Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

பேட்டிங் Vs பெட்டிங்!

நானே கேள்வி... நானே பதில்!

பேட்டிங் Vs பெட்டிங்!

Published:Updated:
##~##

''அழகிப் போட்டியில் கலந்துகொள்ளப் புத்திசாலித்தனம் அவசியமா?''

'' 'அழகிப் போட்டியில் கலந்துகொள்ள அழகு மட்டும் போதும். ஆனால், பட்டம் வெல்ல புத்திசாலித்தனம் தேவை’ என்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள். ஒருமுறை சுஷ்மிதா சென், அன்னை தெரசாவைப் பார்க்கச் சென்றார். தெரசாவுக்கு சுஷ்மிதா சென்னை அடையாளம் தெரியவில்லை. 'அன்னை தெரசாவுக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே’ என்று நிருபர்கள் சுஷ்மிதாவைக் கிண்டல் செய்தனர். உடனே, சுஷ்மிதா 'சூரியனுக்கு முன்னால் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் எடுபடாமல்போய்விட்டது’ என்று பதில் சொல்லி பத்திரிகையாளர்களின் வாயை மூடினார்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஜெ.கண்ணன், சென்னை-101

''திருட்டு டி.வி.டி. ஒரு படத்தின் வெற்றியைப் பாதிக்காதா? ஒரு திரைப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?''

''இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். எந்தத் திரைப்படத்தின் திருட்டு டி.வி.டி. அதிகம் விற்பனை ஆகிறதோ, அந்தத் திரைப்படமே வெற்றிகரமாக ஓடுகிறது!''

- விகடபாரதி, வடபாதிமங்கலம்

நானே கேள்வி... நானே பதில்!

''இந்திய விளையாட்டுத் துறையின் சமீபத்திய சாதனை?''

''செய்தித்தாள்களில் கடைசிப் பக்கத்தில் இருந்து முதல் பக்கத்துத் தலைப்புச் செய்தி வரையில் இடம்பிடித்தது!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி

''இந்திய கிரிக்கெட்டின் பலம் எது... பலவீனம் எது?''

''பலம்... 'பேட்டிங்’!

பலவீனம்... 'பெட்டிங்’!''

- சம்பத் குமாரி, திருச்சி

''எஸ்.எம்.எஸ். கலாட்டா ஒன்று சொல்லுங்களேன்?''

''சமீபத்தில் எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். 'முயல் ஓடுகிறது... தாவுகிறது... குதிக்கிறது... சுறுசுறுப்பாக இருக்கிறது... 15 வருடங்கள் வாழ்கிறது. ஆமை ஓடுவது இல்லை... தாவுவது இல்லை... குதிப்பது இல்லை... ஏன் எதுவுமே செய்வது இல்லை. 150 வருடங்கள் வாழ்கின்றன. எனவே, 'பி வெட்டி... யுவர் லைஃப் இஸ் கெட்டி’. இது எப்படி இருக்கு?''

''பள்ளியில் படித்த பாடங்களிலேயே... உங்களுக்குப் பிடித்த பாடம் எது? ஏன்?''

''கணிதம். ஏனென்றால், கணிதம் வாழ்க்கையில் அன்பை எப்படிக் கூட்டிக்கொள்வது என்பதைச் சொல்லித்தராமல் இருக்கலாம். வெறுப்பை எப்படிக் கழித்துவிடுவது எனச் சொல்லித்தராமல் இருக்கலாம். வெற்றிப் பாதையை வகுக்கும் வகையைச் சொல்லித்தராமல் இருக்கலாம். உறவை எப்படிப் பெருக்குவது எனச் சொல்லித்தராமல் இருக்கலாம். ஆனால், கணிதம் சொல்லித்தருவதில் முக்கியமானது எது தெரியுமா? 'ஒவ்வொரு பிரச்னைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு!’ என்பதைத்தான். பிரச்னைக்கான தீர்வுதானே வாழ்க்கையினுடைய குறிக்கோளே!''

- கே.சரஸ்வதி, ஈரோடு-12

''பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாத தியாகங்களைப் பற்றி..?''

''மே 23-ம் தேதி மாலை, கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலை, மனோகர் என்பவர் இயக்கினார். ரயில் கவரப்பேட்டை நிலையத்தைக் கடந்தபோது நெஞ்சு வலியால் துடித்த மனோகர், ரயிலைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அவசர கால விளக்குகளை ஒளிரவிட்டுவிட்டுச் சாய்ந்துவிட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. அந்த ரயிலில் 1,300 பயணிகள் இருந்தனர்!''

- ஜெ.கண்ணன், சென்னை-101

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!