Published:Updated:

கேம்பஸ் இன்டர்வியூ

சில உண்மைகள்... சில எச்சரிக்கைகள்! பாரதி தம்பி

##~##

‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்!

'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.

'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’

சென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

கேம்பஸ் இன்டர்வியூ

''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது  அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வா கும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்!

டோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்றுப் படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்?

அதைத் தெரிந்துகொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர் கள் இருக்கிறார்கள்... 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லா யிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்க நிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர் களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடு கின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள்.  சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்!'' என்கிறார் செந்தில்.  

ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...

''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா?’ என்று கேட்பார் கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது!'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.

எனில், இதில் கல்லூரிகளின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே! அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

கேம்பஸ் இன்டர்வியூ

இந்த நிலைமைகுறித்து மாணவர்கள் வெளிப்படையாகவும் பேச முடியாது. அப்படிப் பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்குப் பிரச்னை என்றால், மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என 'நாஸ்காம்’ (NASSCOM) அமைப்பு இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

''இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக, ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். 'இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம்போலப் பேசுவார்கள். இந்த வெளிப்படையற்ற தன்மைதான் பல சிக்கல்களுக்குக் காரணம். இப்படிச் செய்வதன் மூலம் அனைத்து ஊழியர்களையும் தனித்தனியே பிரித்துவைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை'' என்கிறார் 'சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்தி மாணவர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய அரசாங்கமோ, தன் பங்குக்கு அவர்களின் சுமையை மறைமுகமாக அதிகரிக்கிறது. இலவசக் கல்வியைக் கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக் கடன் வழங்குவதைப் பெரிய திருவிழா போலக் கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை மிக முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பு முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால், ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த  வேண்டும். 'கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பது இதனால்தான். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க... மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டாத நிலை!

கேம்பஸ் இன்டர்வியூ

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறுகி வரும் நிலையில், இந்த அபாயகர போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக் கூடும்.

'இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்ததுபோல ஆர்டர் கிடைத்திருந்தால், வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சமாதானங்கள் சொல்லப்படலாம். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல... என்னதான் புராஜெக்ட் ஆர்டர் குறைந்திருந்தபோதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போ தும்போல 25 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியை யும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாப வெறியின் பலி ஆடுகள்தான் அப்பாயின்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் அப்பாவி மாணவர்கள்!

''பொறுமை பலன் தரும்!''

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியும் வேலை கொடுக்கப்படாத நிலைகுறித்து ஹெச்.சி.எல். நிறுவனத் தரப்பில் விளக்கம் கேட்டோம். அந்த நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி சந்தோஷ் மல்லையா நமக்கு அளித்த விளக்கத்தின் சாராம்சம் இங்கே...

''சமீப வருடங்களிலேயே 2012-ம் ஆண்டில் தான் ஒட்டுமொத்த ஐ.டி. துறையே மிகவும் குறைவான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்தது. ஐ.டி. துறைக்குள்ளே நிகழ்ந்த சில மாற்றங்களும் ஃப்ரெஷ்ஷர்களால் சமாளிக்க முடியாத, நிபுணத்துவம் தேவைப்படும் பணி களைத் தோற்றுவித்தது. அதனாலேயே வழக்கமான அளவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 'ஓப்பனிங்’ கொடுக்க இயலாத நிலை உண்டானது. இன்னும் சொல்லப்போனால், பணியில் அமர்த்தப்பட்ட பலருக்கு புராஜெக்ட் ஒதுக்க முடியாமல் 'பென்ச்’சில் இருக்கவைக்கப்பட்டார்கள். (புராஜெக்ட் ஒதுக்கப்படாத ஊழியர்கள் தினமும் அலுவலகம் வந்து சும்மா அமர்ந்து செல்வார்கள். அவர்களைத்தான் 'பென்ச்’சில் இருப்பதாகக் குறிப்பிடுவார் கள் ஐ.டி. நிறுவனங்களில்!)

ஆனால், ஹெச்.சி.எல். நிறுவனத்தில் இந்தப் பிரச்னையைக் கூடுமானவரை விரைந்து தீர்க்க முடிவெடுத்திருக்கிறோம். 2012 பேட்ச் சைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்களைக் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணி அமர்த்தி விட்டோம். மேலும், பலரைப் பணியில் அமர்த் தும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டோம். ஹெச்.சி.எல். நிறுவனத்தைப் பொறுத்தவரை எங்கள் ஊழியர்களுக்கு வாழ்வின் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் பன்முகத் திறமைகளை வளர்க்கும் பயிற்சிகள் பணிகளுக்கு இடையே வழங்கப்படும். அதில் பொறுமை, தனக்கான நேரம் வரும்போது கடமையைச் சரியாகச் செய்தல், நெகிழ்வுத்தன்மை ஆகிய குணங்களைக் கைக்கொண் டவர்கள் தொலைநோக்கில் வெற்றி கரமான ஐ.டி. புரொஃபஷனலாக மிளிர்வார்கள்!''

''அது அவரவர் பிரச்னை!''

இந்த கேம்பஸ் இன்டர்வியூ சிக்கல்கள் தொடர்பாக சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் 'பல்கலைக்கழகம் மற்றும் தொழிற்துறை ஒருங்கிணைப்பு மையத்தின்’ (centre for university industry collaboration) இயக்குநர் செல்வத்திடம் கேட்டோம். ''கேம்பஸ் இன்டர் வியூவில் தேர்வு செய்த பிறகு நிறுவனங்கள் வேலைக்கு எடுக்காமல் இருப்பது, மாணவர் களின் தனிப்பட்ட பிரச்னை. அதை ஒவ்வொரு வரும் தனிப்பட்ட வகையில்தான் எதிர்கொள்ள வேண்டும். கல்லூரி அனுமதியின்போது, 'உங்களுக்கு வேலை வாங்கித் தருவோம்’ என எழுதித் தரவில்லையே? ஆகவே, கல்லூரித் தரப்பு ஏமாற்றிவிட்டது என்று சொல்ல முடியாது. மற்றபடி, இந்த விஷயத்தில் கல்லூரிகளின் பொறுப்புகுறித்துக் கண்காணிக்கவோ, கட்டுப் படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ இதுவரை எந்த அமைப்பும் இல்லை. ஆகவே, இதில் விளக்கம் தர எதுவும் இல்லை. யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களின்சொந்தப் பிரச்னை. அதற்கான தீர்வை அவர்கள்தான் தேடிக்கொள்ளவேண்டும்'' என்றார்.