ஆ.அலெக்ஸ் பாண்டியன்
##~## |
'வெள்ளத்தில் சிக்கி 150 பேர் பலி’ என்று பத்தோடு பதினொன்றாக ஆரம்பித்த உத்தர காண்ட் வெள்ளப் பாதிப்புச் செய்தி, '5,000 பேர் உயிர் இழந்திருக்கலாம்’ என்ற அச்சத்தோடு இந்தியாவின் தலைப்புச் செய்தியாகிவிட்டது!
இதுபோக, காடுகளில் பட்டினியால் செத்துக்கொண்டிருப்போர் பல்லாயிரம் மக்கள். சுமார் ஆயிரம் பாலங்கள் உடைந்து நொறுங்கி 200-க்கும் அதிகமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. 'எங்கும் பிண நாற்றம் வீசுகிறது. கழுகுகளும் நாய்களும் மனித உடல்களைத் தின்கின்றன’ என ராணுவ வீரர்கள் சொல்வதைக் கேட்கும்போதே, நடுக்கமாக இருக்கிறது. மாபெரும் துயரமாக மாறியிருக்கிறது உத்தரகாண்ட் வெள்ளப் பேரழிவு.
முழுக்க மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் ரிஷிகேஷ், ஹரித்வார், கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற இந்துக்களின் புனிதத் தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தொடங்கும் 'ஆதி சங்கர ஜெயந்தி’ விழாவைக் கொண்டாட, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். அப்படி இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வந்து குவிந்த சமயம்... பருவ மழை வழக்கத்தைவிட முன்னதாகவே பெய்யத் தொடங்கியது. ஆனால், அது 'மேக வெடிப்பாக’ இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெடித்துக் கொட்டிய பேய் மழை, மலைகளைப் பெயர்த்துக்கொண்டு பெரும் பாறைகளோடு பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளமாக உருமாறியது. வழியில் இருந்த ஊர்களை மூர்க்கமாகக் கபளீகரம் செய்தது. இன்னொரு பக்கம் பெருமழையின் காரணமாகப் பல இடங்களில் மலைச்சரிவு ஏற்பட்டு ஊர்கள் துண்டிக்கப்பட்டன. வாகனங்களில் சென்ற பக்தர்கள் ஆங்காங்கே பரிதவித்தனர்; இப்போதும் நிற்கின்றனர். இயற்கையின் இந்த ருத்ரதாண்டவத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் மீண்டு வர, இன்னும் 10 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இப்போது உத்தரகாண்டில் ராணுவம், துணை ராணுவம், எல்லையோரப் பாதுகாப்புப் படை, விமானப் படை, பேரிடர் மீட்புக் குழு என சுமார் 8,500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 40 ஹெலிகாப்டர்கள் வானத்தில் சுற்றுகின்றன. இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய மீட்புப் பணி இதுதான் என்கிறது ராணுவம். எனினும், ராணுவத்தாலும் சென்று சேர முடியாத அளவுக்குக் கிராமங்கள் துண்டாடப்பட்டுள்ளன. மழையுடன் சேர்த்து நிலச் சரிவும் ஏற்பட்ட ருத்ரபிரயாக் பகுதியில் கடும் பாதிப்பு. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இந்தப் பகுதியில் ஏராளமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், இந்த முறை மொத்த ஊரையுமே இழுத்துச் சரித்துவிட்டது.

மாநில முதல்வர் விஜய் பஹுகுணா ''ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கக்கூடும்'' என்கிறார். பேரிடர் மேலாண்மை அமைச்சர் யஷ்பால் ஆர்யா, ''5,000-துக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக் கக்கூடும்'' என்கிறார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவமோ, ''தொடர்ந்து கன மழையும், பனி மூட்டமும் இருப்பதால் பல இடங்களுக்கு எங்களால் போக முடியவில்லை. ஹெலிகாப் டரில் வரும்போது கீழே பார்த்தால் காட்டுக்குள் ஏராளமான உடல்கள் கிடந்தன. ஆனாலும், நாங்கள் உயிருடன் உள்ளவர்களை மீட்பதற்கே முன்னுரிமை தருகிறோம்'' என்கிறது.
இந்த அவலமான தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு பாட்டில் குடிதண்ணீரை 100 ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகளும் அதே புனிதத் தலத்தில் இருக்கிறார்கள். இறந்த பெண்களின் உடல்களில் இருந்து நகைகளைக் களவாடும் 'சாது’க்களும் அங்குதான் இருக்கிறார்கள். இப்படித் திருடிய 1.5 கோடி ரூபாய் பணமும் ஏராளமான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு... போன்ற இயற்கை சீற்றங் கள் உத்தரகாண்ட் மாநிலத் துக்குப் புதிதல்ல என்றாலும், இந்த அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட இயற்கை மட்டுமே காரணம் இல்லை என்கிறார்கள். பொதுவாக, மலைப் பகுதியில் கட்டுமானங்கள் ஒரு வரம்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். உத்தரகாண்டில் அது இல்லை. இந்துக்களின் புனிதத் தலங்கள் ஒவ்வொன்றிலும் அனைத்து விதிமுறைகளையும் அடித்து நொறுக்கிவிட்டுத்தான் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக 24 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் 10 பெரிய நீர் மின் நிலையங்களும், 100-க்கும் அதிகமான சிறிய நீர் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆற்றின் போக்கையே திசை திருப்புகின்றன. இந்த நீர் மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மக்களுக்குப் பயன்படுகிறது என்றாலும், குறிப்பிட்ட அளவு மின்சாரம் தனியார் நிறுவனங்களுக்கும் போகிறது. உத்தரகாண்டின் காட்டுப் பகுதியில் பல சுரங்கத் தொழிற்சாலைகள் செயல்படுவதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்னொரு பக்கம் புவியியல்ரீதியாகவே உத்தரகாண்ட் பலவீனமாக இருக்கிறது. அலக்நந்தா நதியின் கோமுக் என்ற இடத்தில் இருந்து உத்தர்காசி வரையிலான 130 கி.மீ. தூரத்தில்தான் அடிக்கடி நிலச் சரிவும், வெள்ளப் பாதிப்பும் நிகழ்கின்றன. ''தேசிய கங்கை நதிப் பாசன ஆணையம், இந்தப் பகுதியைப் 'புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி’யாக அறிவித்தது. ஆனால், உத்தரகாண்ட் முதலமைச்சர், 'இதை ஏற்க முடியாது. அந்தப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போய்விடும்’ என மறுத்துவிட்டார்'' என்கிறார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன். 'வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற சொல்லுக்குள் காட்டுப் பகுதியில் செயல்படும் பிரமாண்டத் தொழிற்சாலைகளும் அடங்கும்.
டெல்லியில் இயங்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ''இப்போது விபத்து நடந்திருக்கும் பகுதிகள் பலவும் அபாயகரமானவை என்று 2001-ம் ஆண்டே அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறோம். அதற்கான பாதுகாப்புத் திட்டங்களும் அப்போதே வரையறுக்கப்பட்டுவிட்டன. அதைச் செயல்படுத்த அரசு தவறிவிட்டது'' என்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் விஜய் பஹுகுணா, இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய மகா யாகம் செய்யும் ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார்!
கங்கோத்ரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது பாகோரி என்ற கிராமம். விவசாயிகளும் நெசவாளர்களும் நிறைந்த இந்தக் கிராமம் ஓர் அறிவிக்கப்படாத முகாமாகவே செயல்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் ஊரில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களுக்கு ஊரே சேர்ந்து சமைத்துப்போடுகிறது. இதற்காக ஆப்பிள் தோட்டத்தில் பொது சமையல் கூடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சமையல் பொருட்கள் கொண்டுவரப்பட்டு சமைக்கப்படுகிறது. ''எங்களிடம் கோதுமை இருக்கும் வரையிலும் நாங்கள் சமைத்துத் தருவோம்'' என்கிறார்கள் இவர்கள் நெகிழ்ச்சியுடன்.
சிவப்பிரகாசம், கூடுவாஞ்சேரி.
''கடும் வெள்ளம் எனத் தெரிந்ததும் பத்ரிநாத் செல்லாமல் ஊர் திரும்பிக்கொண்டிருந்தோம். நந்த பிரயாகை வரும்போது நாங்கள் வந்த சாலை சரிந்தது. அங்கு நாங்கள் கண்ட காட்சி, எங்களுக்கு

உயிர் பயம் என்றால் என்ன எனக் காட்டியது. இரண்டு அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று, சினிமாவில் வருவதைப் போல அப்படியே பொறுமையாக ஆற்றுக்குள் சரிந்தது. கார்களும் பல அடுக்கு மாடி வீடுகளும் மிதந்து சென்றன. உயிர் போவதைவிட, உயிர் பயத்தில் வாழ்வது ரொம்பக் கொடுமையானது. அந்த அவஸ்தையை நாங்கள் அங்கு இருந்த ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்தோம்!''
ரங்கராஜ், மணலி புதுநகர்.
''15-ம் தேதி கேதார்நாத்தில் சாமியைப் பார்த்துட்டு வரும்போதே பேய்மழை. காலைல எழுந்து பார்த்தா, ஆக்ரோஷமாத் தண்ணீர் ஓடுது. எங்கேயும் போக முடியலை. மூணு நாளா வேனுக்குள்ளே 16 பேரும் இருந்தோம். வெளியில் நின்னா ஆளையே தூக்கிட்டுப் போற மாதிரி சூறைக்காத்து. சாப்பாடு, தண்ணி இல்லாம நரக வேதனையை அனுபவிச்சோம். ஒவ்வொருத்தரும் சாவு பயத்தோடதான் இருந்தோம். எப்படியோ சாலையைச் சரிசெஞ்சு எங்களைக் காப்பாத்திட்டாங்க!''
- க.பிரபாகரன்
படங்கள்: பீரகா வெங்கடேஷ்