Published:Updated:

பைத்தியங்களின் உலகம்!

பைத்தியங்களின் உலகம்!

##~##
பைத்தியங்களின் உலகம்!

“என் கணவர் சரப்ஜித் சிங் காணாமல் போனபோது எங்கள் மூத்த மகள் ஸ்வபன் தீபுக்கு இரண்டரை வயது. இளையவள் பிறந்து 23 நாட்களே ஆகியிருந்த நிலையில், அவர் காணாமல் போனார். ஒன்பது மாதங்கள் கழித்து பாகிஸ்தான் சிறையில் இருந்து கடிதம் வந்த பின்னர்தான் அவரை லாகூர் குண்டுவெடிப்பு வழக்கில்குற்றம் சாட்டி பாகிஸ்தான் அரசாங்கம் சிறையில் அடைத்திருப்பது தெரியவந்தது. 23 ஆண்டுகள் கழித்து இப்போது பிணமாக அவர்கள் என் கணவரை அனுப்பியிருக்கிறார்கள்!'' - கதறியழு கிறார் சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்ப்ரீத் கவுர்.

1990-ல் நடந்த லாகூர் தொடர் குண்டுவெடிப்புகளின் பொறுப்பாளி எனக் குற்றம்சுமத்திக் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சரப்ஜித் சிங். கடந்த மாதம் 26-ம் தேதி சிறைக்குள் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பலரும் வேடிக்கை பார்க்க செங்கற்களாலும் இரும்புத் தகடுகளாலும் சிறைவாசிகளாலேயே கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவரது தலை மற்றும் மூளையின் 90 சதவிகித பாகங்கள் பாதிக்கப்பட்டு நினைவிழந்துவிட, சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் கழித்தே அவரை மீட்டிருக்கிறார்கள் சிறைத் துறைக் காவலர்கள்.  

சரப்ஜித் சிங் மீதான தாக்குதலில் பாகிஸ்தான் உளவுத் துறைக்கும், லாகூர் சிறை நிர்வாகத்துக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் கசிந்திருக்கும் நிலையில், இரண்டு கைதிகளை இந்த வழக்கில் கைதுசெய்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. இந்தியா வில் அடுத்தடுத்து தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தானி யர்கள் அஜ்மல் கசாப், அப்சல் குருவின் தூக்கு களுக்குப் பதிலடியாக சரப்ஜித் சிங் கொல்லப் பட்டார் என்பது பொதுவாக எழுந்திருக்கும் கருத்து.

பைத்தியங்களின் உலகம்!

சரப்ஜித் சிங் மரணம்பற்றிய மர்மங்களும் பரபரப்புகளும் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போதே, இந்தியாவில் நிகழ்ந்தது அந்தச் சம்பவம். காஷ்மீரின் புறநகர்ப் பகுதியில் அதீத பாதுகாப் பைக்கொண்ட கோட் பால்வால் மத்திய சிறையில் 11 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த சனவுல்லா ரஞ்சய். காஷ்மீரில் அரங்கேறிய நான்கு முக்கியமான தீவிரவாதச் செயல்களோடு சனவுல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு 1999-ல் கைது செய்யப்பட்டவர் அவர். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற சத்தீஸ்கரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வினோத் குமார் சிறைக்குள்ளேயே சனவுல்லாவைத் தாக்கியிருக்கிறார். சரப்ஜித் சிங்கைப் போலவே நினைவிழந்துபோனார் சனவுல்லா.  

பைத்தியங்களின் உலகம்!

பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட 49 வயது சரப்ஜித் சிங், காஷ்மீர் சிறையில் தாக்கப்பட்ட 54 வயது சனவுல்லா... இரண்டு சம்பவங்களுமே திட்டமிட்டு நடத்தப்பட்ட பழிவாங்கும் செயல்கள். சனவுல்லாவின் தலைப் பகுதியிலும் சரப்ஜித் சிங்குக்கு உண்டானதுபோலவே காயங் கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரே விதமாக பரஸ்பரம் நடந்துள்ள இந்த இரு தாக்குதல்களின் பின்னணி இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.

பாகிஸ்தானில் மட்டும் 270 இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் பல்வேறு சிறைகளில் 220 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களில் 90 சதவிகிதத்தினர் கடலில் திசை தப்பி பாகிஸ்தானில் கரை சேர்ந்த இந்திய மீனவர்கள். மீதமுள்ளோர் எல்லை ஓரங்களில் ஆடு, மாடு மேய்க்கும் பழங் குடிகள். கைதிகளுக்கான தண்டனைகளை நிறை வேற்றுவதில் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் நிலவும் மனநிலை புகழ்பெற்ற உருது எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் கதைகளின் சாரத்தை நினைவூட்டுகிறது.

தேசப்பற்றின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் வலுவற்ற எளிய மக்களைக் கொல்லத் துடிக்கும், தண்டனை வழங்க நினைக்கும் பைத்தியக்காரத்தனம்பற்றியே தன் கதைகளில் காலம் முழுக்க எழுதி வந்தவர் மண்டோ. இன்று லாகூரில் சரப்ஜித் சிங்குக்கும் காஷ்மீரில் சனவுல்லாவுக்கும் நடந்தவற்றைப் பார்க்கும்போது அந்தப் பைத்தியங்களின் உலகம்தான் நினைவுக்கு வருகிறது!