Published:Updated:

கூடங்குளம்... இன்று!

ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

கூடங்குளம்... இன்று!

ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

ந்தியத் தென்கோடி முனை இடிந்தகரையின் பரபரப்பு, இப் போது ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 'கூடங்குளம் அணுமின் உலை செயல்படத் தொடங்கிவிட்டது’ என்கின் றன ஊடகச் செய்திகள்.ஆனால், அணு உலை எதிர்ப்பு இயக்கத்தி னரோ, 'இது வெறும் நாடகம்’ என்கிறார்கள். வழக்கமாக அணு உலைக்கு ஆதரவான அரசின் சிறிய நடவடிக்கைக்கே பெரும் போராட்டத்தை நடத்தும் இடிந்தகரையில், இப்போது பெரிய எதிர்ப்பு இல்லை.

'அதான் செயல்படவே ஆரம்பிச்சிருச்சே...’ என்ற சலிப்பா.. அல்லது பெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முன்பான அமைதியா என்பது தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னதான் நடக்கிறது கூடங்குளத்தில் என்பதை அறிந்துகொள்ள அணு உலைக்குச் சென்றோம். இதற்கு முன்பு, கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதும், அணு உலையில் மாற்று எரிபொருள் நிரப்பும்போதும், உலையின் அழுத்தத் திறனைப் பரிசோதித்தபோதும், யுரேனியம்-235 அணு உலையில் நிரப்பப்பட்டபோதும்... அங்கு சென்றி ருக்கிறோம். ஆனால், அப்போதெல் லாம் அணு உலை இயங்க ஆரம்பித் திருக்கவில்லை. இந்த முறை உள்ளே செல்லும்போதே மத்திய சிறப்பு அதிரடிப் படையினரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏராளமான பாதுகாப்புப் படை காவல் துறையினர் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நம்மை அனுமதிக்கின்றனர். முதலில் அணு உலைக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு அணு உலையில் ஏற்படும் வெப்பத்தின் அளவு, உலையின் அழுத்தம், அணுப் பிளவின் வேகம், நீராவி உருவாகும் திறன் போன்றவை கணினி யின் வழியே நிபுணர் குழுவினரால் அளவிடப் பட்டுக்கொண்டிருந்தது. அதன் முடிவுகளை இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் உடனடியாக அலசி ஆராய்கின்றனர். அணு உலையில் நாம் கண்ட இந்தக் காட்சிகள்... அது செயல்படத் தொடங்கிவிட்டது என்பதையே நமக்கு உணர்த்தியது.

கூடங்குளம்... இன்று!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநரான ஆர்.எஸ்.சுந்தரைச் சந்தித்தோம். ''இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ள முதல் மெந்நீர் அணு உலை இதுதான். மூன்றாம் தலைமுறை அணு உலையான இதற்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை. இந்த வகை அணு உலை யில், ஆபத்து காலங்களில் தானாகவே இயங்கும் வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி, நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லாத பாதுகாப்பான பகுதி. எனினும், சுனாமி வந்தாலும் அணு உலை பாதிக் கப்படாதவாறு கட்டுமானத்தை அமைத்தி ருக்கிறோம். மின்சாரம் தடைப்பட்டுவிடாமல் இருக்க, இரண்டு ஜெனரேட்டர்கள் தயார் நிலையில்  இருக்கின்றன. கடல்நீரைச் சுத்திகரிக் கும் இரண்டு மையங்கள் தயார் நிலையில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அணுஉலை உடனடியாகக் குளிர்விக்கப்படும்.

கூடங்குளம்... இன்று!

அணு உலையின் பாதுகாப்புகுறித்து யாரும் சிறிதளவுகூட அச்சம்கொள்ளத் தேவை இல்லை. உலையில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்குமே யானால், இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் அணு உலைக்கு அருகி லேயே குடும்பத்துடன் குடியிருப்போமா?''

''எல்லாம் சரி... உண்மையிலேயே அணு உலை செயல்படத் துவங்கிவிட்டதா?''

''கட்டுப்பாட்டு அறையில் இருந்து அணு உலையின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ளுங்கள். அணு உலையில் 2012 அக்டோபர் மாதமே யுரேனியம் எரிபொருளை நிரப்பிவிட்டோம். நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு ஜூலை 11-ம் தேதி இரவு 11.49 மணிக்கு அணு உலையைச் செயல்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கினோம். 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு யுரேனியத்தில் அணுப் பிளவு ஏற்பட்டு நியூட்ரான்களின் எண் ணிக்கை பெருகத் தொடங்கியது. சங்கிலித் தொடர் போன்ற இந்த அணுப் பிளவில் உருவாகும் வெப்பம், நீராவியை உருவாக்கி, டர்பைனை இயங்கச்செய்து மின் உற்பத்தி செய் யப்படும். இந்தப் பணிதான் தற் போது நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்த சில நாட்களில் 400 மெகா வாட் மின் உற்பத்தி கிடைக் கும். அது, பவர் கிரீட் மூலமாக தென் மண்டல மின்சுற்றில் இணைக்கப்படும். பிறகு அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைப் பெற்று 500, 750, 900, 1,000 மெகா வாட் என்று படிப்படியாக  மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். இந்தியாவின் 21-வது அணுமின் நிலையமான கூடங்குளம் செயல்படத் தொடங்கிவிட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை!''

கூடங்குளம்... இன்று!

'சுதந்திர இந்தியாவின் மக்கள் பங்கேற்று நிகழ்த்தும் 700 நாட்களைக் கடந்து தொடரும் நீண்ட நெடிய அகிம்சைப்போராட் டத்தின் நிலை இனி என்ன?’ சுப. உதயகுமாரனிடம் பேசினேன்...

