Published:Updated:

''ஆங்கிலமும் தெரியவில்லை... தமிழும் தெரியவில்லை!''

டி.அருள் எழிலன்படம்: உசேன்

##~##

மிழ் வழிக் கல்விக்கும், அனைவருக்கும் தரமான கல்விக்குமாக ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதிவரும் நலங்கிள்ளி, மதுரைக்காரர். கணேஷ்ராமாக இருந்து பாபர் மசூதி இடிப்புக்குப் பிரசாரம் செய்தவர், பின்னாட்களில் நாத்திகத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்து, நலங்கிள்ளியானது ஆச்சர்ய மாற்றம்தான்.

இளம் தலைமுறையின் தமிழ் வழிக் கல்விக்குப் பங்களித்துள்ள நலங்கிள்ளி, ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'எ பிரீஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்’(A brief history of time)  என்ற நூலைக் 'காலம் ஒரு

வரலாற்றுச் சுருக்கம்’ எனத் தமிழாக்கியவர். இயற்பியலின் முழுத் தொகுப்பாக அமெரிக்கா வின் கால்டெக் பல்கலைக்கழகம் வெளியிட்ட 'தி மெக்கானிக்கல் யுனிவர்ஸ்’ (The Mechanical Universe)  என்னும் பெருநூலின் இரு தொகுதி களை 'இயந்திர அண்டம்’ என்று தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வசிக்கும் இவரைப் பற்றி ஓர் அறிமுக வாக்குமூலம் இது:

''ஆங்கிலமும் தெரியவில்லை... தமிழும் தெரியவில்லை!''

''வீட்டில் நான்தான் மூத்தவன். எனது முற்போக்கு மாற்றங்களை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. வங்கி அதிகாரியான என் அப்பா மாற்றல் வாங்கிக்கொண்டு திருநெல் வேலி போனார். போகும்போது 'நீ எங்களுடன் வர வேண்டாம்!’ என்று என்னை மதுரையில் விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் கிளம்பிச் சென்றார்கள். அப்போது மதுரை செல்லூரில் செல்லமுத்து எனும் மார்க்சியவாதியின் அறிமுகம் கிடைத்தது. அங்கு வைகை ஆற்றங்கரை ஓரக் குடிசைகளில் நெசவாளத் தோழர்களோடு தங்கிப் பழகினேன். தேநீர்க் கடை அரசியல் விவாதமும் தோழர்களுடனான அரசியல் உரையாடலும் தமிழகத்தில் ஒரு மாற்றுக் கல்விப் பண்பாட்டைக் கொண்டுவந்தால் ஒழிய நமது எதிர்காலத் தலைமுறையை முன்னேற்ற இயலாது என்பதை உணர்த்தியது. அறிவியல் தொடர்பான நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டினேன். அதற்குத் தோழர் தியாகு உறுதுணையாக நின்றார்'' என்கிற நலங்கிள்ளி, தமிழகக் கல்விச் சூழல்பற்றி இங்கே பேசுகிறார்.

''மெக்காலே வகுத்த நமது கல்வி முறையின் நோக்கம் முழுக்க ஆங்கிலச் சிந்தனையை உருவாக்கி, வெள்ளையர்களுக்காக வேலை செய்யும் கூலிகளை உருவாக்குவதுதான். இன்று தமிழ் தெரியாத தலைமுறை ஒன்று உருவாகிவருகிறது. சரி, தமிழ்தான் தெரியவில்லை. ஆங்கிலமாவது முழுமையாகத் தெரிகிறதா? ஆங்கிலமும் அரைகுறை என்பதே இன்றைய மனப்பாடக் கல்வியின் கசப்பான விடை. பள்ளியில் 'கூம்பு வெட்டுப் பரப்பளவு காண்க?’ என்று கேட்கிறார்கள். இதற்கான சூத்திரத்தை உருப்போட்டு எப்படியோ 15 மதிப்பெண் வாங்கிவிடுகிற மாணவரை விடுங்கள். இதைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கே கூம்பு வெட்டுப் பரப்பளவை ஏன் கணக்கிடக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெரியாது. கெப்ளர், தான் கண்டுபிடித்த கோள்கள் இயக்க விதி ஒன்றை நிரூபிக்கக் கண்டுபிடித்ததுதான் கூம்பு வெட்டு விதி. இதைப் புரிந்து படித்தால் மட்டுமே, குழந்தைகளிடம் அறிவியல்

குறித்த படைப்பியல் நோக்கு தழைத்தோங்க முடியும். தேயிலைத் தோட்டத்துக்குக் கூலி அடிமைகளைக் கொண்டுசென்ற கங்காணிகளைப் போல கார்ப்பரேட் கூலிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக, பள்ளி, கல்லூரிகள் மாறிவிட்டன.

