Published:Updated:

வடுவூர்... தமிழகத்தின் பெருமை!

கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்

##~##

ந்த ஊரில் ஆகச் சிறந்த வசதிகள் இல்லை; மிகப் பெரிய மைதானம் இல்லை; கற்றுத்தரப் பயிற்சியாளரும் இல்லை. ஆனால், நம்புங்கள் அந்தக் கிராமத்தில் இருந்துதான் இந்தியக் கபடி அணியின் கேப்டன் வந்தார். அந்தக் கிராமத்தில் இருந்து சென்ற கால்கள் ஒலிம்பிக் வரை தடம் பதித்தன. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் தேசிய சாம்பியன்கள். அந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒருவர் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் அரசு வேலை பெற்றிருக்கிறார்கள். விளையாட்டை மூலதனமாகவைத்து மொத்தக் கிராமத்தையும் முன்னேற்றத் திசையில் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருக்கும் அந்த ஊர்... வடுவூர்! 

தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் வடுவூர், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி.  

ரயில்வே முதல் ராணுவம் வரை கோலோச்சும் வடுவூர்க்காரர்களின் வீடுகள்தோறும் பதக்கங்கள் பளிச்சிடுகின்றன. எப்படிச் சாத்தியமானது? எங்கிருந்து துவங்கியது இந்தப் பயணம்?

வடுவூர்... தமிழகத்தின் பெருமை!

''இந்தப் பயணம் 1950-ம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன், கடுமையான ஓட்ட வீரர். விளையாட்டின் மீது தீராத் தாகம்கொண்ட அவர் கரடுமுரடான வயல்காட்டில் ஓடிப் பயிற்சிபெற்று, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.5

வடுவூர்... தமிழகத்தின் பெருமை!

விநாடிகளில் ஓடிச் சாதனை படைத்தார். 1952-ல் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பெற்றார். உச்சகட்டமாக 1964-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரை சென்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தடம்பதித்து ஒலிம்பியனாக ஜொலித்தார். பிறகு, இந்தியத் தடகள அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர்தான் எங்கள் ஊர் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அதில் தொடங்கிய பயணம், அதன் பிறகு வரிசையாக ஆயிரக்கணக்கான வீரர்களும், வீராங்கனைகளும் எங்கள் ஊரில் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்!'' என்று பெருமிதத்துடன் பேசுகிறார் வடுவூர் விளையாட்டு அகாடமியின் தலைவர் ராஜ ராஜேந்திரன்.

கபடி, வாலிபால், தடகளம், நீச்சல், கராத்தே, சிலம்பாட்டம், ஸ்குவாஷ் என அனைத்து விளையாட்டுகளுமே வடுவூர்க்காரர்களுக்கு அத்துப்படி. அரசுப் பணிக்குப் போவதற்காக இவர்கள் விளையாடவில்லை. விளையாட்டு இவர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து ஒரு சுற்றுவந்தால் விதவிதமான விளையாட்டுகளில் பயிற்சியெடுக்கும் ஆண்களையும் பெண்களையும் காணலாம். இரவு 8 மணி வரையிலும் பயிற்சிகள் தொடர்கின்றன. புகழ்பெற்ற வடுவூர் ஏரி கோடைக் காலத்தில் வற்றும்போது, ஆடுகளமாக மாறிவிடுகிறது.

வடுவூர்... தமிழகத்தின் பெருமை!

விளையாட்டு மூலம் வேலை பெற்றவர்களுக்கு அதுவே அடையாளமாகிவிட்டது. ரயில்வே பழனி, டிரான்ஸ்போர்ட் வேதராஜன், இ.பி. ராவணன், ரயில்வே முருகானந்தம், இன்ஸ்பெக்டர் தென்னரசு, ஐ.சி.எஃப். சங்கர், என்.எல்.சி. ரவிச்சந்திரன்... இவர்கள் கபடி வீரர்கள். வடுவூரில் பயிற்சி பெற்று வளர்ந்த பாஸ்கரன் இந்தியக் கபடி அணியின் கேப்டனாக இருந்தபோதுதான், கபடியில் ஆசிய அளவில் இருமுறை தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. செல்வராணி, கவிதா, இந்திரா, வளர்மதி, ஜெயந்தி, சாந்தி, லட்சுமி, நிலவு, சுதா போன்ற வீராங்கனைகள் கபடியிலும் வாலிபாலிலும் சாதனை பதித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.

தங்கள் ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கம் வென்று ஊர் திரும்பும் ஒவ்வொரு முறையும், ஊரே கூடி ஆரத்தி எடுத்து வரவேற்கிறது. விளையாட்டின் மூலம் வேலை பெற்றவர்கள் பணி நிமித்தம்

வடுவூர்... தமிழகத்தின் பெருமை!

வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டாலும், அடுத்த தலைமுறையும் சாதனை படைப்பதற்காகப் பணத்தை வாரி வழங்குகிறார்கள். ''எங்கள் ஊருக்கு என்று ஒரு மைதானம்கூட இல்லை. இப்போது ஆசியாவிலேயே முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப் பிரமாண்டமான கிராமப்புற உள் விளையாட்டு அரங்கம் வடுவூரில் வரப்போகிறது. இதன் திட்ட மதிப்பீடு ஆறு கோடி ரூபாய். இதற்காக 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தன் மூன்றரை ஏக்கர் நிலத்தைத் தானமாகத் தந்திருக்கிறார் வி.என்.ராமசாமி என்பவர். எங்கள் ஊர் சார்பாக 50 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளோம். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஐந்து கோடி ரூபாய் நிதி தருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியால் இது நடக்கிறது. முன்னோடி விளையாட்டுக் கிராமத் திட்டத்தின்படி இந்தியா விலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே கிராமம் வடுவூர்தான்'' என்று மகிழ்ச்சி மின்னச் சொல்கிறார் ராஜ ராஜேந்திரன்.

'விளையாட்டு வாழ்க்கைக்கு உதவாது’ என்று சொல்லி, விளையாடும் பிள்ளைகளைத் தடுத்து புத்தகப் புழுவாக மாற்றத் துடிக்கும் பெற்றோர்கள் வடுவூருக்கு அவசியம் ஒருமுறை சென்று வர வேண்டும்!