Published:Updated:

“எழுத்தாளனை எதற்காக கொண்டாட வேண்டும்?”

டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன்

“எழுத்தாளனை எதற்காக கொண்டாட வேண்டும்?”

டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

''நீ எல்லாம் ஒரு அப்பனா? நீ இந்தச் சாதியில பொறந்ததாலதான், இந்தச் சாதிய ஒரு பயலும் மதிக்க மாட் டேங்கிறான். நாளக்கி ஒம்... மவ பொணம் சுடுகாட்ல வேவணும். இல்லண்ணா, ஒம்... பொணந்தான் வேவும். ஞாபகத்துல வெச்சிக்க... ஊருக்காரன ஒம்மவ, 'பொட்டப் பயலுவோ’னு நெனச்சிக்கிட்டாளா? இந்த மாரி ஒண்ணு ரெண்டு .......... பயளுவோ இருக்கிறதாலதான்  நம்ம சாதிக்கி மரியாதியே இல்லாமப் போவுது. ஒம்மவளுக்கு நம்ம பயலுவ ஒருத்தனுமே கண்ணுல படலியா?’  என்று  கட்சிக்காரப் பையன் ஆத்திரப்பட்டான்.

- மிகச் சரியாக 10 மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையம் எழுதிய 'பெத்தவன்’ என்ற கதையில் வந்த வரிகள், 'இளவசரன் - திவ்யா’ காதலையும் அதன் சோக முடிவையும் நினைவூட்டுகின்றன. தமிழில் இதுவரை மூன்று நாவல்கள், 50 சிறுகதைகள் எழுதியுள்ள  எழுத்தாளர் இமையத்தி டம் பேசினேன். தற்போதைய எழுத்துச் சூழல் முதல் எழுத்தாளர்களின்  சூழல் வரை சகலமும் பேசினார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்கள் இமையம் ஆனது எப்படி?''

''விருத்தாச்சலம் பக்கம் கழுதூர் என் சொந்த ஊர். இலக்கியம்லாம் எனக்குத் தெரியாது. ப்ளஸ் டூ படிக்கும்போது த.மு.எ.ச-வைச் சேர்ந்த ஒருவர் பெண்ணாடத்தில் நடக்கும் கட்சிக் கூட்டத்தில் வாசிக்க ஒரு கவிதை கேட்டார். எழுதிக் கொடுத்தேன். அதுக்கு ஆறுதல் பரிசா 'தாய்’ நாவல் கிடைச்சது. நான் படிச்ச முதல் நாவல் அதுதான். அப்புறம் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் மூலமாதான் எழுத்து, இலக்கியம்லாம் பரிச்சயம் ஏற்பட் டது.  ஒருநாள் நடுராத்திரியில் ஆரோக்கியம்கிற பெண்ணுடைய ஒப்பாரியிலிருந்து உருவானதுதான் என் முதல் நாவல் 'கோவேறு கழுதைகள்’. அண்ணாமலை ஆகிய நான் இமையம் ஆனது இப்படித்தான்!''

“எழுத்தாளனை எதற்காக கொண்டாட வேண்டும்?”

''ஆரோக்கியம், தனபாக்கியம், செடல்.... என உங்கள் நாவல்களில் இடம்பெறும் பெண்கள் அனைவரும் பெருந்துயர் சுமந்த பெண்களாகவே வருகிறார்களே? இவர்கள் எல்லாம் யார்?''

