Published:Updated:

“சுதந்திர காஷ்மீர்!”

உருகும் யாசின் மாலிக் டி.அருள் எழிலன்

“சுதந்திர காஷ்மீர்!”

உருகும் யாசின் மாலிக் டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

ந்தியாவில் மிக அதிகமாகக் கைதுசெய்யப்பட்ட போராளி நானாகத்தான் இருப்பேன். 200 தடவைக்கு மேல் சிறை சென்று இருப்பேன். வீட்டுச் சிறை வைத்தவை எல்லாம் தனிக் கணக்கு. கைதுகளின்போதான சித்ரவதையில் என் இடது காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. ஆக்ரா சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு வருடம் இருந்தேன். இந்தியாவிலேயே மோசமான சிறைச்சாலை,  ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சிறைத் தண்டனையும் வீட்டுக் காவல் தண்டனையும் ஒன்றுதான் என்ற உளவியல்ரீதியான புரிதலுக்கு என் மனம் பழகிவிட்டது!'' என்கிற யாசின் மாலிக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர். காஷ்மீர் இளைஞர்களைக் கவர்ந்த போராளி. 'மதச்சார்பற்ற காஷ்மீரம்’ என்ற கோஷத்தை இன்று வரை முன்வைக்கும் ஒரே தலைவர். 1994-ல் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிப் போராட்டத்துக்கு வந்தவர், சமீபத்தில் வீட்டுச் சிறையில் இருந்து விடுதலையானார். 'நாம் தமிழர்’ இயக்கத்தின் நான்காம் ஆண்டு விழாவுக்காகத் தமிழகம் வந்தவரிடம் உரையாடியதிலிருந்து...

''விக்கிபீடியா தளம் உங்களை ஓர் இந்தியர் என்றுதான் குறிப்பிடுகிறது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இல்லை... நிச்சயமாக நான் இந்தியன் இல்லை. இந்திய சுதந்திரத்தின்போது காஷ்மீர் மூன்று சமஸ்தானங்களின் கைகளில் இருந்தது. ஒரு தற்காலிகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தார் நேரு. அப்போது காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என்று காஷ்மீரிகளிடமும், நாடாளுமன்றத்திலும், ஐ.நா - விலும் இந்தியா வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு, ராணுவ முகாம்களையும் சித்ரவதை முகாம்களையும் எங்களுக்கான தீர்வாக அளித்தார்களே தவிர, காஷ்மீரிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை யாரும் நிறைவேற்றவே இல்லை!''

“சுதந்திர காஷ்மீர்!”

''இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஹபீஃஸ் சையதுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறீர்களே... அதுதான் உங்களை அடிக்கடி வீட்டுக் காவலில் வைக்கிறார்களோ?''

''2006-ல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாகச் சந்தித்தபோது போராளிகளையும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரினேன். அப்போது அவர், 'நீங்கள் அதற்கு உதவ முடியுமா?’ என்று கேட்டார். அதன் பொருட்டுதான் நான் பாகிஸ்தான் சென்று ஹபீஃஸ் சையதைச் சந்தித்தேன். அதுதான் எங்களுக்கு இடையிலான அறிமுகம். சமீபத்தில் அப்சல் குரு ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டதற்காக இஸ்லாமாபாத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு நான் அழைக்காமலேயே பலர் கலந்துகொண்டார்கள். அப்போது ஹபீஃஸ் சையதும் அழையா விருந்தாளியாக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதால் ஹஃபீஸ் சையதைச் சந்தித்தபோது என்னைத் திட்டாதவர்கள், இப்போது என்னைத் துரோகி என்றும் கைதுசெய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்!''

''நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவை...''

(கேள்வியை முடிக்கவிடாமல் இடைமறிக்கிறார்) ''இல்லை... இல்லை... நீங்களும் ஒரு தீர்ப்பை எழுதாதீர்கள். ஏற்கெனவே எழுதப்பட்ட தீர்ப்பைப் படியுங்கள். அப்சல் குரு மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பல்வேறு பிரச்னைகளில் இந்திய மக்களின் அதிருப்தியை ஆற்றுப்படுத்த அவரைத் தூக்கிலிட்டு அப்சலின் உடலைக்கூட மனைவி, பிள்ளைகளிடம் காட்டாமல் புதைத்தார்கள். நிரபராதியான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீரிகள் மனதளவில் வெகுவாக விலகிச் சென்றுவிட்டார்கள். இங்கு முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது ஒன்று உள்ளது... அப்சல் குரு ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டார். அவர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பே வழங்கப்படவில்லை. அந்த விதத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் தொடர்பான தூக்கு விவகாரத்தில் தமிழகம் முன்னரே விழித்துக்கொண்டது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதுபோல காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சலுக்காக ஒரு தீர்மானமும் வரவில்லையே!''

“சுதந்திர காஷ்மீர்!”

''ம்... என்னதான் நடக்கிறது காஷ்மீரில்?''

