Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ஹெலிகாப்டரில் இடியட் ராவணன்!

நானே கேள்வி... நானே பதில்!

ஹெலிகாப்டரில் இடியட் ராவணன்!

Published:Updated:
##~##

''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள் எதை அறிய விரும்புகிறீர்கள்?''

''தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவ்வப்போது அமைச்சர்கள் பங்குகொள்ளும் கேபினெட் மீட்டிங் நடைபெறுகின்றது. அந்தச் சமயம், அமைச்சர்கள் ஏதாவது பேசுகிறார்களா?, பயனுள்ள யோசனைகள் முதல்வருக்குத் தெரிவிக்கப்படுகின்றனவா?, முதல்வரின் அறிவிப்புகள்பற்றி அமைச்சர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனரா... என்பது பற்றியெல்லாம் அறிய மிக ஆவல்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

''கடினமான சூழ்நிலைகளில்கூட வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''இந்தக் கேள்வியைப் பார்த்ததும் எனக்கு ட்விட்டரில் (rajan@twitter.com) படித்தது உடனே ஞாபகம் வந்தது:

'பாலைவனத்தைக் கடப்பவர்கள்தான் கதறி அழுகிறார்கள். வசிப்பவர்கள் அல்ல!''’

- கே.சரஸ்வதி, ஈரோடு.

''இந்தியாவில் விற்கப்படும் ஒரு பின்ட் பீர் விலை, அமெரிக்க விலையில் 29 சதவிகிதம்தான் என்றும், ஆனால், பெட்ரோல் விலை அமெரிக்காவைவிட 139 சதவிகிதம் அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறதே?''  

''இந்திய விஞ்ஞானிகள் பீரில் கார் ஓட்ட முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டி யதுதான்!''

- சம்பத் குமாரி, திருச்சி.

''ஐ.பி.எல். பெட்டிங் தரகர்கள் டோனிக்கு 'ஹெலிகாப்டர்’ என்றும், கிறிஸ் கெயிலுக்கு 'ராவணன்’ என்றும் ஒவ்வொரு வீரருக்கு ஒரு சங்கேத வார்த்தை அடைமொழி கொடுத்திருக்கிறார்களாமே?''

''அதுசரி..! அப்படியானால், மைதானத்தில் டிக்கெட் வாங்கியும் கேபிள், டி.டி.ஹெச்சில் பணம் கட்டியும் அந்தப் போட்டிகளை ரசித்த இந்தியர்களை 'இடியட்ஸ்’ என்று சங்கேத வார்த்தையில் குறிப்பிட்டு இருப்பார்களோ?!''

- எஸ்.விவேக், அம்பத்தூர்.

நானே கேள்வி... நானே பதில்!

''மாநில முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப் போல மத்திய அரசு நடத்துவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?''

''தனது அமைச்சரவை சகாக்களை ரப்பர் ஸ்டாம்ப் போலப் பயன்படுத்துபவருக்கு அந்த வேதனையும் வலியும் இப்போதாவது புரிந்தால் சரி!''

- தீ.அசோகன், சென்னை-19.

''சிலேடை என்றால் கவி காளமேகம்தானா? வேறு புலவர்களே இல்லையா?''

''ஏன் இல்லை. 'வண்டானம் முத்துசாமி ஐயர்’ இவர் எது பேசினாலும் அது சிலேடையாகவே இருக்கும். இவருடைய ஊர் எட்டையபுரத்தைச் சார்ந்த வண்டானம். ஒரு சமயம் இவர் ஊற்று மலை ஜமீன்தாரிடம் சென்று, அவர் விஷயமாகச் சில செய்யுட்களைப் பாடிக் காட்டித் தமக்கு விவாகம் ஆக வேண்டியிருப்பதால், அதற்குரிய பொருளுதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜமீன்தார் ''நீர் முகூர்த்தம் வைத்துக்கொண்டு வந்தால், நான் நூறு ரூபாய் தருவேன்'' என்றார். இவர் தன்னுடைய ஊருக்குச் சென்று சில காலம் கழித்து வந்து, தமக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்றும் பொருளுதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டார்.

ஜமீன்தார்: ''எவ்வளவு தருவேன் என்று முன்பு சொன்னேன்?''

ஐயர்: ''நானூறு ரூபாய் தருவேன் என்றீர்கள்!''

ஜமீன்தார்: ''இராதே, அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே.''

ஐயர்: (அச்சங்கொண்டவர்போல்) ''முந்நூறு தருவேன் என்றீர்கள்!''

ஜமீன்தார்: ''அப்படியும் சொல்லவில்லையே?''

ஐயர்: ''இல்லை... இருநூறு தருவேன் என்றீர்கள்.''

ஜமீன்தார்: ''என்ன... பொய் சொல்லுகிறீரா!''

ஐயர்: ''இல்லை! நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.''

ஜமீன்தார்: ''பின் எதற்காக நானூறு... முந்நூறு... இருநூறு... என்று ஏமாற்றுகிறீர்?''

ஐயர்: ''நான் உள்ளதைத்தான் சொன்னேன்... நீங்கள் 'நான் நூறு தருவேன்’ என்று சொல்ல வில்லையா? முன் (நான் வந்தபோது) நூறு தருவதாகச் சொல்லவில்லையா? இரு (காத்திரு) நூறு தருகிறேன் என்றதும் பொய்யா!’ என்று சாதுர்யமாக விடை அளித்ததை வியந்து, ஜமீன்தார் ஐயருக்கு நானூறு ரூபாயும் அளித்தாராம்.

இவரைப் போன்று பலர், உலகியல் அறிவு இல்லாமையால் பிரகாசிக்காமல் போய்விட்டார்கள்.''

- ச.புகழேந்தி, தஞ்சாவூர்.

''வாக்குமூலம் என்பது எப்படி இருக்க வேண்டும்?''

''ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸின் இமேஜ் பாதிக்கப்படவில்லை. உத்தரகன்ட், இமாசலப் பிரதேசம், கர்நாடகத் தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பதே இதற்கு நல்ல உதாரணம் என மணிசங்கர் அய்யர் சொல்லியுள்ளார். நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டை அவர் மறைக்க வில்லை, மறுக்கவில்லை. மாறாக, இமேஜ் பாதிக் கப்படவில்லை என்கிறார். வாக்குமூலம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!''

- சிவன் தெற்கு வீதி சிங்கம், தோப்புத்துறை.

''இத்தனை விலையில்லாப் பொருட்கள் எப்படிச் சாத்தியம்?''

''அதிக விலையுள்ள பாட்டில்களால்!''

- பா.ஜெயகுமார், வந்தவாசி.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space)  விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!