''உங்களுக்கு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதா? எனக்குச் சந்தோஷமாக இல்லை. குறிப் பாக, இங்கு பெண்களுக்குப் பெருந்துயர் சூழ்ந்த வாழ்க்கைதான் கிடைக்கிறது. 'கோவேறு கழுதை கள்’ நாவலில் வரும் ஆரோக்கியம் ஊர்த் துணியை வெளுக்கிற ஒரு பெண்ணாகவும் ஊராரின் மொத்த இழிசொல்லை ஏற்றுக்கொள்ளும் பெண்ணாகவும் இருக்கிறாள். 'செடல்’ நாவலில் வரும் செடல், நாட்டார் தெய்வத்துக்குப் பொட் டுக் கட்டிவிடப்பட்ட ஒரு பெண். இவர் ஒரு கூத்தாடியாகவும் வாழ வேண்டியிருக்கிறது. பொட்டுக் கட்டிவிடப்பட்ட, தெருக்கூத்தாடுகிற ஓர் இளம் பெண் சமூகத்தில் மனரீதியாக, உடல் ரீதியாக எதிர்கொள்ளும் கொடூரங்கள்தான் 'செடல்’ நாவல். 'ஆறுமுகம்’ நாவலில் வரும் தனபாக்கியத்தை, நான் ஒரு பேருந்துப் பயணத் தில் சந்தித்தேன். அழகான அந்தப் பெண்ணைத் தொடர்ந்தபோது, அவள் பாலியல் தொழிலாளிகளின் மையமான செக்குமோட்டுக்குச் சென்றாள். அதுதான் 'ஆறுமுகம்’ நாவல். செடலும் ஆரோக்கியமும் என்னுடைய தெருக்காரர்கள் தான். நாங்களெல்லாம் ஒன்றாக வாழ்ந்தவர்கள்!''

''உங்களை ஒரு தலித் எழுத்தாளர் என்று சொல்லலாமா?''

''நீங்கள் ஒரு பிள்ளைமாரிடம் 'உங்களுடையது பிள்ளைமார் இலக்கியமா?’; செட்டியாரிடம் 'உங்களுடையது செட்டியார் இலக்கியமா?’ என்றெல்லாம் கேட்பீர்களா? அவர்கள் எல்லாம் 'எழுத்தாளர்கள்’. நான் மட்டும் 'தலித்’ எழுத்தாளரா? சாதி முத்திரை குத்தாமல் நம்மால் எதையுமே பார்க்க முடியாதா? சரி, நான் எழுதுவது தலித் இலக்கியம் என்றால், யார் எழுதுவது இலக்கியம்?''

''கல்வி, பணி வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு போல எழுத்திலும் தங்களுக்குப் பிரத்தியேக இடம் வேண்டும் என்று தலித் இலக்கியவாதிகள் கேட்கிறார்களே?''

''அவ்வாறு கேட்பது சரி அல்ல; அதை ஏற்கவும் முடியாது. எழுத்தை வைத்துத்தான் அதற்கான மதிப்பு, தரம் நிர்ணயிக்கப்படுமே ஒழிய, அதை எழுதிய எழுத்தாளனின் சாதியை வைத்தல்ல. நான் எழுத்தாளன்.  நான் சாதிச் சங்க அறிக்கையை எழுதவில்லை. என் சாதிக்குரிய பெருமையையா எழுதிவருகிறேன்?  எழுத்து, இலக்கியம் என்பதெல்லாம் சாதிக்கு எதிரானது. ஒரு மனிதன் மனிதனாக வாழ எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ, அவற்றை ஒழித்துக்கட்டுவதற்கான கருவிதான் என் எழுத்து. என்னைப் பொறுத்தவரை என் படைப்பை படைப்பாக மட்டுமே பாருங்கள். என் சாதியைக்கொண்டு பார்க்காதீர்கள்!''

''நீங்கள் தீவிர தி.மு.க. அபிமானி. இன்றைய இளம் தலைமுறையினரிடம் சாதி, மதம் ஆகியவை பெருமித உணர்வாகப் பொங்கி நிற்கிறதே... திராவிட இயக்கங்கள் தோல்வி அடைந்துவிட்டனவா?''

