Published:Updated:

நானே கேள்வி, நானே பதில்!

அந்த நள்ளிரவுகள்!

நானே கேள்வி, நானே பதில்!

அந்த நள்ளிரவுகள்!

Published:Updated:
##~##

''சென்னையில் அமைந்துள்ள 'பெரியார் திடலில்’ யாரும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்ற நடைமுறை எப்போது முதல் பின்பற்றப்படுகிறது?''

''மெமோரியல் ஹாலில் ஒரு மாநாடு நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். 'கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவர்களுக்கு அந்த ஹாலைக் கொடுப்பது இல்லை’ என்று காரணம் சொல்லி மறுத்துவிட்டது ஹால் நிர்வாகம். ஏனெனில், அந்த ஹாலின் நிர்வாகம் கிறிஸ்துவர்களிடம் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சளைக்காத பெரியார், உடனடியாக பெரியார் திடலில் ஒரு மண்டபத்தைக் கட்டி அதற்கு 'எம்.ஆர்.ராதா மன்றம்’ எனப் பெயர் சூட்டினார். தான் திட்டமிட்ட நாளில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாநாட்டை நடத்தி முடித்த பெரியார், 'யாருக்கும் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு உரிமை உண்டு. அந்த வகையில் எவரும் தங்கள் கருத்துகளைத் தைரியமாக இந்தப் பெரியார் திடலில் வந்து சொல்லலாம்’ என அன்றே உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு இன்று வரைக்கும்

நானே கேள்வி, நானே பதில்!

பின்பற்றப்படுகிறது என்பதற்கு, பெரியார் திடலில் நடக்கும் கிறிஸ்துவப் பிரசாரக் கூட்டங்களே உதாரணம்!''

- அ.யாழினி பர்வதம், சென்னை-78

''சோகம் சரி... அதென்ன 'இனம் புரியாத சோகம்’?''

''தமிழ்நாட்டில் இருவர் தெலுங்கில் பேசிக் கொண்டு இருந்தால் அவர்கள் தெலுங்கு இனத்தவர் எனப் புரியும். மலையாளத்தில் பேசிக் கொண்டு இருந்தால் மலையாள இனத்தவர் எனப் புரியும். ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தால் ஆங்கிலேய இனம் எனப் புரிந்துகொண்டால் தவறு. அவர்கள் தமிழர்கள். அப்போது ஏற்படும் சோகம்தான் 'இனம் புரியாத சோகம்’!''

- தாமு, தஞ்சாவூர்

'' 'நள்ளிரவு’.... என்ன நினைவுக்கு வருகிறது?''

''முன்பெல்லாம் சுதந்திரம் - புத்தாண்டுக் கொண்டாட்டம் - கைதுகள்... இவைதான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையேற்றங்கள்தான் நினைவுக்குவருகிறது. அந்த அளவுக்கு 'நள்ளிரவு’ முதல் விலையேற்றங்கள் அமலுக்கு வருகின்றன!''

- விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

''இப்போதைய சுட்டிகள் ஆடல், பாடல் என்று தூள் கிளப்புகிறார்களே!''

''ஆடல், பாடல் மட்டுமா? கற்பனைத் திறனிலும் பட்டையைக் கிளப்புகிறார்களே!  நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் மகள் எங்களுடன் வாயாடிக்கொண்டு இருந்தாள். எல்.கே.ஜி. படிக்கும் அவளிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பட் பட்டெனப் பதில் அளித்துக் கொண்டு இருந்தாள்.

'பாப்பா... உன் கிளாஸ்ல என்ன ரைம்ஸ் சொல்லித் தந்தாங்க?’

'நிலா... நிலா... ஓடி வா!’

'சரி... அந்தப் பாட்டுல நான் ஒரு வரி சொல்வேன்.. நீ அடுத்த வரி சொல்றியா?’

'சரி!’

'நிலா... நிலா... ஓடி வா.’

