Published:Updated:

ஈமு ‘சூது கவ்வும்’

பாரதி தம்பி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ஈமு ‘சூது கவ்வும்’

பாரதி தம்பி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
##~##

சம்பவம் 1: கோபிச்செட்டிப்பாளையம் தாலுக்கா புதுக்கரைப்புதூர் கிராமம். மூன்று மாதங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் ஊருக்கு வெளியே வயல்வெளியில் வந்து நின்ற ஒரு டெம்போ வேனின் கதவு திறக்கப்பட்டதும், சுமார் 50 ஈமு கோழிகள் பாய்ந்து வெளியே வந்தன. அடுத்த நொடி வேன் சிட்டாகப் பறந்துவிட்டது. சற்று நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் அந்தச் சாலை வழியே போக... ஈமு கோழிகள் பெரும் கூச்சலோடு திடுதிடுவென நடுவே பாய்ந்து சென்றன. பயந்துபோன அவர், காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக எண்ணி, போலீஸுக்குத் தகவல் சொன்னார். மொத்தக் கிராமமும் திரண்டு வர... அந்த இரவு ரணகளம் ஆனது. ஈமு கோழிகளைவைத்து தீவனம் போட்டுச் சமாளிக்க முடியாத யாரோ ஒருவர் அப்படிச் செய்திருக்கிறார்.

சம்பவம் 2: ஈமு கோழி மோசடி விவகாரம் வெளிவருவதற்கு முன்பு, ஈரோட்டின் நான்கு வழிச் சாலைகளை ஒட்டி ஈமு கோழி மாதிரிப் பண்ணைகள் இருக்கும். வர்த்தகக் கண்காட்சியில் தங்கள் நிறுவனத்தின் பொருட்களைக் காட்சிப்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்க ஸ்டால் போட்டிருப்பார்களே, அதுபோல. சாலை வழியே செல்லும் மக்களுக்கு ஈமுவின் மீது ஆசையை உருவாக்கி, முதலீட்டை இழுப்பது அதன் நோக்கம். என்றைக்குப் பிரச்னை வந்ததோ, அன்றே இப்படி சாலையோரம் இருந்த ஈமு கோழிகளை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவை எல்லாம் பசிக்குத் தீவனம் இல்லாமல், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாகச் செத்துவிழுந்தன. செத்துவிழுந்த ஈமு கோழிகளை உயிரோடு இருந்த கோழிகள் தின்றன. இப்போதும் இப்படிக் கோழிகள் சாவதும், அதை மற்ற கோழிகள் தின்பதும் தொடர்கின்றன. ஆஸ்திரேலியாவில் தாவரங்களைச் சாப்பிடும் சைவ உயிரினமாக இருந்த ஈமு கோழியை ஈரோட்டுக்கு அழைத்துவந்து, தன் சக உயிரினத்தின் சடலத்தையே சாப்பிட வைத்தது தமிழனின் சமீப சாதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த விநோத உயிரினத்தைக் காட்டி, ஆயிரக்கணக்கான மக்களிடையே பேராசையைத் தூண்டி... ஏமாந்தவர்கள் தெருவில் நிற்கின்றனர்; ஏமாற்றியவர்கள் சிறையில் இருக்கின்றனர். அந்த அப்பாவி ஈமு கோழிகள் என்ன நிலையில் இருக் கின்றன என்பதைச் சொல்லும் உதாரணங்கள்தான் மேற்கூறிய இரண்டு சம்பவங்களும்!

ஈமு ‘சூது கவ்வும்’

இப்படிக் கொங்குமண்டலம் முழுக்க இன்னும் பல்லாயிரம் ஈமு கோழிகள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கின்றன. 'ஈமு வளர்த்தால் குபேரனாகலாம்’ எனப் பேராசையில் பணத்தைக் கட்டிய மக்கள் உள்ளதையும் இழந்து, இந்தக் கோழிகளை என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவித்து நிற்கிறார்கள்.

ஈமு கோழி வளர்ப்புத் திட்டம், இரண்டு முறைகளில் செய்யப்பட்டது. முதல் முறையில், நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், உங்களுக்கு ஆறு ஈமு கோழிக்குஞ்சுகள் தருவார்கள். அதற்குத் தீவனம் தந்து பராமரிப்பதற்கு வளர்ப்புக் கூலியாக, மாதம் 8,000 ரூபாய் தருவார்கள். வருட முடிவில் கோழிகளைத் தந்துவிட்டு, ஒரு லட்ச ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது வழியில், நீங்கள் பணத்தை மட்டும் கட்டினால் உங்கள் கணக்கில் கோழி வாங்கிப் பண்ணைகளில்வைத்து அவர்களே வளர்ப்பார்கள். இதற்கு 'வி.ஐ.பி. திட்டம்’ என்று பெயர்.

