட்ட காலத்தில் நடந்ததை உணர்ந்து மன்மோகன் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர் உணர்ந்த முறைகேட்டைத் தடுக்க முடியவில்லை. அதே சமயம், எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும் உணர்த்த அவர் விரும்பியிருக்கிறார். ஆனால், ஆட்சி என்பது கூட்டுப் பொறுப்பானது. அமைச்சர்கள், அதிகாரிகள் செய்யும் அத்தனைத் தவறுகளுக்கும் பிரதமரும் முதலமைச்சரும் பொறுப்பேற்றே ஆக வேண்டும்.

இனி, மன்மோகன் சிங்கால் இந்த விவகாரத்திலிருந்து தள்ளி இருக்க முடியாது. ஏனெனில், அவருடைய இமேஜ் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது!