Published:Updated:

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

எம்.பரக்கத் அலி, ஓவியம்: ஹாசிப்கான்

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

எம்.பரக்கத் அலி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
##~##

'ஓய்வுபெற்ற நீதிபதி’ என்று வாசித்தாலே, 'விசாரணை கமிஷன்’ என மனம் அடுத்த வார்த்தைகளைத் தானாகவே இணைத்துக்கொள்கிறது. 'ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்’ என்பது தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் ஒரு சடங்கு!

இதோ இப்போது தர்மபுரி இளவரசன்மரணத் தில் உள்ள மர்மங்களைக் கண்டறியவும் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நாம் வழக்குப் போட்டு, வாய்தாவுக்குஅலை வதற்குப் பதிலாக, ஒரு நீதிபதியே தேடிவந்து விசாரிக்கிறாரே!’ என்பதுதான் மக்கள் இத்தகைய விசாரணை கமிஷன்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கான அடிப்படை. ஆனால் அரசாங் கமோ, குறிப்பிட்ட பிரச்னையில் பொதுமக்கள் மற்றும் ஊடகத்தின் அந்த நேரத்துக் கவன குவிப்பைத் திசை திருப்பவே விசாரணை கமி ஷனை ஒரு  கருவியாகப் பயன்படுத்து கிறது. யாரேனும் 'நீதி வேண்டும்.நியாயம் வேண்டும்’ எனக் குரல் கொடுத்தால், 'அதான் விசாரணை கமிஷன் போட்டாச்சே’ என்று பதில் வரும். ஆனால், உண்மையில் விசா ரணை கமிஷனுக்கு ஏதேனும் சட்ட அங்கீகாரமோ, அதிகாரமோ இருக் கிறதா? 'இல்லை’ என்கிறது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்று!

20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா வில்  மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராகவன் மீதான வெடிகுண்டு தாக்குதல் வழக்கை விசாரிக்க நீதிபதி பத்மநாப நாயர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் பரிந்துரைகளை எதிர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது.  சுப்ரீம் கோர்ட் தன்னுடைய தீர்ப்பில், 'ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்று அரசும் காவல் துறையும் தெரிந்துகொள்ள விசாரணை கமிஷனின் அறிக்கைகளும் கண்டுபிடிப்புகளும் பயன்படுமே தவிர, அந்த அறிக்கையை நீதிமன்ற விசாரணைக்கு ஓர் ஆவணமாகவோ அல்லது சாட்சியமாகவோ அல்லது ஒரு நபரின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தடயமாகவோ பயன்படுத்த முடியாது’ என்று அறிவித்தது. ஆக, விசாரணை கமிஷன் அறிக்கைகளின் அதிகார வரம்பு இவ்வளவுதான். ஆனாலும், காலம்தோறும் கண்கட்டு சடங்காக விசாரணை கமிஷன்களை அமைத்துக்கொண்டே இருக்கின்றன அரசுகள்.

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

1952-ம் ஆண்டு இயற்றப்பட்ட விசாரணை கமிஷன்கள் சட்டத்தின்படி அமைக்கப்படும் இத்தகைய ஆணையங்கள், விசாரணை வரம்பு களுக்கு உட்பட்டு விசாரித்து அறிக்கை கொடுப்பதுடன், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடை முறைகளைப் பரிந்துரையாக அளிக்கும். இதில் கொடுமை என்னவெ னில், பல ஆண்டுகளாகியும் பல விசாரணை கமிஷன்களின் அறிக்கை வெளியாவது இல்லை என்பதுதான்.

