Published:Updated:

தமிழ் சினிமாவின் பேரிழப்பு!

க.ராஜீவ் காந்தி, படம்: ‘ஸ்டில்ஸ்’ ரவி

தமிழ் சினிமாவின் பேரிழப்பு!

க.ராஜீவ் காந்தி, படம்: ‘ஸ்டில்ஸ்’ ரவி

Published:Updated:
##~##

ணிவண்ணன்... தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞன்! மணிவண்ணனின் உடன்பிறப்பாகவே இருந்த சத்யராஜ், நம்மிடம் மணிவண்ணன்குறித் துப் பகிர்ந்துகொண்ட நினைவுகளில் இருந்து...

''மணிவண்ணன் மாதிரி அரசியல் சூழலை, அரசியல்வாதிகளை யாரும் இங்கே விமர்சிச்சிருக்க மாட்டாங்க. இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்குற எல்லா அரசியல்வாதிகளையும் கிண்டலடிச்சவர் அவர் ஒருத்தர்தான். ஆனாலும், மணி இறந்துட்டார்னு தெரிஞ்ச தும், அவரால் கிண்டலடிக்கப்பட்டவங்ககூட வருந்தினாங்க. நேர்ல வந்து அஞ்சலி செலுத்திட்டுப் போனாங்க. அதுதான் மணி. ஏன்னா, மணியை எல்லாருக்குமே அந்தளவுக்குப் பிடிக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணி எப்பவும் யாரையும் அரசியல் ஆதா யத்துக்காகக் கிண்டலடிச்சதே கிடையாது. எம்.ஆர்.ராதா, சோவுக்குப் பிறகு அந்தத் துணிச்சல் மணிகிட்ட மட்டும்தான் இருந்தது. அதே போல மணி மாதிரி ஒரு பிடிவாதக் காரரைப் பார்க்கிறதும் கஷ்டம். ஏன்னா, எந்த விஷயத்தைப் பத்தியும் தெளிவா யோசிச்சி, அலசி ஆராய்ஞ்ச பிறகுதான் அதைப் பத்தி கருத்தோ, கிண்டலோ சொல்வார் மணி. அதனாலேயே யாருக்கும் பயப்பட மாட்டார். பயந்தாத்தானே, ஒரு விஷயத்தை மறைச்சுப் பேச வேண்டிய அவசியம் இருக்கும்!

தமிழ் சினிமாவின் பேரிழப்பு!

எல்லா ஹீரோக்களுக்குமே ஒரு இயக்குநர் லைஃப் கொடுத்திருப்பார். ஆனா, மணி எனக்கு அதையும் தாண்டி. சினிமாவில் ஒரு நடிகனா தோத்துப் போய், பெருங்குழப்பத்துல ஐஸ்க்ரீம் பார்லர், விதை விற்பனை, இரும்பு வியாபாரம்னு ஏதேதோ பிசினஸ் பண்ணி அதுலயும் தோத்து விரக்தியின் விளிம்பில் நான் நின்னுட்டு இருந்தப்ப தான், மணிக்கு அறிமுகமானேன். அதுக்கு முன்னாடி ஒரே கல்லூரியில் படிச்சிருந்தாலும், பெரிய பழக்கம் இல்லை. மாடி வீட்டு ஏழையா, கார் இருந்தும் பெட்ரோல் போட வசதி இல்லாம தோத்துப்போன நடிகனா, ஆர்.சுந்தர்ராஜன்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்திருந்தேன். அப்போ மணிகிட்ட நான் ஒரு கதை சொல்லி, இதைத்தான் நான் டைரக்ட் பண்ணப்போறேன்னு சொன்னேன். 'இவ்ளோ வெரைட்டியா நடிச்சுட்டு சான்ஸ் இல்லாம டைரக்டர் ஆகக் கூடாது’னு சொல்லி, 'நூறாவது நாள்’ படத்துல என்னை வில்லனா நடிக்கவெச்சார். அதுதான் இப்போ இருக்கிற சத்யராஜுக்கு வாழ்க்கை கொடுத்துச்சு!  

