Published:Updated:

பரவும் ஒளி!

ப.திருமாவேலன்

##~##

மிழ் எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களுக்கு சி.பா.ஆதித்தனார் ஆரம்பித்த பள்ளிக்கூடம் 'தினத் தந்தி’. அதனைப் பல்கலைக் கழகமாக மாற்றியவர் அவரது மகன் சிவந்தி ஆதித்தன்! 

''ஆதித்தனார் அமைத்துக்கொடுத்த தினத்தந்தி நல்ல முறையிலே இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையிலே மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், பல லட்சக்கணக்கான மக்கள் விரும்பிப் படிக்கத்தக்க தன்மையிலே தினத்தந்தி இதழ், இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதனுடைய நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக்கொண்டிருக்கும் நம்முடைய மதிப்புக்குரிய நண்பர் ஆதித்தனாருடைய திருமகன் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும் அவரோடுகூட இதழிலே பணியாற்றுகின்ற ஒவ்வொருவருக்கும் அதிலே உரிய பங்குண்டு. ஆதித்தனார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த அமைப்பை நடத்தத்தக்க பிள்ளையைப் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச் சிறப்புக்கு உதாரணமாகும்'' என்று தினத்தந்தியின் வெள்ளி விழா நடந்தபோது, அன்றைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பேசினார். தந்தைக்குப் பிறகு என்றில்லாமல், தந்தை இருக்கும்போதே அவருக்குப் பெருமை சேர்த்த பிள்ளையாக இருந்த தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன், கடந்த 19-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். தமிழ்ப் பத்திரிகை உலகில் கடந்த 55 ஆண்டு காலச் சரித்திரம், இந்த சிவந்தி.

சிவந்தி பாலசுப்பிரமணியம் ஆதித்தனார் என்பதன் சுருக்கம்தான் சி.பா.ஆதித்தனார். தன்னுடைய தந்தை பெயரான சிவந்தி என்பதையே தன்னுடைய மகனுக்கு வைத்தார் ஆதித்தனார். காயாமொழியில் பிறந்து, லண்டனில் படித்து, சிங்கப்பூரில் வக்கீல் வேலை பார்த்தாலும், சொந்த மண்ணில் தொழில்செய்து வாழ வேண்டும் என்ற திட்டத்தோடு தமிழகம் வந்தவர் ஆதித்தனார். 'ஒரு மொழிக்கு ஒரு நாடு; தமிழனுக்குத்

பரவும் ஒளி!

தமிழ்நாடு’ என்ற எண்ணத்தோடு தமிழரசுக் கட்சியும் பின்னர், 'நாம் தமிழர்’ இயக்கத்தையும் தொடங்கினார். அதற்கான படைக்கலனாகத் தினத்தந்தியையும் தொடங்கினார். அரசியலுக்குத் துணையாகத்தான் பத்திரிகையை அவர் நினைத்தார். ஈழத்தையும் தமிழகத்தையும் இணைத்து 'தமிழப்பேரரசு’ அமைக்க வேண்டும் என்ற கனவுடன் அவர் அரசியலில் தீவிரமானபோது, நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை சிவந்தி ஆதித்தனிடம் ஒப்படைத்தார்.

