Published:Updated:

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

வாசுகார்த்தி, ஓவியங்கள்: ஹரன்

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

வாசுகார்த்தி, ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:
தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

 முன் அறிவிப்புக்கு முந்தைய அறிவிப்பு: இப்போதைய டிரெண்டுக்குக் காமெடியாக இருந்தால்தான் பப்ளிக் எதையுமே 'என்ன... ஏது..?’ என்று விசாரிக்கிறார்கள்!  

முன் அறிவிப்பு: காமெடியாக இருந்தாலும் இந்தக் கட்டுரை பல பேச்சுலர்களின் கண்ணீர்ப் புலம்பல்கள் மற்றும் தண்ணீர் சலம்பல்களின் பின்னணியில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டது. கட்டுரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உன்னைக் காணோம்னதும் பதறிப்போய்ட்டேம்மா. நீ வழக் கமா வர்ற அஞ்சரை மணி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேனு தகவல் தெரியாம, ஒவ்வொரு நிமிஷமும் செத்துச் செத்துப் பிழைச்சேம்மா. இப்போ உன்னைப் பார்க்கவும்தான் போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருக்கு!'' - இது தழுதழுப்பான 80’ஸ் சினிமா.

##~##

''நாம என்ன பொம்பளைப் பிள்ளையாடி பெத்துவெச்சிருக்கோம்... ஆம்பளைப் பிள்ளையைப் பெத்துவெச்சிருக்கோம். வயித்துல நெருப்பைக் கட்டிட்டு அலைஞ்சுட்டு இருக்கேன்!'' - இது 2013 தமிழ் சினிமா.  

தமிழ் சினிமாவே மாறும்போது, தற்காலத் தமிழகத்தின் சிச்சுவேஷன் மட்டும் மாறாதா என்ன? 'சி.பி.ஐ. எங்கே..? தேடச் சொல்லு கொஞ்சம்...’ கணக்காகக் கல்யாணத்துக்குப் பெண் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் தமிழகப் பேச்சுலர்கள். காரணம், திருமணத்துக்குப் பெண் கிடைப்பது இப்போது 'அரிதிலும் அரிதாகி’விட்டது. 'அது நம்மளை நோக்கித்தான் வருது... சீக்கிரம் எல்லாரும் ஒளிஞ்சுக்கங்க’ என்று டைனோசர் டப்பிங் பட அறிவிப்புபோல, எதிர்காலத் தமிழ் பேச்சுலர்களை அலர்ட் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

'ஏன், என்ன பிராப்ளம்?’ என்று கேட்டால், நீங்கள் 25 வயதுக்கு உட்பட்ட சிங்கிள் பேச்சுலராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட அங்கிள் பேச்சுலராகவோ இருப்பீர்கள். பிரச்னையே அந்த 25-35க்குள்தான். கடந்த 10 ஆண்டுகளில் புற்றீசல்கள்போலப் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்ததன் மிக மோசமான பக்கவிளைவு, தமிழகத்தில் மாப்பிள்ளை வரன்களின் குறைந்தபட்சத் தகுதியே 'பி.இ.’ என்றாகிவிட்டது. அப்போ கலைக் கல்லூரி மாணவர்கள்? 'கற்றது தமிழ்’ ஜீவாவின் கதைதான்! (தமிழ் சினிமாவில் தகுதியும் அழகும் நிறைந்த அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு ஹீரோயின் கைகூடாமல் போவதற்கு கலைக் கல்லூரியில் படித்த இயக்குநர்களின் வன்மமும் ஒரு காரணம்!)

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

முந்தின பாராவைக் கவனமாக வாசிக்கவும்... அங்கு குறிப்பிடப்பட்டிருப்பது 'குறைந்தபட்சத் தகுதி’! அதையும் தாண்டிப் பையனுக்கு அவனுடைய பந்துமித்ருக்களும் இன்னும் நிறைய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஒரு மாப்பிள் ளையின் பயோ-டேட்டாவையோ ஜாதகத் தையோ சுற்றுக்குவிட்டதுமே, பெண் வீட்டார் பொதுவாக விசாரிக்கும் சில கேள்விகள் இவை...

'பையனுக்கு எம்.என்.சி-யில் வேலையா?’

'வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா?’

'பையனுக்குச் சொந்தமாக வீடு இருக்கிறதா... மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?’

'மாப்பிள்ளையின் அப்பாவுக்குக் கடன் இருக்கிறதா?’

'ஒருவேளை கடன் இருந்தால், அந்தக் கடனுக்கு யார் ஜவாப்தாரி?’

'பையனுக்கு எத்தனை சகோதரிகள்? அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்?’ (இதன் உட்பொருள்... அடிக்கடி அக்கா, தங்கைகள் வீட்டுக்கு வர போக இருப்பார்களா என்று தெரிந்துகொள்ள!)

