Published:Updated:

தர்மபுரி காதல் கதை

“திவ்யா திரும்பி வருவார்!” இளவரசன் காத்திருக்கிறார்டி.அருள் எழிலன், படம்: ப.கார்த்திக்

தர்மபுரி காதல் கதை

“திவ்யா திரும்பி வருவார்!” இளவரசன் காத்திருக்கிறார்டி.அருள் எழிலன், படம்: ப.கார்த்திக்

Published:Updated:
##~##

மிழகத்தில், தமிழக அரசியல் சூழலில் ஏகப்பட்ட பதற்றத்தை விதைத்த அந்தக் காதல், இப்போது சாதிக்கு இரையாக்கப்பட்டுவிட்டது!

செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும் இப்போது ஒன்றாக இல்லை. தர்மபுரியில், மூன்று கிராமங்களை எரித்து, பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய சாதி வெறி, திவ்யா-இளவரசன் காதலையும் வன்முறையாகப் பிரித்திருக்கிறது. ''நான் அம்மாவுடன் போகிறேன்!'' என்று நீதிமன்றத்தில் கூறிய திவ்யாவின் முடிவு, அவர் மனமுவந்து எடுத்த முடிவல்ல என்பது ஊரறிந்த ரகசியம்தான். தமிழகத்தில் சாதி வெறிக்குச் சவால்விட்ட இந்த ஜோடி, மறுபடியும் இணைவார்களா என்பது இப்போது நம் முன் எஞ்சியிருக்கும் விடை கணிக்க முடியாத கேள்வி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உயர் நீதிமன்றத்தில் ஆஜராகப்போகும் திவ்யா, இளவரசனைவிட்டுப் பிரிந்து அம்மாவுடன் இணையப்போகிறார்’ என்ற செய்தி முந்தைய நாள் இரவே வெளியில் கசிந்திருந்தது. இளவர சனைத் தொடர்புகொண்டபோது, இருவரும் கடந்த நான்காம் தேதியே பிரிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது தெரிந்தது.

திவ்யாவின் சார்பாக பா.ம.க. வழக்கறிஞர் பாலு தலைமையில் ஓர் அணியும், இளவரசன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு மற்றும் ரஜினிகாந்த் தலைமையில் ஓர் அணியும் நீதிமன்றத் தில் திரண்டு நின்றது. இளவரசன், திவ்யாவை நோக்கி பரிதவிப்புப் பார்வையை வீசி இறைஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால், இளவரசனின் பார்வையைக்கூடத் தவிர்த்த திவ்யா, தலை கவிழ்ந்து விசும்பி அழுதபடியே இருந்தார். ஒரு மகத்தான காதலின் துயரம்மிக்க நிமிடங்கள் அவை.

தர்மபுரி காதல் கதை

இறுதியில், ''என்னை யாரும் கடத்திவரவில்லை. இப்போதைய மனநிலையில் அம்மாவுடன் இருப்பதை என் மனம் விரும்புகிறது. காதல் குறித்தும், இளவரசன் குறித்தும் பிறகு முடிவு எடுக்கிறேன்'' என்று உடைந்த குரலில் நீதிபதியிடம் தெரிவித்தார் திவ்யா. அவர் அம்மாவுடன் செல்ல நீதிமன்றம் அனுமதிக்க, நீதிமன்ற வளாகத்தில் வேறு யாருடனும் பேச அனுமதிக்கப்படவில்லை திவ்யா. இளவரசன் கட்டிய தாலியும் அவருடைய கழுத்தில் இல்லை.

'குழப்பமான மனநிலையில்’ அம்மாவுடன் செல்வதாக முடிவெடுத்தபோதிலும், இளவரசனைக் குற்றவாளியாக்க திவ்யா விரும்பவில்லை. இளவரசன் தரப்பு வழக்கறிஞர் குழுவினர், 'பா.ம.க-வினர்தான் திவ்யாவைக் கடத்தினார்கள்’ என்று ஆவேசத்துடன் முறையிட்டபடியே இருந்தனர்.