மகன் என்பதற்காக, 'நாளையில இருந்து நீதான் எம்.டி.’ என்று சொல்லாமல், சிவந்திக்கான பயிற்சியை ஆதித்தனார் கொடுத்தார். ''1959 மே 2-ம் தேதி தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்புகளை என் தந்தையார் என்னிடம் ஒப்படைத்தார்கள். ஒப்படைப்பதற்கு முன் எனக்குப் பத்திரிகைத் துறையில் ஆர்வம் உள்ளதா என்பதைக் கண்டறியப் பல சோதனைகளை நடத்தினார்கள். 'பத்திரிகை நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போன்றது’ என்று என் தந்தையார் அடிக்கடி கூறுவார்கள். அந்த நெருப்பாற்றைக் கடக்கக்கூடிய ஆற்றல் எனக்கு இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவர்கள் விரும்பியதில் வியப்பில்லை. நான் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்ததும் அய்யா என்னை அழைத்தார்கள். பத்திரிகைத் துறையில் என்னென்ன பகுதிகள், பிரிவுகள் உண்டோ, அத்தனைத் துறைகளிலும் எனக்குப் பயிற்சி அளித்தார்கள். அச்சுக் கோப்பாளராக, அச்சிடுகிறவராக, பார்சல் கட்டி அனுப்புகிறவராக, நிருபராக, துணை ஆசிரியராக... - இப்படி எல்லாத் துறைகளிலும் பயிற்சி கொடுத்தார்கள். கடுமையான அந்தப் பயிற்சிகளை எல்லாம் நான் வெற்றியுடன் செய்து முடித்தேன். பின்னர், நானே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த முடியுமா என்பதைச் சோதிக்க, என்னை நெல்லைக்கு அனுப்பினார்கள். அங்கு 'நெல்லை மாலைமுரசு’ தொடங்கி நடத்தும் முழுப் பொறுப்பையும் ஏற்றேன். சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகையான நெல்லை மாலை முரசு திக்கெட்டும் வெற்றி உலா வந்தது. அதன் பிறகுதான், தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பை என்னிடம் பெரிய அய்யா அவர்கள் ஒப்படைத்தார்கள்'' என்று சிவந்தி ஆதித்தன் ஒருமுறை எழுதினார். ஆதித்தனாரை அப்பாவாக மட்டுமல்ல; ஆசானாகவும்கொண்டு வளர்ந்ததால்தான் கடைசி வரைக்கும் பத்திரிகை மோகத்தில் இருந்தார். விளையாட்டுத் துறையில் அதீத ஆர்வம், சமூக சேவையில் அதைவிட ஆர்வம், ஆன்மிகப் பற்று ஆகியவை இருந்தாலும், உடல்நிலை மோசம் அடையும் வரைக்கும் தினமும் தினத்தந்தியுடன் அவர் பயணம் செய்ய அதுதான் காரணம். மூன்று பதிப்புகளுடன் இருந்த தினத்தந்தியை 15 நகரங்களில் இருந்து புறப்படும் அளவுக்கு விரிவுபடுத்த முடிந்ததும் அதனால்தான். அதேபோல் ஆதித்தனாரின் வழித்தடத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என இனம், மொழி சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை சிவந்தி முக்கியக் கடமையாகக் கருதினார். 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தை, 'தினத்தந்திதான் நடத்தியது’ என்று அன்றைய தி.மு.க-வினர் சொல்வார்கள். சமீபத்திய மாணவர் போராட்டத்துக்கும் அத்தகைய முக்கியத்துவத்தை தந்தி கொடுத்தது.

தினத்தந்தி நிறுவனத்தின் தலைவர் என்பதைவிட, அந்தக் குடும்பத்தின் தலைவராக சிவந்தி செயல்படுவார் என்று தந்தியின் ஆசிரியராக இருந்த ஐ.சண்முகநாதன் சொல்வார். இப்படி அவரது சேவைக் குணத்தைச் சொல்வதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், பாமரருக்காகப் பத்திரிகை நடத்தியதில்தான் சிவந்தி ஆதித்தனின் மொத்தப் பெருமையும் இருக்கிறது.

'பத்திரிகை மொழி, பேசும் மொழியில் இல்லாதது பெரிய குறைபாடு’ என்று சொன்னார் நேரு. அதனைப் போக்குவதற்காக பத்திரிகை தொடங்கிய ஆதித்தனார், 'பேச்சுவழக்கில் உள்ள தமிழைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்’ என்று இலக்கணம் வகுத் தார். அந்த வழித்தடத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமும் பத்திரிகை நடத்தி, எத்தனையோ தமிழர் இல்லங்களில் விளக்கு ஏற்றிவைக்கக் காரணமாக அமைந்துவிட்டார் சிவந்தி. அந்த உயிர் அணைந்துவிட்டது. ஆனால், அவர் ஏற்றிவைத்த ஒளி பரவிக்கொண்டே இருக்கிறது!