தமிழகத்தில் 1998 முதல் இப் போது வரை 20-க்கும் மேற்பட்ட விசாரணை  கமிஷன்கள் அமைக்கப் பட்டுள்ளன. முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். கருணாநிதி கைதின்போது நடந்த முறை கேடுகள்குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராமன் தலைமையில் ஒரு கமிஷனை அமைத் தார் ஜெயலலிதா. தி.மு.க. அந்தக் கமிஷனை புறக்கணித்தது. ஆனாலும், கமிஷன் செவ் வென தன் 'கடமை’யை நிறைவேற்றியபடி இருந்தது.  ஜெயலலிதா ஆட்சிக் காலம் முடியும் வரை அறிக்கை வெளிவரவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ராமன் கமிஷனையே கலைத்துவிட்டார்.

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ராமன் கமிஷன் அறிக்கையும் வெளியாகவில்லை. சென்னை, பெரம்பூர் மேம்பால ஊழல் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறு முகம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கையும் அளித்துவிட்டது. ஆனால், இப் போது வரை அந்த அறிக்கை வெளியிடப்பட வில்லை. ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் செல்லும் சிறுதாவூர் பங்களா அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்ற சர்ச்சையை விசாரிக்க, நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்தது. மூன்றரை ஆண் டுகள் விசாரணை நடத்தி, சிறுதாவூர் விவகாரத் தில் ஜெயலலிதாவுக்குச் சம்பந்தம் இல்லை என்று சொன்னது கமிஷன்.  

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

1999-ம் வருடம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலிப் பிரச்னைதொடர் பாக, புதிய தமிழகம் உட்பட பல கட்சிகள் ஊர் வலம் நடத்தினார்கள். கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காகப் போனபோது போலீஸ் தடியடி நடத்தியது. இதில் சிதறி ஓடி தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு, 17 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் கமிஷன், 'அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களைத் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்’ என்றது. தென் மாவட்ட சாதிக் கலவரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட மோகன் கமிஷன், 'சாதித் தலைவர்கள் சிலைகளை எல்லாம் அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்’ என்று பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்து ரைகள் எதையும் கருத்தில்கொள்ளவில்லை அரசாங்கம்!

விசாரணை கமிஷன் அமைப்பது என்பது ஒரு பிரச்னையை மழுங்கடிப்பதற்கான ஏற்பாடாகத்தான் இருக்கிறதே ஒழிய, தீர்வு தேடும் திட்டமாக இல்லை. அரசுகள், விசாரணை கமி ஷன் அமைத்தால் மட்டும் போதாது. அவற்றின் விசாரணை வேகத்தை விரைவுபடுத்துவதுடன், கமிஷனின் பரிந்துரைகளையும் விரைந்து செயல் படுத்த வேண்டும். அவை எல்லாம் சாத்தியம் இல்லையெனில், அந்தக் கமிஷன்களை அமைக்காமலே இருப்பதுதான் நலம்!

விசாரணை கமிஷன்கள்... கரையும் கரன்ஸிகள்!

நீதிபதி சம்பளம், படிகள், வீட்டு வாடகை, பயணச் செலவுகள், தொலைபேசி மற்றும் மின் கட்டணங்கள், சில்லறைச் செலவுகள், கமிஷன் தொடர்பான விளம்பரக் கட்டணங்கள், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள், அரசு வழக்கறிஞர் கட்டணம், அலுவலகப் பணியாளர் சம்பளம் என்று ஒரு விசாரணை கமிஷனுக்கு லட்சக்கணக்கில் கரன்ஸிகள் கரையும். அத்தனையும் மக்களின் வரிப் பணம்தான். இதுவரை சில விசாரணை கமிஷன்களுக்கான செலவுகள் இங்கே...

1. சிறுதாவூர் விசாரணை கமிஷன் -

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

1.46 கோடி  

2. பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை கமிஷன் -

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

1.40 கோடி

3. புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான விசாரணை கமிஷன் -

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

95.79 லட்சம்

4. கடலூர் குள்ளஞ்சாவடி லாக்-அப் மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் - (சுமார்)

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

40 லட்சம்

5. கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான விசாரணை கமிஷன் -

விழல் நீர் விசாரணை கமிஷன்கள்!

11 லட்சம்