Published:Updated:

கூடங்குளம்... இனி என்ன ஆகும்?

டி.அருள் எழிலன்

##~##

நாட்டின் வளர்ச்சிக்கு அணுசக்தி அவசியம். ஆகவே அணு உலைக்குத் தடை விதிக்க முடியாது!’ என்று கூடங்குளம் அணு உலை இயங்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கின் மீது தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அணு உலையை எதிர்ப்பவர்களுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், இந்த வழக்கைத் தாக்கல் செய்த 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினேன்.

''இந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பின்னடைவுதானே?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இல்லை. முழுக்க அப்படிச் சொல்லிவிட முடியாது. சுற்றுச்சூழல் அனுமதி, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே நாங்கள் நீதிமன்றம் சென்றோம். அந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், சமீபத்தில் 'அணு உலையில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன’ என்று கூறி, மீண்டும் நீதிமன்றம் சென்றோம். அது தொடர்பான விசாரணையின் மீதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னர் நாங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முழுமையான பதில் இந்தத் தீர்ப்பில் இல்லை!''

''ஆனால், நீதிமன்றத் தீர்ப்பின் துணைகொண்டு இனி கூடங்குளம் அணு உலை இயங்கத் தொடங்கிவிடுமல்லவா?''

''அப்படி உடனடியாக அவர்கள் இயங்க முடியாது. மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி வழங்கி, அதனுடைய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அணு உலை முழுமையாக இயங்க முடியும்!''

கூடங்குளம்... இனி என்ன ஆகும்?

''மத்திய-மாநில அரசுகள் அமைத்த குழுக்களின் பரிந்துரைப்படி 17 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே?''

''17 கோரிக்கைகளையும் நிறைவேற்றி, அதனுடைய அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் அணு உலை இயங்க அனுமதிக்கும் என நான் நம்பு கிறேன்!''

''அணு உலை இயக்கம் தொடர்பான உங்களின் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துவிட்டதா?''

''இல்லை... கதிர்வீச்சுக் கழிவுகளை எப்படிப் பாதுகாப்பீர்கள் என்பன போன்ற கேள்விகளுக்குப் பதிலே இல்லை. தரம் குறைந்த பொருட்களால் அணு உலை கட்டப்பட்டிருக்கிறது என்று விஞ்ஞானி கோபால கிருஷ்ணன் சுமத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் இல்லை!''

கூடங்குளம்... இனி என்ன ஆகும்?

''மத்திய- மாநிலக் குழுக்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் சொன்ன பிறகு, இப்போது நீதிமன்றமும் சொல்லிவிட்ட பிறகும் உங்களுக்கு அணு உலை பாதுகாப்பில் நம்பிக்கை வரவில்லையா?''

''காலம் காலமாக வாழும் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்படும்  அச்சத்தில் இருந்துதான் கேள்விகள் பிறக்கின்றன. அணு உலை தொடர்பாக நாங்கள் கேட்ட கேள்விகளை அணு உலை ஆதரவு விஞ்ஞானிகளோ, அரசோ மறுக்கவே இல்லை. ஆனாலும், 'நாட்டுக்கு மின்சாரம் தேவை. நாட்டுமக்களின் நலனுக்காக சில ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் தவறேதும் இல்லை என்பதுபோல்தான் அவர்களின் பதில் உள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில்கூட அந்த ஆலையால் ஏற்படும் கேடுகளை எவரும் மறுக்கவில்லை. 'காப்பர் வேண்டும்... அதனால் ஸ்டெர்லைட் வேண்டும்’ என்றார்கள். இப்போது 'மின்சாரம் வேண்டும்... அதனால் அணு உலை வேண்டும்’ என்கிறார்கள்!''

''நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''இல்லை. மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்!''

'' 'எங்களுக்கும் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடுத்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்கிறாரே சுப.உதயகுமாரன்?''

கூடங்குளம்... இனி என்ன ஆகும்?

''ஆம்... எந்தச் சம்பந்தமும் இல்லைதான். நாங்கள் சுற்றுச்சூழல் அமைப்பினர். நாங்கள் நீதிமன்றத்தில் போராடுகிறோம், அவர்கள் மக்கள் மன்றத்தில் போராடுகிறார்கள். அந்தப் பொருளில்தான் அவர் அப்படிச் சொன்னார். அணு உலை மூடப்படும் வரை இரு தரப்பின் போராட்டமும் தொடரும்!''

''விரைவில் மின்சாரம் வரும்!''

கூடங்குளம் அணு உலை இயக்குநர் சுந்தரிடம் தீர்ப்புக்குப் பிறகான நிலவரம்குறித்துக் கேட்டேன்... ''சிலர் மக்களிடம் அணு உலைகுறித்த பொய்ச் செய்திகளைப் பரப்பி அச்சமூட்டிக்கொண்டே இருந்தார்கள். மத்திய அரசு அமைத்த முத்துநாயகம் கமிட்டியும், மாநில அரசு அமைத்த எம்.ஆர்.சீனிவாசன் குழு அறிக்கையும், உயர் நீதிமன்றமும், இப்போது உச்ச நீதிமன்றமும் அணு உலை இயங்கலாம் என்று கூறியது அந்தப் பிரசாரத்தை முறியடித்திருக்கிறது. நாங்கள் 1,500 பேர் அணு உலையில் எந்த அச்சமும் இன்றி வேலை செய்கிறோம். விரைவில் ஒப்பந்தப்படி 925 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழக அரசுக்கு உற்பத்திசெய்து கொடுப்போம்!''  என்றவரிடம், ''இதுவரை ஆறு பேர் அணு உலைக்குள் மரணம் அடைந்திருப்பதாக சுப.உதயகுமாரன் சொல்கிறாரே!'' என்று கேட்டேன்... ''சில தினங்களுக்கு முன்பு ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இன்னொருவர் மின்சாரம் தாக்கி இறந்தார். ஆனால், கதிர்வீச்சில் எவரும் மரணம் அடையவில்லை. நாங்கள் வெளிப்படையான தன்மையோடு இயங்குகிறோம்!'' என்றார்.