''5,000 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட காஷ்மீர், இப்போது அழகிய இந்திய ராணுவ முகாமாக இருக்கிறது. காஷ்மீரில் இதுவரை ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு காஷ்மீரியும் தினமும் தான் அவமானப்படுத்தப்படுவதாக நினைக்கிறான். எங்களின் பிரச்னைகளைப் பொறுத்தவரை காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்ட்களும், மதவாதிகளும் ஒன்றுபோலவே சிந்திக்கிறார்கள். அவர்கள் எங்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. அதற்காக முயற்சியெடுக்கவும் இல்லை. என்னை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததைப் போல, மொத்தக் காஷ்மீரிகளையும் இந்திய ராணுவம் 'மாநிலச் சிறை’யில் வைத்திருக்கிறது!''

''1994-ல் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டீர்கள்... போராளிகள் ஜனநாயகத்திடம் தோற்றுவிட்டார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?''

''1947 தொடங்கி 1988 வரை அமைதி வழியில்தான் காஷ்மீரிகள் போராடினார்கள். 1987-88 காலகட்டத்தில் விசாரணை மையங்கள் எனும் பெயரில் ராணுவ சித்ரவதை முகாம்கள் திறக்கப் பட்டபோது, மக்கள் புரட்சி வெடித்தது. எனது 18 வயதில் நான் கைதுசெய்யப்பட்டேன். என்னைப் போல பல நூறு இளைஞர்கள் இழுத்துச் செல்லப் பட்டார்கள். அதன் பிறகே, காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது.  

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைமைத் தளபதி என்பதால், 1990-ல் என்னை மீண்டும் கைதுசெய்தார்கள். இதய வால்வில் எழுந்த பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது மனிதஉரிமை ஆர்வலர்கள், மேற்குலக நாடுகளைச் சார்ந்தவர் கள், காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி ஆகியோர் என்னைச் சந்தித்தபோது எங்கள் மக்களின்  பிரச்னைகளைச் சொன்னேன். அவர்களோ சமாதானத்துக்கான ஓர் அடையாளமாக, போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரினார்கள். 1994-ல் உடல் நலம் கருதி உச்ச நீதிமன்றம் எனக்கு விடுதலை வழங்கியது. வெளியில் வந்த நான் போர் நிறுத்தம் அறிவித்தேன். ஆனால், நாங்கள் போர் நிறுத்தம் செய்த பின்னர், துரதிர்ஷ்டவசமாக எங்கள் அமைப்பைச் சார்ந்த 600 போராளிகளை இந்தியா கொன்றுவிட்டது. இதுதான் நடந்தது. இதை நீங்கள் ஜனநாயகத்தின் வெற்றி என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனாலும் நான் அஹிம்சை போராட்டத்தைத்தான் நம்புகிறேன்!''

''ஈழப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டதா? ஈழப் போராட்டத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''இலங்கையில் தமிழ் பேசியதாலேயே இனப் படுகொலை ஒன்றின் மூலமாக இலங்கைத் தமிழர்களின்  இன விடுதலை ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தத் தமிழர்களின் போராட் டம் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. மதச்சார்பற்ற வகையில் மக்கள் சமூகங்கள் ஒன்றிணைந்து அஹிம்சை வழி யில் தங்களின் கோரிக்கைக்காகப் போராட வேண்டும்!''

''சுதந்திர காஷ்மீர் சாத்தியமா?''

''எங்கள் சிந்தாந்தம் எளிமையானது. ஒவ்வொரு காஷ்மீரியின் மனதிலும் அது ஊறிஉள்ளது. அது சுதந்திரமான காஷ்மீரம். ராணுவ வல்லமை யால் அதைத் தோற்கடிக்க முடியாது!''

''43 வயதில் காதல் திருமணம்... மனதில் பூ பூக்க ஏன் அவ்வளவு தாமதம்?''

  ''காஷ்மீர் மக்களுக்காக ஆதரவு கோரி பாகிஸ்தானில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் நான் புகழ்பெற்ற உருது மொழிக் கவிஞன் ஃபயஸ் அகமது ஃபயஸின் கவிதைகளை மேற்கோள்காட்டிப் பேசினேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் என்னைப் பார்த்து 'உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது’ என்ற அந்தப் பெண்தான் இப்போது என் காதல் மனைவி முஷால். அவர் பாகிஸ்தானில் ஒரு புகழ்பெற்ற ஓவியர். இப்போது காஷ்மீர் பாரம்பரியத்தில் கலந்துவிட்டார். பொது வாழ்வில் ஈடுபட்ட பிறகு, மனதில் மெல்லிய பக்கங்களுக்கு இடமில்லாமல்போனது. ஆனால், எனக்குள் காதல் எப்படி உருவானது எனத் தெரியவில்லை.

இப்போது எங்கள் 14 மாதக் குழந்தைக்குக் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும் எங்களுக்கு இடையிலான காதலைப் பெருகச் செய்துகொண்டு இருக்கிறது!''