சினிமால 'சத்யராஜ் பாணி’னு ஒரு டிரெண்ட் இருக்கு. ஆனா, அது என்னோட பாணியே இல்லை. அதுதான் மணி பாணி. நடிப்புன்னா என்ன, எப்படி நடிக்கிறதுனு எந்தத் தெளிவும் இல்லாம இருந்த என்னை வடிவமைச்சதுல மணிக்குத்தான் பெரும் பங்கு உண்டு. '24 மணி நேரம்’ படத்துல எனக்குனு ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொடுத்தார். 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே...?’, 'இந்தத் தள்ளாத வயசுல ஏம்மா என்னை சுத்திச் சுத்தி ஓடவைக்கிறே?’... இப்படி லொள்ளு தில்லு வசனங்களை முதல்முறையா என்னைப் பேசவெச்சு, அதை எப்படிப் பேசணும்னு சொல்லிக்கொடுத்ததே மணிதான்.  

மணி எந்த அளவுக்கு அலர்ட்னு ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு டயலாக் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு. நளினிகிட்ட 'உனக்காக அண்ணா நகர்ல மூணு கிரவுண்ட் ரெடி பண்ணிவெச்சிட்டேம்மா... அவசரப்பட்டு வேணாம்னு சொல்லிட்டீன்னா, அடுத்த வாரமே கிரவுண்ட் விலையெல்லாம் ஏறிடும்’னு சொல்வேன். ஒரு பொண்ணை மடக்குற இடத்துலகூட ரியல் எஸ்டேட் டிரெண்டைச் சொல்ல மணியால மட்டும்தான் முடியும். அந்தளவு அரசியல், நாட்டு நடப்பை விளாசித்தள்ள மணியோட வாசிப்புப் பழக்கம்தான் காரணம். மார்க்சியத்துல இருந்து பெரியாரியம் வரை உலக அரசியல் அத்தனையும் அவருக்கு அத்துப்படி. நான் பேசுறதை வெச்சு நான்லாம் ஏதோ புத்தகம் வாசிப்பேன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, நான் பேசற எல்லாமே மணி வாயைப் புடுங்கிக் கத்துக்கிட்டதுதான். ஃபிடல் காஸ்ட்ரோ யாருங்கிறதுல இருந்து கியூபா புரட்சி, எத்தியோப்பியா பஞ்சம்னு எல்லாமே அவர் சொல்லச் சொல்ல, நான் கேட்ட கதைதான்.

வசனம் பிடிக்கிறதுல மணியை மிஞ்சின ஆளே கிடையாதுங்க. உண்மையிலேயே யாராவது வீதியில் திரிஞ்சுட்டு இருந்த 'அமாவாசை’யைப் பிடிச்சு நடிக்கவெச்சிருந்தாக்கூட, 'அமைதிப் படை’ படம் அதே அளவுக்கு ஹிட் ஆகியிருக்கும். ஏன்னா, அந்தப் படத்தின் ஒவ்வொரு வசனமும் அவ்வளவு பவர்ஃபுல். மத்தவங்க ஸ்க்ரிப்ட் பேடுல எழுதியிருக்கிறதை எடுப்பாங்க. ஆனா, ஸ்பாட்ல மணி சொல்றதை அவரோட உதவி இயக்குநர்கள் ஸ்க்ரிப்ட் பேடுல எழுதிப்பாங்க. கேமரா ஆங்கிள் செட் பண்ண பிறகுதான், அந்த சீனுக்கான வசனத்தை மணி யோசிப்பார். மனசுல பளிச்னு தோணுறதை அவர் சொல்லிக்கொடுக்குற மாடுலேஷன்ல சொன்னாலே போதும்... தியேட்டர்ல நாம க்ளாப்ஸ் அள்ளிரலாம். அந்த விஷயத்துல மணி ஒரு ஜீனியஸ்!

அரசியலை விமர்சிக்கிற எத்தனையோ படங்கள் இனி வந்தாலும், அரசியல்வாதிகளின் ஆன்மாவைத் துணிச்சலா உலுக்குற மணி ஸ்டைல் யாருக்கும் வராது. இப்போ அமைதிப்படை இரண்டாம் பாகம் பார்த்துட்டு, அவரை இன்னொரு படம் எடுக்கச் சொல்லி பலர் கேட்டாங்க. நானும் மணியும் சேர்ந்து ஒரு படம் பண்றதா இருந்தது. ரெண்டு ஓய்வுபெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு ஊழலைத் துப்பறியப் போய் அதுல கிரிக்கெட் ஃபிக்ஸிங், சினிமா, அரசியல்னு எக்கச்சக்க விஷயங்கள் வர்ற மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருந்தாரு. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.

மணிவண்ணன் இல்லாம நடிகர் சத்யராஜ் இல்லை. இனிமே, இந்த சத்யராஜ் எப்படி இருக்கப்போறான்னு தெரியலை!''