''படித்தவர்கள் மத்தியில்தான் இன்று மூட நம்பிக்கை அதிகம் இருக்கிறது. படித்த, நாகரிகமிக்க, பணம் படைத்தவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு  பூஜை அறை உள்ளது. கிராமத்தில் கூரை வீட்டில் வசிப்பவர்கள், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பூஜை அறை வைத்துக்கொள்ள மாட்டார்கள். காலண்டர் படங்கள்தான் அவர்களுக்கு சாமிகள். பணம் இல்லாதவர்கள் சாமி கும்பிடுவார்கள். அதோடு அதை மறந்தும்விடுவார்கள். அவர்களுடைய 'சாமிகள்’ வானம் பார்த்த சாமிகள். அந்த மனிதர்களைப் போலவே அந்தச் சாமிகளும் மழையில் நனையும் வெயிலில் காயும். பகலிலும் இரவிலும் அநாதை யாக காட்டில்கிடக்கும். சில நேரம் சுருட்டும் சாராயமும் குடிக்கும். இதுதான் மக்கள் மரபு. ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை உண் டாக்கிய பணக்காரர்களுக்கு 'ஆண்ட பரம்பரை’ என்ற பெருமை தேவையாக இருக்கிறது. அதனுடைய விளைவுகளில் ஒன்றுதான் ஒவ்வொரு சாதிக்குள்ளும் வரன் தேடும் சுயம்வர நிகழ்வுகள். மற்றபடி சாதி இருக்கும்வரை பெரியாரின் கொள்கைகளும் இருக்கும். திராவிட இயக்கங்களும் இருக்கும்!''

''எழுத்தாளர்களைத் தமிழ் சமூகம் கொண்டாடுவது இல்லை, அவர்களை வசதியாக வாழவைக்கத் தவறிவிட்டது என்று சில எழுத்தாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்களே!''

''எனக்குப் பிடித்திருக்கிறது நான் எழுதுகிறேன். இந்தச் சமூகம் ஏன் என்னை வசதியாக வாழ வைக்க வேண்டும்? மக்கள் இவர்களை வசதியாக வாழவைக்கும் அளவுக்கு அப்படி என்ன எழுத்தில் சாதித்துவிட்டார்கள்?  வள்ளுவன் தொடங்கி பாரதிதாசன் வரை இன்றும் அவர்களுடைய படைப்புகள் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றன.. 'சமகாலத்தில் நம் சமூகம் எப்படி இருந்தது?’ என்பதற்கான ஆவணம்தான் இலக்கியப் படைப்பு. அந்த வகையில் யாருக்கும் இல்லாத பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அதுவே, அவனுக்குக் கிடைத்த ஆகப் பெரிய அங்கீகாரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலப் புலவர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் தமிழ்ச் சமூகம்  இன்றும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறது. இன்று அப்படியான கொண் டாடத் தகுதியுள்ள படைப்புகளைப் படைத்த வர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள்? தான் வாழும்போதே தன் படைப்புகள் சாவதைப் பார்க்க நேரிடுகிற எழுத்தாளர்களையும் எழுதிய ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே செத்துப்போகிற படைப்புகளை உருவாக்குகிறவர்களையும் எந்தச் சமூகம் கொண்டாடும்? எப்படி வசதியாக வாழ வைக்கும்?''

'' 'சமுகத்தில் வாழவே அச்சமாக இருக்கிறது’ என்று ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். அப்படி என்ன அச்சம்?''

''சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே சாதி இருக்கிறது. அவ்வப்போது சாதிகளுக்கு இடையே சிறுசிறு பிரச்னைகள், மோதல்கள் காலந்தோறும் இருந்துவந்தாலும்,  ஒருவித இணக்கமும் இருந்தே வந்திருக்கிறது. ஆனால், கல்வி அறிவும் நவீனவசதிகளும் பெருகிய இன்றைய காலத்தில், சாதியின் மூலமாக அரசியல் அதிகாரம் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டபோது, அந்த இணக்கம் குலைந்துவிட்டது. எந்தச் சாதியாக இருந்தாலும் நண்பனை 'டேய் மாப்ள’ என்று பெயர் சொல்லி அழைத்த நண்பர்களைக்கூட, இன்று அப்படி அழைக்க முடியாத ஒரு அச்சத்தை சாதி உணர்வு உருவாக்கிவிட்டது. முன்பு சாதி தெருவுக்குள், ஒரு எல்லைக்குள் இருந்தது.  இப்போது அது இல்லாத இடமே இல்லை என்ற நிலையில் பொதுவெளியில் நீங்கள் எப்படி அச்சமின்றி நடமாட முடியும்? இதைத்தான் அச்சம் என்றேன்!''