திவ்யா, இளவரசன் காதல் கடந்த ஆறு மாத காலமாக தமிழக அரசியல் வரலாற்றில் பல ஆழமான, ஆபத்தான போக்குகளின் அடையாளக் குறியாக மாற்றப்பட்டது. இளவரச னுடன் திவ்யா ஊரைவிட்டு வெளியேறியபோது 'சாதிப் பெரியவர்களின்’ நிர்பந்தம் காரணமாக திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். தர்மபுரியில் தலித் கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்த வழக்கில் 150 வன்னியர்கள் மட்டுமல்லாமல் பல சாதியினரும் சிறைக்குச் சென்றார்கள். அதைத் தொடர்ந்து 'தலித் அல்லாதோர் கூட்டமைப்பு’ உருவாக்க முனைந்த பா.ம.க- வின் ராமதாஸ், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, சாதிச் சங்கங்களை ஒன்றுசேர்த்துக் கூட்டங்கள் நடத்தினார். பல மாவட்டங்களில் ராமதாஸ் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட் டது. இதன் உச்சமாக மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா வன்முறையில் சில உயிர்கள் பலியாகின. பிறகு, ராமதாஸ் கைது, அன்புமணி கைது, குருவுக்கு குண்டாஸ்... என்று அடுக்கடுக்கான சம்பவங்கள் நீண்ட அந்த நாட்களில் எல்லாம், உயிரைக் கையில் பிடித்தபடி ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தது திவ்யா-இளவரசன் ஜோடி.

தர்மபுரி காதல் கதை

திவ்யா கரைந்தது எப்படி?

முதல் நான்கு மாதங்கள் பெங்களூரிலும் சென்னையிலுமாக மாறி மாறி வாழ்ந்தனர் இந்தக் காதலர்கள். திவ்யாவுடன் அவரது அம்மாதேன்மொழி தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத் தில் திவ்யாவின் தாயார் இளவரசனிடமும் பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றும் யாருக்கும் தெரியாமலேயே தான் பேசுவதாகவும் தேன்மொழி சொல்லியிருக்கிறார். தான் ஒரு நடைப்பிண மாக வாழ்வதாகவும், உடல்நிலை மோசமாகிக்கொண்டே இருப்பதாகவும் தன் அம்மா சொல்லும்போது எல்லாம் திவ்யா கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். ஆனால், அப்போதும் திவ்யாவால் இளவரசனைவிட்டு எளிதில் பிரிய முடியாத அளவுக்கு அன்புப் பிணைப்பு இருந்துள்ளது.

திவ்யா - இளவரசன் ஜோடி சென்னையில் இருந்து தர்மபுரிக்குக் குடியேறிய உடனே, மீண்டும் பிரச்னைகள் துவங்கிவிட்டன. தேன்மொழியிடம் தான் தர்மபுரியில் தங்கியிருப்பதாக திவ்யா சொல்ல, 'உடனே 'உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று தேன்மொழி கூறியிருக்கிறார். 'இப்போதைக்கு வேண்டாம்’ என்று திவ்யா கண்டிப்பாக மறுத்திருக்கிறார். 'இறந்துபோன உன் அப்பாவின் அரசு வேலையை எனக்குப் பெறுவதற்கான நடைமுறைகளுக்கு உன் கையெழுத்து வேண்டும்’ என்று தேன்மொழி வற்புறுத் திய பிறகுதான், திவ்யா அவரைச் சந்தித்திருக் கிறார். இதற்கிடையில் திவ்யாவின் மனநிலை... அம்மா, காதலன் என இருவருமே தன்னால் நிம்மதியிழந்துவிட்டார்கள் என்ற எண்ணமும், கடந்த ஆறு மாதங்களாகத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பொழுதுகளும் நிம்மதி இழக்கச் செய்திருக்கின்றன.  

இதற்கிடையில், மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் அம்மா ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். தன்னுடன் சகஜமாகப் பேசிக்கொண்டே இப்படி நீதிமன்றத்தில் மனு போடுவதைப் பற்றி திவ்யா தன் அம்மாவிடம் கேட்க, 'வேறு வழியில்லை. நிர்பந் தம்... நான் நடைப்பிணமாகவே மாறிவிட்டேன். நீ கோர்ட்டுக்கு வந்து என்ன நினைக்கிறாயோ அதைச் சொல்லிவிட்டுப் போ... அது போதும்’ என்று சொல்லி அழுதுள்ளார். மார்ச் மாதம் திவ்யா, இளவரசனுடன் நீதிமன்றம் வந்து அவருடனேயே வாழ விரும்புவதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். அதே வழக்கில் விசாரணைக்காக இரண்டாவது முறை திவ்யா நீதிமன்றத்தில் ஆஜரானபோது நீதிமன்ற வளாகத்திலேயே, 'அம்மாவும் தனக்கு வேண்டும்’ என்று கதறி அழுதிருக்கிறார். இதை பா.ம.க. தரப்பினர் பார்த்திருக்கிறார்கள். தாய்க்கும் காதலனுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பலவீனம் அவர்களுக்குப் பிடி பட்டுப்போகிறது. கல்லை எந்தத் திசையில் எறிய வேண்டும் என்பதை அப்போதே முடிவெடுத்து, கச்சிதமாகக் காய் நகர்த்தி, 'அம்மாவுக்கு உடம்பு சீரியஸ். உடனே மருத்துவமனைக்கு வா’ என்ற தொலைபேசி அழைப்பைக் கடைசி அஸ்திரமாக வீச, இப்போது திவ்யா அவர்கள் வசம்!

தர்மபுரி காதல் கதை

இளவரசன்-திவ்யா ஆறுமாத காலம் இணைந்து வாழ்ந்திருந்தாலும், இவர்களின் திருமணம் இன்றைய தேதிக்குச் சட்டப்படி செல்லாது.  இந்த நிலையில், தற்போது நடைபெறுவது ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை என்ப தால், இதில் தன் காதல் குறித்தும், இனி இளவர சனுடன் சேர்ந்து வாழ்வதுகுறித்தும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் திவ்யாவுக்கு இல்லை. எனினும் இந்த விவகாரத்தில் திவ்யாவின் முடிவே இறுதியானதாக இருக்கும்.

ஆனால், அதற்கிடையில் திவ்யாவின் இருப் புக்கும் இளவரசனின் தவிப்புக்கும் யார் பொறுப்பேற்பது?

இத்தனை சம்பவங்களுக்குப் பிறகு, சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் மருத்துவர் ராமதாஸுக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றுதான். அது... தமிழக அரசியல் என்பதே பெரும்பான்மைச் சாதியை மீறாத அரசியல்தான். அதை வெளிப்படையாகச் செய்யும் நீங்கள், தேர்தல் அரசியலில் உங்கள் பிடியைத் தவறவிட்ட நீங்கள், இப்போது சாதி எனும் முட்டுச் சந்துக்குள் சரணடைந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் மீதான இப்போதைய களங்கத்துக்குக் காரணம். இளம் காதலர்களான திவ்யா, இளவரசன் விவகாரத்தில் ராமதாஸ் நினைத்ததைச் சாதித்துவிட்டார் என்பதுதான் அரசியல் அரங்கின் முணுமுணுப்பாக இருக்கிறது. உங்கள் மீதான களங்கத்தைக் கழுவும் விதமாக, ஆறு மாதங்கள் கழித்து திவ்யாவுக்கும் இளவரசனுக்கும் உங்கள் தலைமையில் திருமணம் செய்துவைப்பீர்களா?

''எங்கள் காதலை இழக்க மாட்டோம்!''

வார்த்தைகளிலும் சிந்தனைகளிலும் வேதனையை மட்டுமே சுமந்து நிற்கும் இளவரசனிடம் பேசினேன்...

''சட்டப்பூர்வமான திருமண வயதை எட்டும் முன்னரே திவ்யாவை ஏன் அவசரமாக அழைத்துச் சென்றீர்கள்?''

தர்மபுரி காதல் கதை

''என்கிட்ட முதல்முறை திவ்யா காதலைச் சொன்னப்பவே, என் சாதி, குடும்பம்பத்தியெல்லாம் தெளிவா சொல்லிட்டேன். 'அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் உன் மனசைத்தான் காதலிக்கிறேன்’னு அவர் உறுதியா இருந்தார். அப்புறம் ஒன்றரை வருடத்தில் எங்கள் காதல் மேலும் தீவிரமடைந்தது. போன வருஷம்தான் எங்க காதல் அவங்க வீட்ல இருக்கிறவங் களுக்குத் தெரிஞ்சது. அப்போதான் நான் போலீஸ் வேலைக்கான தேர்வில் கலந்துகொண்டிருந்தேன். உடல் தேர்வு மட்டும் மீதம் இருந்தது. இதற்கிடையில் திவ்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். 'ஜனவரி மாசம் கல்யாணம்’னு உறுதியானதும், திவ்யா அதை என்கிட்ட சொல்லி அழுதாங்க. 'இன்னும் நாலு மாசம் இருக்கே... அதுவரை பொறுமையா இருப்போம்’னு சொன்னேன். ஆனா, அடுத்த சில நாட்களிலேயே போன்ல என்னைக் கூப்பிட்டு, 'என்னை இப்பவே அழைச்சுட்டுப் போ... நீ இல்லாம என்னால வாழ முடியாது’னு கதறி அழுதாங்க. நண்பர்கள்கிட்ட 300 ரூபாய் வாங்கிட்டு, திவ்யாவைக் கூப்பிட்டுக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறிட்டேன்!''