இதுவும் இன்னபிறவுமாக ஏகப்பட்ட கேள்விகள், விசாரணைகள், சந்தேகங்கள், உண்மை அறியும் குழுக்கள் என்று படலம் படலமாக விரியும் அந்த பரஸ்பர அறிமுகம்!

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

என் அப்பா, எட்டாம் வகுப்பு வரையே படித்தவர். சென்னை என்றுகூடச் சொல்லத் தெரியாமல் இன்னமும், 'என் பையன் மெட்ராஸ்ல இருக்கான்’ என்று அப்பாவியாகச் சொல்பவர். விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்குக் கிளம்பும்போது, 'ஊருக்குப் போயிட்டு தாக்கல் அனுப்புடா!’ என்று செல்போன் பயன்பாடுபற்றி பரிச்சயம் இல்லாதவர். ஆனால் அவரே, 'அவனுங்கோ பையன் ஒண்ணு யூ.எஸ்ல இருக்கணும்... இல்லை யூ.கே-ல இருக்கணும்னு கேக்குறாங்கப்பா!’ என்று சலிப்பான குரலில் அலுத்துக்கொள்கிறார். சென்னையை இன்னமும் மெட்ராஸ் என்று மட்டுமே சொல்லத் தெரிந்த அந்தக் கிராமத்து மனிதருக்கு அமெரிக்காவை யூ.எஸ். என்றும், இங்கிலாந்தை யூ.கே. என்றும் சொல்லக் கற்றுக் கொள்ளவைத்திருக்கிறது எனக்கான பெண் பார்க்கும் படலம்!

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

என் நண்பன், சேல்ஸ் ரெப். ஏழு கழுதை வயதைத் தாண்டிவிட்ட அவனுக்கும் பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்தப் படலம் உண்டாக்கிய மன உளைச்சலில் அன்று ஃபுல் சார்ஜ் ஏற்றிக்கொண்டு என்னிடம் புலம்பித் தள்ளிவிட்டான். ''ஏன் மச்சான்... எல்லாப் பொண் ணுங்களும் ஹீரோவையே கல்யாணம் பண்ணிக்க நினைச்சா எப்படி? அப்போ இந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் என்னதான் பண்றது? வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னா, அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளத் தில் இருந்து ஆளுங்களைப் பிடிச்சுட்டு வரலாம். கல்யாணத்துக்குமா அப்படிலாம் புள்ளை புடிக்க முடியும்?'' என்றான். ஒரு நாள் போதையில் வந்து விழுந்த வார்த்தை கள் அல்ல அவை. இதுவே 30 வருடங் களுக்கு முன் என்றால், விசு போன்ற இயக்குநர்களிடம் போய் எங்கள்வேதனை யைக் கொட்டலாம். இப்போது யாரிடம் இந்த மன பாரத்தை இறக்கிவைப்பது?

இப்போதைய டிரெண்ட்படி பெண் மனது ஆழமானது. ஆனால், ஆண்கள் மனது காயமானது. 'என் பையனுக்கு கல்யாணம் தள்ளிப்போய்ட்டே இருக்கு சாமி’ என்று ஆன்லைனில் அப்பாயின்மென்ட் பெற்று அந்த கார்ப்பரேட் சாமியாரைச் சந்தித்தார் இன்னொரு நண்ப னின் அம்மா. 'பையனுக்கு தோஷம். அதைத் தீர்க்கணும்னா... ஸ்டார்ட் மியூஸிக்!’ என்று அவர் ரூட் போட, இப்போது எப்போது அழைத்தாலும் அந்த நண்பன் காள ஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருச்செந்தூர், திருமோகூர் என்று தோஷ நிவர்த்தி ஸ்பாட்களில் இருந்துதான் பேசுகிறான். குழந்தைகளைக் கையிலும் தோளிலுமாகப் பிடித்துக்கொண்டு ஒரு தந்தையாகப் பெருமிதமாக நடக்க வேண்டிய வயதில், கையில் நெய் விளக்கைப் பிடித்துக்கொண்டு வெட்கமும் கூச்சமு மாகக் கோயிலைச் சுற்றிச் சுற்றி வருகிறான் அந்த நண்பன்.

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

அட, மற்றவர்களை விடுங்கள். இது எனது கதை. 'இனி யும் அப்பாவுக்கு வேலை வைக்க வேண்டாம்!’ என்று முடிவெடுத்து, 'ஆபரேஷன் மேரேஜ்’ என்று எனக்கு நானே பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினேன். அதாவது, எனது பழைய தோழிகளில் யாராவது ஒருவரை மனைவி ஆக்கிக்கொள்வதுதான் 'ஆபரேஷன் மேரேஜ்’. ஃபேஸ்புக்கில் நன்றாக 'சாட்’டிக்கொண்டிருந்த தோழி ஒருத்திக்கு, 'நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அனுப்ப, 'எதுவா இருந்தாலும் தருண்கிட்ட பேசு. அவர்தான் என் வுட்பீ’ என்று ஃபேஸ்புக் லிங்க்கோடு பதில் வந்தது. முதல் முயற்சியே முழு பல்பு.

