Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ஓவியம்: கண்ணா

##~##

''ஐ.பி.எல். போட்டிகளில் டோனி அடிக்கும் சிக்ஸ்... கிறிஸ் கெய்ல் அடிக்கும் சிக்ஸ்... எதற்கு பவர் அதிகம்?''

''டோனி அடிக்கும் சிக்ஸர்களுக்குத்தான். ஏனென்றால், அதற்குத்தானே சாக்ஷியும் ஸ்ருதிஹாஸனும் குஷியாகி விசில் போடுகிறார்கள்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- எஸ்.ராகுல், தரமணி.

''மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும்?''

'' 'நான் இருக்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள்...’ என கணவன் நொடிந்துபோயிருக்கும் தருணத்தில் ஆறுதல் தருபவராக, 'என் கண்ணுக்கு நீங்கள் ஹீரோதான்...’ என போலியாகக் கூறாமல், நிஜமாகவே கணவனை ஹீரோவாகப் போட்டுப் படமெடுத்த 'திருமதி தேவயானி’போல் இருக்க வேண்டும்!''

- பாலா சரவணன், கோவூர்.

நானே கேள்வி... நானே பதில்!

''அண்ணா சொல்லி தம்பிகள் மறந்த விஷயம் ஒன்றை ஞாபகப்படுத்துங்களேன்?''

''தி.மு.க. முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயம், முதலமைச்சர் அறையில் அறிஞர் அண்ணா சென்றமர்ந்தார். மற்ற அமைச்சர்கள் அனைவரும் எதிரில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். அப்போது அண்ணா சொன்னார், 'இந்த நாற்காலிகள் நமக்கு என்றும் நிலையானவை என்ற எண்ணத்தில் அமராதீர்கள். இந்த நாற்காலிகளை விட்டு எந்த ஒரு நேரத்திலும் நாமே எழுந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம். அல்லது சில எதிர்பாராத சூழ்நிலைகளேகூட நம்மையெல்லாம், இந்த நாற்காலிகளை விட்டு வெளியேற்றவும் செய்யலாம். எதற்கும் நாம் மிக எச்சரிக்கையோடுதான் இந்த நாற்காலிகளில் அமர வேண்டும்!’ ''

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

'' 'இனிமேல் த.மா.கா. என்ற பேச்சுக்கே இடமில்லை!’ என காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி உள்ளாரே?''

''த.மா.கா-வைப் பற்றி மூத்த அரசியல் தலைவர் முன்னர் இப்படிச் சொன்னார், 'த.மா.கா. என்பது தமிழ் மாநில காங்கிரஸ் அல்ல... தன்மான காங்கிரஸ்!’ என்று. அதனால் இப்போது இளங்கோவன் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம்!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''மலிவுவிலை உணவகங்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுபற்றி?''

'' 'தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் தொட்டிலில் குழந்தைகிடப்பது திட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கலாம்... ஆனால் அரசுக்கு?!’ என்று கவிஞர் மு.மேத்தா ஒரு கவிதையில் கேள்வி எழுப்புவார். அந்தக் கேள்வி மலிவு விலை உணவகங்களுக்கும் பொருந்தும்!''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

நானே கேள்வி... நானே பதில்!

''நிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. அறிக்கையை காங்கிரஸ் திருத்தி உள்ளதாமே?''

''இப்படியெல்லாம் செய்வதைவிட சி.பி.ஐ-யைக் கலைத்துவிட்டு, எல்லா ஊழலையும் காங்கிரஸே விசாரிக்கலாம். விசாரணை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்குமே!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

'' 'இந்தியா இருக்கும் வரை காங்கிரஸ் இருக்கும்!’ என்று காந்தி சொல்லியிருப்பதாக குமரி அனந்தன் சொல்கிறாரே?''

''அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிக்கப்போகுது. இந்த நேரம் ஏங்க இதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கீங்க!''

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

''ஒரு விஷயத்தை நீர்த்துப்போகச் செய்வதில் கில்லாடி யார்?''

''நம் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இலங்கை இனப் படுகொலையைச் 'சகோதர யுத்தம்’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்தார். இப்போது ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை அனைவரும் ஊழல் என்று குறிப்பிட்டுக்கொண்டுஇருக்கும்போது, கலைஞர் தொலைக்காட்சியில் மட்டும் 'ஸ்பெக்ட்ரம் விவகாரம்’ என்றே வருகிறது. இதெல்லாம் ஒரு சோறு பதம்தான்!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி

நானே கேள்வி... நானே பதில்!

''புத்திசாலித்தனம் என்பதற்கு ஓர் உதாரணம்..?''

'' 'நூறாண்டுகளாக வியாபாரம் நடந்துவரும் கடை’ என ஒரு ஸ்வீட் ஸ்டால்காரர் பெருமையாக விளம்பரம் செய்தார். அருகிலேயே புதிதாகக் கடை துவங்கிய இன்னொரு ஸ்வீட் ஸ்டால்காரர் தன் கடையில் இப்படி ஒரு போர்டு மாட்டினார்...

'நேற்றுதான் எங்கள் கடையைத் தொடங்கினோம். எங்களிடம் பழைய ஸ்டாக் எதுவும்இல்லை!’ ''

- ஆ.திலீபன், திருநெல்வேலி.

''கருணாநிதி ஆட்சியில் 'காவல்’ துறை 'ஏவல்’ துறை ஆகிவிட்டது என்பது எதிர்க் கட்சியினரின் விமர்சனம். இப்போது நிலவரம் எப்படி?''

''பெரும்பாலான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் 'கேவிக் கேவி’ அழும் 'கேவல் துறை’யாகிவிட்டதோ!''

- சம்பத் குமாரி, தஞ்சாவூர்.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space)  விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!