Published:Updated:

7,500 ரூபாய் ஆறு மணி நேரம்..?!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

7,500 ரூபாய் ஆறு மணி நேரம்..?!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

Published:Updated:
##~##

கையில் இருப்பது வெறும் 7,500 ரூபாய். ஆறு மணி நேரத்தில், அதை 1 லட்சத்து 22 ஆயிரத்துச் சொச்சம் ரூபாயாக மாற்ற முடியுமா?

டெல்லியில் 'ஃபேகல்ட்டி ஆஃப் மேனஜ்மென்ட் ஸ்டடீஸ்’ (எஃப்.எம்.எஸ்) என்ற மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்கள் இந்த அபார சாதனையை நிகழ்த்திக்  காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 'எஃப்.எம்.எஸ்’ கல்லூரி எம்.பி.ஏ., மாணவர்களைக்கொண்டு நடத்தும் 'மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் டெல்லி’ என்ற நிகழ்ச்சியில்தான் இந்தச் சாதனை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மெர்சன்ட்ஸ் ஆஃப் டெல்லி’யின் கேம் பிளான் இதுதான். முதலாமாண்டு எம்.பி.ஏ படிக்கும் 225 மாணவர்களும் ஒரு குழுவுக்கு 15 பேர் என மொத்தம் 15 குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவிடமும் தலா 500 ரூபாய் கொடுக்கப்படும். அந்தப் பணத்தைப் பன்மடங்காகப் பெருக்க வேண்டும். இந்தப் போட்டிக்கு கெடுபிடி விதிமுறைகளும் உண்டு. பணம் கையில் ஒப்படைக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் பர்ஸ், செல்போன் போன்றவற்றை ஒப்படைத்துவிட வேண்டும். ஒரு மணி நேரத்தைத் திட்டமிடுதலுக்கு எடுத்துக் கொள்ளலாம். யாரிடமும் கடன் வாங்கக் கூடாது மற்றும் திருடக் கூடாது. விளம்பரப் பலகைகளைப் பயன்படுத்தக் கூடாது. நிறுவனத்தின் பெயரையோ, தங்கள் அடையாளத்தையோ, போட்டி பற்றிய விவரங்களையோ யாரிடமும் சொல்லக் கூடாது. ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஆறு மணி நேரக் கெடுவில் மாணவர்கள் தங்கள் ஐடியாக்கள் மற்றும் உடல் உழைப்பைப் பயன்படுத்தி 500 ரூபாயைப் பன்மடங்காகப் பெருக்க வேண்டும். இத்தனை விதிகள் இருக்க, மாணவர்களோ ஸ்மார்ட்டாக யோசித்து, எந்த விதியையும் மீறாமல் சிம்பிளாக இலக்கை எட்டிவிட்டார்கள்.

7,500 ரூபாய் ஆறு மணி நேரம்..?!

மாணவிகள் ரோஜாப் பூ விற்ற கதைதான், 'மெர்சன்ட்ஸ் ஆஃப் டெல்லி’யின் ஹைலைட். ''கம்லா மார்கெட்டில் 20 ரூபாய்க்கு பூக்கள் வாங்கினால், அதை 10 ரூபாய் லாபம் வைத்து 30 ரூபாய்க்கு விற்றோம். டெல்லியில் பெரும்பாலும் எல்லோரும் பேரம் பேசுவார்கள். அவர்களிடம் மாட்டிக்கொண்டால் நேரம்  விரயமாகும். அதனால், பூக்களை விற்க கான் மார்கெட்டைத் தேர்ந்தெடுத்தோம். அங்கே வருபவர்கள் பெரும்பாலும் தாராளமாக செலவு செய்வார்கள். அங்கேயும் சைக்காலஜிக்கலாக யோசித்து விற்பனை செய்தோம்.

கையை பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு வருபவர்களை நாங்கள் அணுகவில்லை. காரணம், அவர்கள் எதையும் வாங்கும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். எங்களின் முதல் டார்கெட், காதலியுடன் வரும் ஆண்களும், புதுமணத் தம்பதிகளும்தான். வயதான தாத்தா ஒருவர், தன் மனைவியுடன் வந்திருந்தார். நாங்கள் எவ்வளவு கேட்டும் வாங்கவில்லை. 'நீங்கள் உங்கள் மனைவிக்குக் கடைசியாக எப்போது ரோஜா வாங்கிக் கொடுத்தீர்கள்? இந்தக் காதலின் சின்னத்துக்கு இவ்வளவு யோசனையா?’ என்று கேட்டதும் வெட்கத்தோடு ரோஜா வாங்கிக் கொடுத்தார். இதில் காதலர்கள்தான் எங்களுக்குப் பெரிதும் கை கொடுத்தார்கள். காதலி அருகில் இருந்தால், நாங்கள் சொன்ன விலையைவிட அதிகமாகவே பணம் கொடுத்தார்கள்'' என்று சிரிக்கிறார் பூஜா பாய்.

7,500 ரூபாய் ஆறு மணி நேரம்..?!

அவருடைய டீமைச் சேர்ந்த ப்ரீத்தி, ''பிசினஸ்ஸோடு நாங்கள் காதலையும் அன்பையும் கற்றுக்கொண்டோம். ஒரு காதலர், தன் காதலிக்காக எங்களிடம் இருந்த அத்தனை ரோஜாக்களையும் 500 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டார். ஐந்து குழந்தைகள் உள்ள அப்பா ஒருவர், குழந்தைகளுக்கும் மனைவிக்கும் சேர்த்து 1,000 ரூபாய்க்கு ரோஜா வாங்கினார். இன்னொரு குழுவைச் சேர்ந்த மாணவர்கள்  ஷார்ட் பேப்பர், கார்டுகள் வாங்கி அதில் ஓவியம் வரைந்து கிரீட்டிங் கார்டுகளாக மாற்றி விற்றார்கள். இன்னும் சில மாணவர்கள் பாட்டுப் பாடியும், சாலையோர நாடகங்கள் நடத்திப்பார்த்தார்கள். ஆனால், மக்கள் அவசர அவசரமாக நகர்ந்துகொண்டிருந்ததால், யாரும் அதைக் கவனிக்கவில்லை; பணமும் கொடுக்கவில்லை. எல்லாரும் அவசரம் அவசரம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்!''  என்கிறார்.  

'மெர்சன்ட்ஸ் ஆஃப் டெல்லி’ போட்டியில் கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்த்த  தொகை 77 ஆயிரம் ரூபாய். இந்த வருட மாணவர்கள் அதைவிட 45 ஆயிரம் ரூபாய் கூடுதலாக சம்பாதித்திருக்கிறார்கள்.

''அந்த ஆறு மணி நேரமும் நாங்கள் பயன்படுத்திய உத்திகள் அனைத்துமே எங்கள் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தவைதான். அவர்களின் ஐடியாக்களை நாங்கள் நிறைவேற்றினோம்.  ஒருவன் நிர்பந்திக்கப்படும் போது அதிரடியாக யோசிப்பான். அவனுக்குள் மறைந்திருந்த திறமைகளும் வெளிவரும். பல நேரங்களில் அதுவே அவனுக்கு வெற்றியைத் தரும்’ என்று எங்கள் ஆசிரியர்கள் சொல்வார்கள். அது அத்தனையும் உண்மை என்பதை அன்று அனுபவித்தோம்!'' என்று வெற்றியின் குதூகலத்தோடு முடித்தார் அக்ஷய் சர்மா.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism