Published:Updated:

விகடன் மேடை : சுப.உதயகுமாரன்

விகடன் மேடை : சுப.உதயகுமாரன்

விகடன் மேடை : சுப.உதயகுமாரன்

கே.ரவி, காஞ்சிபுரம்.

''இடிந்தகரை மக்களின் போராட்டம் எந்த அளவுக்குப் பலன் அளித்திருக்கிறது?''

''கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற உபகரணங்கள், உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியமே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வீரியமாக நடந்துவருகிறது, இடிந்தகரை மக்களின் போராட்டம். கூடங்குளம் திட்டம் ஓர் இறந்து பிறந்த குழந்தை என்பதை ஒட்டுமொத்தத் தமிழகமே, இந்தியாவே புரிந்துகொள்ளும்படி செய்திருப்பதே இந்தப் போராட்டத்தின் வெற்றி. அணு சக்தி, அணு மின் நிலையம், அணுக் கழிவு, கதிர்வீச்சு பற்றிஎல்லாம் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இருந்த பெரும்பாலான தமிழ் மக்கள், இந்தியர் கள் இன்று அவை தொடர்பாகப் பெரும் விழிப்பு உணர்வு அடையும் அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது.''

விகடன் மேடை : சுப.உதயகுமாரன்

இராம.வெங்கடேசன், கீழ்க்கொடுங்காலூர்.

 '' 'ஜெயலலிதாவை நாங்கள் நம்பவில்லை’ என்று சொல்லும் துணிச்சலை எங்கிருந்து பெற்றீர்கள்?''

''உண்மையைத்தானே சொன்னேன். மக்களை நம்பித்தான் தலைவர்கள் இருக்கிறார்களே தவிர, தலைவர்களை நம்பி மக்கள் இல்லை... இருக்கவும் கூடாது!

போராடத் துவங்கும்போது நாங்கள் யாரையும் நம்பிக் களம் இறங்கவில்லை. 2011 செப்டம்பர் மாதம் எங்கள் போராட்டம் துவங்கிய மூன்றாவது நாள், 'கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான். அது செயல்பட அனைவரும் ஆதரவு அளியுங்கள்!’ என்று முதல்வர் ஓர் அறிக்கை விடுத்தார். நாங்கள் தொடர்ந்து போராடினோம். பின்னர், எங்கள் நியாயத்தை உணர்ந்து, உறுதியை மதித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அவர் எங்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்தபோது, வீதியில் இறங்கிப் போராடினோம். 2011 அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, 'உங்களில் ஒருத்தியாக இருப்பேன்’ என்று வாக்குறுதி அளித்தார். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் ஏதேதோ காரணங்களால் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.

போராட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்த நாங்களும், எங்கள் உத்திகளை மாற்றி அமைத்துக்கொண்டோம். களப் போராட்டத்தைக் கடல் போராட்டமாக்கினோம்; அறப் போராட்டத்தை அறிவுப் போராட்டமாக்கினோம்; அரசின் கொம்பைப் பிடித்து மோதினால், அது பெரும் வம்பாகிப்போகும் என்று உணர்ந்து காட்டு யானையின் காது புகுந்த எறும்பாக இயங்கினோம். மின்வெட்டால் அடித்த முதல்வர், நாங்கள் மாய வலை விரிப்பதாகக் குற்றம் சாட்டினார். 600 நாட்களாகப் போராடி கூடங்குளம் அணு உலையில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்திஇருப்பதை, மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதை, அது ஆபத்தான நிலையில் இருப்பதை, அணு சக்தித் துறையின் தகிடுதத்தங்களை அகில இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டுவந்துஇருக்கிறோம்.

முதல்வர் நிச்சயமாக இவற்றை அவதானித் துக்கொண்டுதான் இருப்பார். தமிழக மக்கள் எதிர்கொண்டு நிற்கும் ஆபத்துகளை உணரும் போது, மீண்டும் தனது நிலையை மாற்றுவார். மக்களை வெற்றியடையவிடும் தலைவர்கள் வரலாற்று நாயகர்கள், நாயகிகள் ஆவதும்; மக்களைத் தோற்கடிக்க முயலும் தலைவர்கள் கேவலப்பட்டுக் காணாமல்போவதும், 'தலைவர்’ தகுதி நிரம்பப்பெற்றவர்களுக்கு நிச்சயம் தெரியும்!''

விகடன் மேடை : சுப.உதயகுமாரன்

எஸ்.கதிர்வேல், திண்டிவனம்.

''உங்களைப் பற்றித்தான் அதிகம் வெளியே தெரிகிறது. உங்களுடன் இருக்கும் புஷ்பராயன், ஜேசுராஜ், முகிலன் ஆகியவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?''

''தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த புஷ்பராயன் 'மக்கள் பணியே மகேசன் பணி’ என்று செயல்படுபவர். கடலோர மக்கள் பிரச்னைகளில் கருத்தூன்றிச் செயல்படுபவர். விசாலமான பார்வையும் விவேகமும் கொண்டவர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த மைபா.ஜேசுராஜ் கத்தோலிக்கத் திருச்சபையில் அருட்தந்தையாக இருப்பவர். தமிழ் ஆர்வலர். தமிழக மக்களுக்காக மாநிலம் முழுக்கச் சுற்றிச் சுழன்று களமாடுபவர். இரா.சா.முகிலன், கொங்கு நாட்டு நண்பர். அந்தப் பகுதி மக்களின், விவசாயிகளின் பிரச்னைகளில் நீண்ட காலமாகப் பங்கேற்றுப் போராடிவருபவர். இடிந்தகரை பங்குத் தந்தை ஜெயகுமார் போராட்டம் தொடங்குவதற்கு முந்தின நாள் அறிமுகமானவர். ஆனால், ராயனோடு பல ஆண்டு கால நட்பு இருந்தது; பல நிகழ்வுகளில் அவரோடு பங்கேற்றிருக்கிறேன். கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தில் நான் பங்கேற்கத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே மைபா-வும் நானும் நல்ல நண்பர்கள். சாதி, மதம், ஊர், தொழில், அரசியல் கடந்த சகோதரர்கள் நாங்கள். பாரதியார் எங்களைப் பார்த்திருந்தால்,

'மேவி அனைவரும் ஒன்றாய்

நல்ல போர் நடத்துதல் கண்டேன்’

என்று பாடியிருப்பார்!''

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

''இடிந்தகரைப் போராட்டம் உளவியல் ரீதியாக எந்த அளவு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது?''

''போராடுகிற எங்களுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, எங்களைச் சுடப்பட்ட சுண்ணாம்பாக, வேகவைக்கப்பட்ட செங்கல்லாக, புடம் போடப்பட்ட தங்கமாக மாற்றியிருக்கிறது. சாதி, மதம் கடந்து ஒன்றாக நின்று... அற வழியில் போராடினால், எத்தனை பெரிய அரசையும் கேள்வி கேட்க முடியும், நம் கோரிக்கைகளுக்கு இணங்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை, அரசியல் தைரியத்தை தமிழர்களின் மனங்களில் இந்தப் போராட்டம் பதியவைத்திருக்கிறது!''

சு.அருளாளன், ஆரணி.

''மத்திய அமைச்சர் நாராயணசாமி..?''

''போராடும் எங்கள் மக்களை பிரதமர் முதல் பியூன் வரை அனைவரும் புறக்கணித்து வரும் நிலையில், எங்களை வந்து சந்தித்த ஒரே அமைச்சர் என்பதால், நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒரு நடுவண் அமைச்சர் என்ற பொறுப்பு உணர்வோடு, மக்களை மதித்து, உண்மைத் தகவல்களை மட்டும் சொல்லியிருந் தால், அவர் மீது இன்னும் மரியாதை அதிகமாகி இருக்கும்!''

என்.மதுமிதா, பம்மல்-75.

''சினிமா பார்ப்பது உண்டா? பிடித்த படம்?''

''சினிமா பார்ப்பதில்லை. சினிமாவால்தான் தமிழக அரசியல், பொதுவாழ்வு, கலாசாரம் சீரழிக்கப்பட்டது, சீரழிக்கப்படுகிறது என நம்புவதால், ஒரு வெறுப்பு மனதில் ஆழமாகப் பதிவாகியிருக்கிறது!''

சு.ராமஜெயம், அரக்கோணம்.

''இயற்கை வேளாண்மை மீது உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் மேலிட்டது எப்படி?''

''எனது தாத்தா, பாட்டிகளிடமிருந்து! வயலில் இலை, தழைகளை எருவாகப் பயன்படுத்தும் விதத்தை, வித்து நெல் தயாரிக்கும் நேர்த்தியை, வயல் வரப்பில் அமர்ந்து சாப்பிடும் சுகத்தை, வாய்க்காலில் ஓடும் ஆற்று நீரைக் கையால் கோரிப் பருகும் அற்புதத்தை, பழ மரங் களைப் பிள்ளைகளாய்ப் போற்றும் அன்பை, அடுத்தவருக்குக் கொடுத்து மகிழும் பெருந்தன்மையை அவர்கள் நால்வரோடு சேர்ந்து அனுபவிக்கும் பெரும்பேறு பெற்றவன் நான்!''

ம.பன்னீர், மதுரை.

''எது வந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோமே என்கிற துணிச்சலை எங்கு இருந்து பெற்றீர்கள்?''

''மக்களிடமிருந்து!''

அடுத்த வாரம்..

விகடன் மேடை : சுப.உதயகுமாரன்