இந்த 30 ஆண்டுகளில் ஆங்கிலப் பள்ளிகளின் பெருக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை இரண்டு முக்கியமான அறிக்கைகள் மூலம் பார்ப்போம். பிரான்சில் இயங்கும் 'பிசா’( Program For International  Student  Assessment)  என்ற அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக மாணவர்களிடையே ஓர் ஆய்வை நடத்துகிறது. இந்தியாவில் மனித வளர்ச்சிக் குறியீட்டில்

''ஆங்கிலமும் தெரியவில்லை... தமிழும் தெரியவில்லை!''

முன்னணியில் இருக்கும் தமிழகத்தையும் அருணாச்சலப் பிரதேசத்தையும் தன் ஆய்வுக் களமாக எடுத்துக்கொண்ட 'பிசா’, சென்ற ஆண்டு தன் அறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வில் பங்கெடுத்துக்கொண்ட உலகின் 74 நாடுகளில் இந்தியா 73-வது இடத்தில் மிக மிகப் பின் தங்கியிருப்பது தெரிந்தது. ஐரோப்பிய நாடுகளையும் பின் தள்ளி சீனா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. 'பிசா’ குழுவினர் ரத்த தானம் தொடர்பான துண்டறிக்கையைக் கொடுத்து வாசிக்கச் சொல்லிவிட்டு, அதிலிருந்து கேள்வி கேட்டார்கள். 'ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை ஏன் இன்னொருவருக்கு மருத்துவர் பயன்படுத்துவது இல்லை?’ என்ற மிக எளிமையான கேள்விக்குக்கூட 90 சதவிகித மாணவர்களால் பதில் அளிக்க இயலவில்லை. அடுத்து வந்த 'அசர்’ என்ற அமைப்பின் அறிக்கை 'பிசா’ அறிக்கையைவிட அதிர்ச்சி அளித்தது. ஏ.சி. கட்டடங்கள் எழுப்புவதாலோ, பல வண்ணச் சீருடைகள் அணிவதாலோ, ஆங்கில அறிவோ, தமிழ் அறிவோ, கல்வி அறிவோ வந்துவிடாது என்பதை இந்த அறிக்கைகள் உணர்த்துகின்றன. அதே நேரம், கல்வி அறிவில் ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வு உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவாக இருப்பதாக 'பிசா’ கூறுகிறது. இதனை 'அசர்’ அறிக்கையும் உறுதிசெய்கிறது. அப்படியானால், இந்த விஷயத்திலாவது இந்தியா முன்னணியில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?' என்று நம்மைக் கேள்வி கேட்ட நலங்கிள்ளியே அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

'வெறுமனே உருப்போட்டுப் படிக்கும் கல்விமுறையில் தமிழ் என்றாலும் ஆங்கிலம் என்றாலும் ஒன்றுதான். அதனால்தான் ஏற்றத் தாழ்வு மிகக் குறைவாக இருக்கிறது. சுய சிந்தனைக்கு விரோதமான கல்விமுறை இருப்பதால்தான் இன்று ஆங்கிலக் கல்வி மோகம் தலைவிரித்தாடுகிறது. இது பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு வழி வகுத்திருப்பதோடு, சுய சிந்தனையே இல்லாத, எந்த மொழியறிவும் இல்லாத, ஒரு தற்குறித் தலைமுறையை உருவாக்கிவிட்டது. தமிழில் நல்ல ஆளுமை பெறுவதே ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழித் திறன்வாய்ந்த ஒரு தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும்'' என்கிற நலங்கிள்ளி, ஆங்கிலம்குறித்து மக்களிடம் உள்ள தவறான நம்பிக்கைகளுக்கு விடையளிக்கும் வகையில் 'ஆங்கில மாயை’ என்னும் நூலையும் அண்மையில் எழுதிஉள்ளார். ஆங்கிலத்தைத் தமிழ் வழியில் கற்கும் வகையில் ஒரு புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறார்.