அடுத்த தோழியிடம், 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க விருப்பம் என்ன?’ என்றேன் ஜென்டிலாக. பதில் இப்படி வந்தது... 'நான் ஏற்கெனவே ரெண்டு பேரை நம்பி ஏமாந்துட்டேன். இப்போ உடனே மூணாவது காதலுக்கு நான் மனசளவில் ரெடியா இல்லை. வெயிட் பண்ணு... பார்ப்போம்!’ அன்றே அவளை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிட்டு, 'இதுதான் கடைசி!’ என்று முடிவெடுத்து, பள்ளிக் காலத் தோழியிடம் புரபோஸ் செய்தேன். 'ஓ.கே... நான் எனக்கு வரப்போறவன் இப்படிலாம் இருக்கணும்னு எதிர்பார்க் கிறேன்’ என்று 'கண்டிஷன்ஸ் அப்ளைடு’ போட்டு அவள் வாசித்த பட்டியல், கல்யாண விருந்துக்கான மளிகைக் கடை பட்டியலைவிட நீளம். 'ஐ.டி. கம்பெனியில் வேலை. வருட வருமானம் குறைந்தபட்சம் ஏழு லட்சம் ரூபாய். வங்கி இருப்பு குறைந்தது 30 லட்ச ரூபாய்... ஒரே சாதி. கார், ஹோம் அவசியம். ஹோம் தியேட்டர் நிச்சயம். ஆறடி உயரம், சுருள் முடி’... இப்படி இன்னும் நீண்டுகொண்டே சென்றது. 'ஸாரி சிஸ்டர்’ என்று எகிறி ஓடினேன்.

தீயா பொண்ணு தேடணும் பசங்களா!

இன்னொரு நண்பன் வேலைக்குக்கூட அத்தனை நேர்முகத் தேர்வுகளை எதிர்கொண்டிருக்க மாட்டான். பெண்ணின் அண்ணனும், அவனுடைய 'விவரமான’ நண்பர்களும் என் நண்பனை 'இன்டர்வியூ’ என்ற பெயரில் புரட்டிப் பரோட்டா போட்டுவிட்டார்கள். முதலில் மெயில் தேர்வு. அடுத்தது அலைபேசித் தேர்வு. அப்புறம் நேர்முகத் தேர்வு. மூன்றிலும் மீண்டும் மீண்டும் ஒரே கேள்விகள். கடைசியாக நேர்முகத் தேர்வு முடிந்தவுடன், 'நான் நேரா போய் ஹெச்.ஆரைப் பார்க்கணுமா?’ என்று நண்பன் சீரியஸாகக் கேட்க, கொஞ்ச நேரம் புரியாமல் விழித்திருக்கிறார்கள் அண்ணன் அண்ட் கோ. அந்த அளவுக்கு நொந்து வெந்து விட்டான் நண்பன்.

''நண்பா... எல்லாரும் மாப்பிள்ளை இன்ஃபோசிஸ்ல வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங் களே தவிர, இன்னொரு இன்ஃபோசிஸை உருவாக்கப் போற திறமை இருக்கிறவனை மதிக்க மாட்டேங்கிறாங்க. சமூகத்துல சம்திங் ஃபண்டமென்டலி ராங்... மாத்தணும்... எல்லாத்தையும் மாத்தணும்!'' என்று பெண் பார்க்கும் படலங்களில் தோற்று ஒருவித யோகநிலைக்குப் போய்விட்ட நண்பன் சொன்னான்.

நான் பெருமூச்சுவிட்டபடி, என் மேட்ரிமோனி பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்தேன்!

''வரதட்சணை ஒழியும்!''

முருகவேல் ஜானகிராமன், பாரத் மேட்ரிமோனி.

''பெண்களிடம் கேட்டால், 'ஆண்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. பெண் அழகாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும். வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைக்கும் போக வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார்கள்’ என்கிறார்கள். ஆண்களிடம் கேட்டால் இதே கதையைக் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறார்கள். முக்கியமான ஒரு விஷயம்... பொதுவாகவே, ஆண்களுக்கான பெண்களின் விகிதாசாரம் குறைஞ்சுட்டே வருது. எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரித்து ஒரு பெண்ணிடமோ அல்லது பெண்ணின் பெற்றோரிடமோதான் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும் அதிகாரம் இருக்கும். சமீபமாகப் பெண்கள் வரதட்சணை கொடுக்க விரும்பவில்லை என்பதை அழுத்தமாக, உரிமையாக சொல்லத் தொடங்கி இருக்கிறார் கள். அதை ஏற்றுக்கொள்ளும் போக்கும் ஆண்களிடையே அதிகரித்திருக்கிறது!''