முதல் முறையில் கோழி வாங்கியவர்கள் பெரும்பாலும் கிராமத்து விவசாயிகள். அவர்களைப் பொறுத்தவரை ஈமு கோழிகள் அவர்களின் முதலீடு. நாளையே அரசாங்கம் நஷ்டஈடு அறிவித்தால், அப்போது இழப்பின் கணக்கைக் காட்ட கோழிகள் வேண்டுமே... அதனால், சரிபாதி விவசாயிகள் முடிந்த வரையிலும் தங்கள் வசமுள்ள ஈமுக்களைக் காப்பாற்றவே முயற்சிக்கின்றனர். ஆனால், ஒரு கிலோ ஈமு தீவனம் 18 ரூபாய் விற்கும் நிலையில், அதை வாங்க வழியில்லாமல், ரேஷன் கடைகளில் விற்கும் இலவச அரிசியை வாங்கி ஈமுக்களுக்குக் கொடுக்கிறார்கள். ஒவ்வோர் ஊரிலும் ஈமு கோழிகளுக்கு இலவச அரிசி வாங்கித் தரவே ஆட்கள் இருக்கிறார்கள்.

ஈமு ‘சூது கவ்வும்’

இரண்டாவது வகையான வி.ஐ.பி. திட்டத்தின்படி பண்ணைகளில் வளர்க்கப்பட்ட ஈமு கோழிகளின் நிலைதான் பரிதாபம். பிரச்னை என்று வந்ததும் பண்ணையின் உரிமையாளர்கள் ஈமுக்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்தக் கோழிகள் போக்கிடம் இல்லாமல், தீவனத்துக்கு வழியில்லாமல் பரிதாபமாக அலைந்துகொண்டுஇருந்தன; இப்போதும் அலைகின்றன. கடந்த ஆண்டு இந்தப் பிரச்னை வெடித்த சமயத்தில் ஈமு கோழிகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக 4.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைக்கொண்டு கொஞ்சம் தீவனம் வாங்கவும் செய்தார்கள். அதற்குள் நீதிமன்றம், ஈமு பண்ணை உரிமையாளர்களின் சொத்துக்களைக் கைப்பற்றச் சொல்லி உத்தரவிட்டது. அப்போது இந்த ஈமு கோழிகளையும் சேர்த்துக் கையகப்படுத்தினார்கள். ஆங்காங்கே பண்ணை களில் இருந்த கோழிகள் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்தன. கட்டுப்பாடு என்றால் சும்மா பெயருக்குத்தான். கோழிகளுக்கு எந்தக் காவலும் இல்லை, தீவனமும் இல்லை!

ஈமு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தைத் தொடங்கிய வழக்கறிஞர் தளபதியுடன் பேசினேன். ''வழக்கு நடப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... இந்தக் கோழிகளை ஏலம் விடுங்கள். வண்டலூர் மிருகக்காட்சி சாலை மிருகங்களுக்கு இறைச்சியாகவேனும் பயன்படும் என்று அதிகாரி களிடம் கெஞ்சிக் கூத்தாடினோம். அதன் பலனாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஈரோட்டில் ஏலம் நடந்தது. ஆனால், ஏலம் எடுக்க யாரும் வர வில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஒரு கோழி வெறும் 120 ரூபாய்க்கு ஏலம் போனது. அதுவும் 400 கோழிகள் மட்டும்தான் ஏலம் போயின. ஒரு ஈமு கோழிக்குஞ்சை 15 ஆயிரத்துக் குக் கொடுத்தார்கள். அது போடும் முட்டைக்கு 1,000 ரூபாய் விலைவைத்தார்கள். ஆனால், இன்று 8.5 கிலோ எடையுள்ள கோழி வெறும் 120 ரூபாய். ஈமு கோழிக் கறியின் ருசியும் நம்மவர் களை ஈர்க்கவில்லை. அதை வளர்த்தவர்கள் கூடச் சாப்பிட்டதில்லை. 24 முதல் 30 மாதங்களுக் குள்ளான ஈமுக்களின் கறிதான் சாப்பிடுவதற்கு ஏற்ற பக்குவத்தில் இருக்கும். ஆனால், இப்போது இங்கே நிற்பவை எல்லாம் குறைந்தபட்சம் மூன்று வருடமான கிழடு தட்டிய கோழிகள். அதனால், அதைச் சாப்பிடுவதைப் பற்றி யாரும் யோசிக்கவும் இல்லை.

ஈமு ‘சூது கவ்வும்’

தாங்கள் ஏமாந்தது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிற பல பேர், ஈமுக்களைக் கொன்று புதைத்துவிட்டார்கள். மிச்சம் இருப்பதில் சரிபாதி ஈமு கோழிகள் செத்துவிட்டன. மீதியுள்ளவை கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கின்றன. மக்களின் பேராசை யின் அடையாளமாக அந்த உயிரினம் வீட்டுக்கு வீடு நின்றுகொண்டிருக்கிறது!'' என்று வேதனை யுடன் முடித்தார் தளபதி.

அரசாங்கம், பங்குச் சந்தையில் சூதாடுகிறது. கோடீஸ்வரர்கள் ஐ.பி.எல்-லில் சூதாடுகின்றனர். நடுத்தர வர்க்கமோ ஈமு கோழிகளில் சூதாடுகிறது... இறுதியில் அனைவரையும் சூது கவ்வும்!