Published:Updated:

கமிலா!

பாரதி தம்பி

##~##

'உலகின் சக்தி வாய்ந்த 100 ஆளுமைகளில் ஒருவர்’ என 'டைம்’ பத்திரிகை இவரைத் தேர்ந்தெடுத்தது.

கமிலா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'2011-ம் ஆண்டின் மிகச் சிறந்த ஆளுமை’ என இவரைப் பரிந்துரைத்தது 'கார்டியன்’ பத்திரிகை.

கமிலா!

'உலகின் துணிச்சல் மிக்க 150 பெண்மணிகளில் இவரும் ஒருவர்’ எனப் புகழாரம் சூட்டியது 'நியூஸ்வீக்’ பத்திரிகை.

கமிலா!

'உலகின் மிக அழகான புரட்சியாளர்’ என்கிறது 'நியூயார்க் டைம்ஸ்’.

கமிலா!

இவரது ட்விட்டர் அக்கவுன்ட்டைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஏழு லட்சத்தை எட்டவிருக்கிறது.

கமிலா!

இவரது புகைப்படம் அச்சிட்ட டி-ஷர்ட்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிவேகமாக விற்பனையாகின்றன.

அந்தப் பெண்ணுக்கு வயது 25. அவரது பெயர், கமிலா அண்டோனியா அமரந்தா வலேஜோ டவ்லிங். சுருக்கமாக கமிலா வலேஜோ டவ்லிங். 'அனைவருக்கும் இலவசக் கல்வி’ என்ற கோரிக்கையுடன் போராடிவரும் இந்தப் பெண், சிலி நாட்டின் மாபெரும் மாணவர் தலைவராக உருவெடுத்திருக்கிறார். லட்சக்கணக்கான மாணவர்கள், இவரது ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் களத்தில் நிற்கின்றனர்.  

கமிலா!

சிலி தலைநகர் சாண்டியாகோவில் 1988-ல் பிறந்த கமிலாவின் தாய் மரிலா டவ்லிங், தந்தை ரொனால்டோ வலேஜா... இருவருமே சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். சர்வாதிகாரி அகஸ்டோவின் கைகளில் சிக்கியிருந்த சிலியை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்தவர் கள். சிறு வயதில் இருந்து கம்யூனிச வாசனை உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கமிலா, 2006-ல் புவியியல் படிப்புக்காக சிலி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இடதுசாரி மாணவர் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர்களின் பிரச்னைகள் ஒவ்வொன்றிலும் துணிவுடன் முன் நின்றார். இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே, சிலி பல்கலைக்கழக மாணவர் பேரவைப் பிரதிநிதி ஆனார். அடுத்த இரண்டாவது ஆண்டில் மாணவர் பேரவைத் தலைவியானபோது ஒட்டுமொத்த சிலியும் திரும்பிப் பார்த்தது. 105 வருட சிலி பல்கலைக்கழக வரலாற்றில் இரண்டாவது பெண் தலைவி கமிலாதான். பிறகு, நாடு முழுவதுமான பல்கலைக்கழகக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக உருவெடுத்தார். மாணவர் பிரச்னைகளை இன்னும் வேகமாக முழங்கியவர், இப்போது சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கிறார்.

கமிலா!

இலவசக் கல்விக்காக கமிலா நடத்திய போராட்டங்கள்தான் உலக அளவில் இவர் பேசப்படுவதற்குக் காரணம். இன்று கல்வி என்பது உலகம் முழுவதுமே விற்பனைப் பொருளாகிவிட்டது. 'குடிமக்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க வேண்டியது ஓர் அரசாங்கத்தின் கடமை’ என்பதை அனைத்து அரசுகளுமே மறந்துவிட்டன. சிலியிலும் இதே நிலைமைதான். லட்சக்கணக்கில் செலவழிக்காமல் அங்கு ஆரம்பக் கல்வியை முடிக்க முடியாது. கல்லூரி வரையிலும் படிக்க வேண்டுமெனில், இன்னும் பலப்பல லட்சங் கள் வேண்டும். இந்தப் பணத்தைக் கட்ட முடியாதவர்கள் படிக்கவும் முடியாது. அப்படியே படிப்பவர்கள் கல்விக் கடன் மூலமே படிக்கிறார்கள்.

ஏழை, நடுத்தரவர்க்க மக்களைப் படிக்கவிடாமல் துரத்தி அடிக்கும் இந்த மோசமான நிலைமைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டிப் போராடினார் கமிலா. 2011-ன் இறுதியில் துவங்கிய போராட்டங்களால் சிலி ஸ்தம்பித்தது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு லட்சம் மாணவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் சாண்டியாகோவை நோக்கி முற்றுகையிட்டனர். 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 100-க்கும் அதிகமான பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. ஒரு முழுக் கல்வி ஆண்டே ரத்துசெய்யப்பட்டது. '2011-2012 சிலி மாணவர் போராட்டம்’ என வரலாறு இதைக் குறிப்பிடுகிறது. 25 வயது கமிலா, ஆளும் கட்சிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்தார். போராட்டங்களில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நிகழ்த்தப்பட்டது. ஒரு மாணவர் உயிரிழந்தார். ஆனால், மாணவர்கள் எதற்கும் சளைக்கவில்லை. பேரங்களுக்கு கமிலா அடிபணியவில்லை.  

அடக்குமுறைகளை ஏவிப் போராட்டங்களை முடக்கப்பார்த்த சிலி அரசு, இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தி, கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதாகச் சொன்னது. ஆனால், அது வெறும் கண்துடைப்பாகவே இருந்தது. 'அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதே எங்கள் இறுதி

கமிலா!

இலக்கு. இலவசக் கல்வி என்பது சலுகை அல்ல; அது எங்கள் உரிமை’ என மீண்டும் 2012-ல் ஆர்ப்பரித்தார்கள். சில மாதங்கள் சற்றே அடங்கியிருந்த போராட்டம், கடந்த மாதம் ஆக்ரோஷம்கொண்டது. நாடு முழுவதும் இரண்டரை லட்சம் மாணவர்கள் திரண்டனர். இப்போதும் மாணவர்கள் அடங்கவில்லை. இலக்கை அடையும் வரை விடாமல் போராடுகின்றனர்.

போராட்டங்களை வழிநடத்தும் கமிலா, ''அரசாங்கம் சொல்லும் பணத்தைக் கட்டும் அளவுக்கு எனக்கு வசதி இருக்கிறது. ஜாலியாக அரட்டையடித்து நண்பர்களுடன் பொழுதுபோக்க வயதும் இருக்கிறது. ஆனால், நான் விரும்புவது அதை அல்ல. என்னைப் போல அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும். அதுவரையிலும் நாங்கள் விடப்போவது இல்லை!'' என்கிறார் உறுதியாக.

ஈழப் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்த தமிழக மாணவர்கள், இத்தகைய இலவசக் கல்விக் கோரிக்கைகளுக்காகவும் ஒன்றிணைய வேண்டும். இங்கு மட்டும் கொஞ்ச நஞ்சமா பணம் கட்டு கிறோம்?