''பிறகு என்ன நடந்தது?''

''2012 அக்டோபர் 10-ம் தேதி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். உடனே, போலீஸ்கிட்ட போனோம். ஆனா, அங்கே ரெண்டு பேர் வீட்ல இருந்தும் சமாதானம் பேச வர மறுத்துட்டாங்க. அப்புறம் தொப்பூரில் இருக்கும் மாமா வீட்டில் இருந்தோம். அங்கே திவ்யாவைப் பார்க்க அவங்க அம்மா தேன்மொழியோடு சில உறவினர்களும் வந்தாங்க. திவ்யாவின் கால்ல விழுந்து, 'மடிப்பிச்சை கேட்கிறேன். குல மானத்தைக் காப்பாத்து. திரும்ப வந்துடு’னு அழுதாங்க. நான் திவ்யாவைச் சுயமாக முடிவெடுக்கும்படி சொன்னேன். திவ்யா அவங்களோட போக மறுத்து, 'உங்களுக்குச் சாதியும் கௌரவமும்தான் முக்கியமாத் தெரியுது. நான் அங்கே வந்தா என்னைக் கொன்னாலும் கொன்னுருவீங்க’னு போக மறுத்துட்டாங்க. அதன் பின்னர்தான், ஊராரின் நெருக்குதலால், திவ்யாவின் அப்பா தற்கொலை செய்துகிட்டார். கிராமத்துல கலவரம் வெடிச்சது. அன்னைக்கி இருந்து ஓடிட்டே இருந்தோம்...'' (அழுகிறார்)

''நிலைமை இப்படி இருக்கும்போது மீண்டும் ஏன் தர்மபுரிக்கே வந்தீர்கள்?''

''பெங்களூரிலும் சென்னையிலும் ஒரு நாளும் நிம்மதியான வாழ்க்கை இல்லை. இடையில் திவ்யா கருவுற்றார். இடைவிடாத அலைச்சலிலும், மன உளைச்சலிலும் கரு கலைந்தது. ஆனா, அவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலும் எங்கள் இருவருக்கும் இடையில் சண்டையோ, சலிப்போ வரவே இல்லை. 'இந்தக் காதலுக்காக நிறைய இழந்துட்டோம். இந்தக் காதலை இழந்துடக் கூடாது’னு உறுதியா இருந்தோம். நாங்கள் தனிமையில் மனஉளைச்சலில் புலம் பிட்டே இருந்ததைப் பார்த்த என் அப்பா, எங்கே நாங்க தற்கொலை செஞ்சுக்குவோமோனு பயந்து தர்மபுரிக்கே எங்களை அழைச் சுட்டு வந்துட்டார். அப்போது இருந்தே திட்டம் போட்டு திவ்யா வின் அம்மா தேன்மொழி மூலம் என்கிட்ட இருந்து திவ்யாவைப் பிரிச்சுட்டாங்க!''

''மீண்டும் உங்களிடம் திவ்யா திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளதா?''

''நிச்சயமாக திவ்யா திரும்பி வருவார். அம்மா அழுகைக்குப் பின்னாடி என்ன நடந்திருக்கும்னு இந்நேரம் திவ்யாவுக்குப் புரிஞ்சிருக்கும். 'அம்மாகூடப் போறேன்’னு திவ்யா சொன்னதே நிர்பந்தத்தின் அடிப்படையில்தான். நிச்சயம் திவ்யா திரும்பி வருவார். நான் திவ்யாவுக்காக எப்போதும் காத்திருப்பேன். எங்கள் காதல் ஜெயிக்கணும்னு திவ்யா ஆசைப்பட்டார்!''