'நில்லாமல் ஓடிவா’

'மலை மீது ஏறிவா’

'மல்லிகைப் பூ கொண்டு வா’

'தரைமீது  தவழ்ந்துவா’ (அந்தப் பாடலில் இந்த வரி இருக்காது. நான் சும்மாச்சுக்கும் சொன்னேன். ஆனால், அவளோ கொஞ்சமும் தயங்கவில்லை. சட்டென்று அடுத்த வரியை அவளே கற்பனை செய்து பாடினாள்)

'தாமரைப் பூ கொண்டுவா! ’

வீரியமுள்ள விதை!''

- தாமு, தஞ்சாவூர்

''காதலன், கணவன் என்ன வேறுபாடு?''

''பேசுவது புரியாவிட்டாலும் ரசித்துக் கொண்டே இருப்பவன் காதலன்... பேசுவதுபுரிந்தும் சகித்துக்கொண்டு இருப்பவன் கணவன்!''

''குற்றவாளி, அரசியல் கட்சித் தலைவர்.... என்ன வித்தியாசம்?''

''வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு இருந்தால், அவர் குற்றவாளி! வெளி மாவட்டத்துக்குச் செல்லவே தடை விதிக்கப்பட்டு இருந்தால், அவர் கட்சித் தலைவர்!''

- நா.கி.பிரசாத், கோவை.

''விடாப்பிடியாக லட்சியத்தை அடைவது எப்படி?''

''ஒரு தீவை ஆட்சி செய்ய விரும்பினால், அந்தத் தீவை அடைய நீங்கள் ஏறி வந்த  படகை எரித்துவிடுங்கள். இல்லை என்றால் தீவை விட்டு வெளியேறும் எண்ணமே உங்கள் முன்னேற்றத்தை முடக்கிப் போடும்!''

''ஒருவரின் கோபம் இன்னொருவரைச் சிரிக்க வைக்குமா?''

''நிச்சயமாக! ஒருவன் தன்னை விட உயரமான ஒரு பெண்ணைக் காதலித்தான். தினமும் அலுவலகம் முடிந்த பிறகு அவளை வீட்டில் விட்டுச் செல்வது அவன் வழக்கம். அவளை ஒரு நாளாவது முத்தமிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. வெகு நாட்களுக்குப் பின் தன் ஆசையை அவளிடம் சொல்கிறான். அவளும் நீண்ட நேரம் யோசித்து, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு 'சரி’ என்கிறாள். ஆனால், அவளை முத்தமிட அவன் உயரம் போதாததால், அருகில் கிடந்த ஒரு கருங்கல்லைத் தூக்கிவந்து அதன் மேல் ஏறி நின்று, அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். அவளும் வெட்கத்துடன் பெற்றுக்கொண்டு விலகுகிறாள்.

மீண்டும் நடக்கத் தொடங்குகிறார்கள். சிறிது தூரம் சென்றதும் அவன் 'டார்லிங், இன்னொரு முத்தம்’ என்கிறான். 'ம்ஹூம்... இன்னைக்கு இது போதும்’ என்று கண்டிப்பாக அவள் மறுத்து விடுகிறாள். உடனே கடுங்கோபத்துடன் அவன் சொல்கிறான்... 'அப்புறம் இவ்வளவு தூரம் இந்தக் கருங்கல்லை நான் தூக்கிட்டே வந்தப்ப, நீ ஏன் எதுவுமே சொல்லலை?’ - விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்!''

- அனார்கலி, தஞ்சாவூர்

''கடுமையாக உழைத்தும் வெற்றி தாமதப்படும்போது, மனம் நொந்துவிடுகிறதே?''

''ஒருபோதும் அதுகுறித்துக் கவலைகொள்ளாதீர்கள். 'சாதாரண’ வெற்றிகளுக்கு ஆகும் நேரத்தைவிட 'அற்புதங்கள்’ நிகழ்த்த அதிக நேரம் ஆகும்தானே! உங்களுடைய வெற்றி தாமத மானால் அது 'அற்புதமாக’ உருவாகிக்கொண்டு இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். இன்னும் முனைப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்!''

- கே.சரஸ்வதி, திண்டல்.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில்  QA (space)  விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எணணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்!