''அணு உலை இயங்கத் தொடங்கிவிட்டதே? உங்கள் போராட்டம் தோல்வியடைந்துவிட்டதா?''

''அணு உலை இயங்கத் தொடங்கிவிட்டதாக இவர்கள் சொல்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை அது மர்மம் நிறைந்த கல்லறையாகவே காட்சியளிக்கிறது. முக்கியமாக கடல் நீரைக் குளிர்வித்துப் பயன்படுத்திவிட்டு, மீண்டும் அதை கொதிநீராகக் கடலுக்குள் விடுவார்கள். அப்படித் தண்ணீர் ஏதும் கடலுக்குள் விழவில்லை என்கிறார்கள் மீனவ மக்கள். ஆக அணு உலை இயங்குவதாகத் தெரியவில்லை. இடிந்தகரை எனும் இந்தக் கரையோரத்தில் இருந்து, இந்தியா முழுமைக்கும் அணு உலை தொடர்பான விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம்.

தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்திருக்கிறார்கள். கெய்ல் எண்ணெய்க் குழாய் பிரச்னை, மீத்தேன் வாயு, ஆபத்தான ரசாயன ஆலைகள் தொடர்பான மக்களின் விழிப்பு உணர்வுக்கு, எங்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டமே உந்துசக்தி. இது தென்னிந்தியாவின் முக்கியமான போராட்டம். இந்தியா வில் இனிமேல் எங்கு அணு உலை ஆரம்பித்தாலும் மாபெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டாக வேண்டிய சூழலை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.''

''ஆனால் இந்தப் போராட்டம் மீனவர்கள் என்ற எல்லையைக் கடக்கவில்லையே... இது இந்தப் போராட்டத்தின் பலவீனமா?''

''அணு உலையால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் மீனவ மக்கள் என்பதால், அவர்கள் இந்தப் போராட்டத்தின் மையமாக இருக்கிறார்கள். மற்றபடி அருகிலுள்ள நாடார் கிராமங்கள், தலித், முஸ்லிம் மக்களும் பெருமளவு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீஸின் கொடூர ஒடுக்குமுறையால் அவர்கள் வெளிப்படையாக வருவதில் லையே தவிர, அவர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கிறது.''

''உங்களை ஒரு என்.ஜி.ஓ. என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. உங்களுக்கும் என்.ஜி.ஓ. குழுக்களுக்கும் எந்தத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லையா?''

''நான் ஒரு என்.ஜி.ஓ. நடத்துகிறேன். எனது பள்ளிக்கான நிதியை ஒருங்கிணைக்கும் சாக்கர் அறக்கட்டளை ஒரு என்.ஜி.ஓ. அமைப்புதான். பள்ளிக்கு ஒரு வாகனம் வாங்க உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, ஒரு தொகை நிதியுதவி பெற்றோம். ஒன்றிரண்டு என்.ஜி.ஓ-க்களிடம்பள்ளிக் காக சில நன்கொடைகள் பெற்றோம். மற்றபடி வெளிநாட்டி லிருந்து பணம் வாங்க எனக்கு அனுமதி கிடையாது.ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இதை எல்லாம் ஊடகங்களிடம் சொல்லியிருக்கிறேன். நான் அணு உலை விவகாரத்தில் பணம் பெற்றேன் என்பதற்கு ஆதாரமாக மத்திய அரசு இதுவரை எதையும் கொடுக்கவில்லை.''

''உங்களிடம் ஒரு கம்யூனிஸ வெறுப்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?''

''இந்தியாவில் வாஜ்பாய் பிரதமர் ஆனபோது, அமெரிக்காவில் 'பி.ஜே.பி. வாட்ச்’ என்ற அமைப்பை இந்துத்துவாவுக்கு எதிராகத் துவங்கினோம். எத்தியோப்பியாவில் பள்ளி ஆசிரி யராக இருந்தபோது, அங்கு ஆட்சி செய்த மங்கீஸ்து ஹைலே மரியம், ரஷ்யாவின் ஸ்டாலினைப் போல சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். கம்யூனிஸத்தை அவர் நடைமுறைப் படுத்திய விதமும் அதற்காக ஜனநாயகத்தை நசுக்கிய அவரது பாசிசப் போக்கும், ரஷ்யாவுக்குச் சென்று கோர்ப்ப சேவுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் நடத்திய அராஜகமும் எனக்கு கம்யூனிஸத்தின் மீது கசப்பைக் கொண்டுவந்தது. பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தை மதிக்காத கம்யூனிஸம் எவருக்கும் உதவாது என்பதில் அன்றும் இன்றும் உறுதி யாக உள்ளேன். அது கம்யூனிஸம் தொடர்பான வெறுப்பாக என்னிடம் இல்லை. தோழர்கள் எப்போதும் நட்புச் சக்திகள் தான்.''

''உச்ச நீதிமன்றப் பரிந்துரைப்படி வழக்குகளை வாபஸ் வாங்கினால், போராட்டத்தைக் கைவிடுவீர்களா?''

''நான் விரும்பினால்கூட போராட்டத்தை இந்த மக்கள் கைவிட மாட்டார்கள். இங்கு நான் எந்த முடிவும் எடுப்பது இல்லை. மக்கள், சமுதாயத் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து பேசி விவாதித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அதனால் அரசு உடனடியாக மக்கள் மீது போட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். மக்களோடு அரசு பேச வேண்டும். மற்றபடி அணு உலை மூடப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்!''

- டி.அருள் எழிலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism