Published:Updated:

மண்ணுல புதையுறவன் மண்ணையே புதைச்சானே!

பாரதி தம்பி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

மண்ணுல புதையுறவன் மண்ணையே புதைச்சானே!

பாரதி தம்பி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

''நாத்தமுன்னா கை பிடிக்குது மூக்கை -
அந்த நரகலிலே கெடக்கு
எங்க வாழ்க்கை
போனவுக வந்தவுக
 பார்க்கவே இல்லை
எங்க பொருமல்களை
ஒரு காதும் கேட்கவே இல்லை
தோட்டிகளை மனுஷனோட
சேர்க்கவே இல்லை - எங்க
தோட்டத்துல ஒரு பூவும்
பூக்கவே இல்லை!''

- பூத்துக் குலுங்கும் தோட்டங்களே கவிஞர்களின் விருப்பப் பிரதேசங்களாக இருக்கும் நிலையில், பூக்காத பூக்களின் வலிகளை, தன் பாடல்களில் பதிவுசெய்கிறார் கவிஞர் தனிக்கொடி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மேடைகளில் ஒலிக்கும் பாடல்கள் இவருடையவை.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆரம்பத்தில் நானும் இயற்கையை வர்ணிக்கிறது, மழையை வர்ணிக்கிறது அப்படினு மட்டும்தான் எழுதிகிட்டு இருந்தேன். சமகால சமூகப் பிரச்னைகளுக்கு ஒரு கலைஞனா நாம் வினைபுரியணும்னு எனக்கு மெதுவாத்தான் புரிஞ்சது. மழையை இருபது வருஷத்துக்கு முன்னாடி வர்ணிச்சாலும் ஒண்ணுதான், இப்போ வர்ணிச்சாலும் ஒண்ணுதான். ஆனா, கும்பகோணம் தீ விபத்துல இருந்து, வாச்சாத்தி வன்கொடுமை வரை ஒவ்வொரு காலத்துலயும் சமூகப் பிரச்னைகள் மாறிட்டே வருது. அதைக் கண்டும் காணாமல் கடந்து போகக் கூடாது.

என் சொந்த ஊர் புதுக்கோட்டை. சின்ன வயசுல சினிமா பாடல்கள் மேல ஆர்வம். எழுதி எழுதிப் பார்ப்பேன். எனக்கு பதினேழு வயசு நடக்கும்போது கண்ணதாசன் இறந்தார். அப்போ கண்ணதாசன் நினைவுப் பாடல் போட்டி நடத்தினாங்க. பத்தாயிரம் பேர் கலந்துக்கிட்ட அந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அப்புறம் புதுக் கோட்டை த.மு.எ.க.ச. தோழர்கள்தான் என்னை சமூக, அரசியல் கருத்துக்களைக் கொண்ட பாடல்களை எழுதத் தூண்டினாங்க. குறிப்பா எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும், ஆதவன் தீட்சண்யாவும் எனக்கு நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தாங்க. அருந்ததியர் மக்களோட துயரத்தைச் சொல்கிற 'நாத்தமுன்னா கை பிடிக்குது’ பாடல்லாம் அவங்க கொடுத்த அரசியல் அறிவால் எழுதினதுதான். அந்தப் பாட்டு,

மண்ணுல புதையுறவன் மண்ணையே புதைச்சானே!

'எதுக்களிக்கும் குமட்டல்களை
செரிச்சிருக்கிறோம்
நீங்க ஏசும்போது கண்ணீரோடு
சிரிச்சிருக்கிறோம்
வாக்காளர் பட்டியலில்
வந்திருக்கிறோம். - உங்க
வரலாற்றுப் பட்டியலில் எங்கிருக்கிறோம்?’

- அப்படினு முடியும். இன்னைக்கும் இந்தப் பாட்டு பல ஊர் மேடைகளில் பாடப்படுது. ஆனா, இதை நான் பெருமையா நினைக்கலை. மனிதக் கழிவுகளை மனுஷங்களே அள்ளுற கொடுமை முடிவுக்கு வரணும். இந்தப் பாட்டை பாடும் சூழ்நிலை அடியோட இல்லாமப் போகணும்!'' என்கிற தனிக்கொடி, கவிதைகள், சிறுகதைகளும் ஏராளமாக எழுதியிருக்கிறார்.

கடற்புறத்து வாழ்க்கை பற்றிய பாடல் ஒலிப் பேழை ஒன்றில் தனிக்கொடி எழுதிய பாடல்கள் அனைத்தும் அர்த்தச் செறிவுள்ளவை. புதிதாக திருமணமான கடற்புறத்து மீனவப் பெண், புயல் மழை சமயம் பாடு பார்க்கக் கடலுக்குள் சென்று, வீடு திரும்பாத கணவனை நினைத்துப் பாடுகிறாள்...

'கரையில் மீனாய் கன்னி துடிப்பது மன்னவனுக்குக் கேட்காதா...
கடலின் நீரே ஒத்த சொட்டாய் சுருங்கி   அவரைக் காட்டாதா...
எட்டிப்போன இடத்தைத் தேடி இதயம்   நீந்திச் செல்லாதா...
ஈரக் காத்தின் வாசம் வந்து இருக்காருன்னு   சொல்லாதா...
இருக்காருன்னு சொல்லாதா..?’

நிச்சயமற்ற கடல் வாழ்க்கையை, புதிதாகத் திருமணமான ஒரு பெண்ணின் கோணத்தில் விவரிக்கும் இந்தப் பாடல், இசையுடன் ஒலிக்கும்போது, அந்தப் பெண்ணின் துயரத்தை நமக்குள் கடத்துகிறது.

''இப்போ ஊரெல்லாம் நான்கு வழிச் சாலைகள் அமைக்கிறாங்க. வளர்ச்சி நல்ல விஷயம்தான். ஆனா, அந்த வளர்ச்சி எதையெல்லாம் அழிச்சுக் காலி பண்ணுதுனு கவனிக்கணும். பளபளன்னு ரோடு இருந்தாப் போதுமா? அது மக்களுக்குப் பயன்பட வேண்டாமா? உலகமயமாக்கலின் இந்த விளைவைத்தான் எங்களை மாதிரியான கலைஞர்கள் பாட்டுல கொண்டுவர்றோம்.

'எங்கே.. எங்கே... நான் பிறந்த ஊர் எங்கே...
கீக்காட்டில் கெடைபோட்ட
கீதாரி மகன் எங்கே
ஆக்காட்டி குருவி எல்லாம்
அலறுதே இரை எங்கே...
விளைஞ்ச காட்டுல கானல் பாயுதே...
விதையும் பயிருமே நிலத்தை மேயுதே...
மண்ணுல புதையுறவன்
மண்ணையே புதைச்சானே
தன்னையே அறியாம சாவை விதைச்சானே
என்னையும் உன்னையும்
ஏலத்தில் வெச்சானே
அந்நிய கொள்ளிக்கு
அன்னையைக் கொன்னானே...

- இந்தப் பாடல் வரிகளுக்கு உணர்வெழுச்சியோட இசை அமைச்சுப் பாடிய இரா.பிரபாகர், கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, திருவுடையான் இவங்கதான் பாடல்களின் பிரபலத்துக்குக் காரணம்!'' என்கிறார் தனிக்கொடி.  

''மக்கள் பிரச்னைகள் பத்தி எழுதும்போதுதான் மனசுக்கு நெருக்கமா உணர முடியுது. கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து நடந்த சமயத்தில், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் என்னை அங்கே அழைச்சுட்டுப் போனார். ஒரு வீட்டுக்குப் போனோம். அவர் ஒரு கூலித் தொழிலாளி. அவரோட பையன் அந்தத் தீயில் கருகி செத்துட்டான். அவர் சொன்னார், 'நான் தட்டு வண்டி ஓட்டுறவன். தினமும் ராத்திரி, வீட்டுக்கு அரிசி, மொளகாய் வாங்குறதுக்கு முன்னாடி பிள்ளைங்களுக்குத் தீனி வாங்கிருவேன். நான் போனதுமே மிச்சர் வண்டிக்காரர் ரெண்டு பொட்டலம் போட்டு,  கையில கொடுத்துடுவார். இப்பவும் நான் வண்டியைக் கொண்டுபோய் மிக்சர் வண்டிக்கிட்ட நிறுத்துறேன். அவர் என்னைப் பார்த்து அழுவுறார். நான் அவரைப் பார்த்து அழுவுறேன்’னு  சொன்னது இப்ப நினைச்சாலும் என் மனசைப் பிசையுது. இன்னொரு தகப்பன், செத்துப்போன தன் பொண்ணு போட்டோவுக்கு சின்னதா ஃபேன் செஞ்சு ஓட விட்டிருந்தார். 'தீயில கருகும்போது எம் பொண்ணு எப்படி துடிச்சிருப்பா..’னு அவர் சொல்லும்போதே நமக்கு அழுகை வரும். 'என்று தணியும்’ என்ற அந்த ஆவணப் படத்துக்கு 'பாழும் திருவுளமே... பாழும் திருவுளமே...’ன்னு நான் ஒரு பாடல் எழுதியிருந்தேன்'' என்கிற தனிக்கொடி அந்தப் பாடலை துயர் மிகு குரலில் பாடிக் காட்டுகிறார்.

மண்ணுல புதையுறவன் மண்ணையே புதைச்சானே!

''சொல்ல மனம் துடிக்குதே தேமித் தேமி...
எங்க புள்ளக்கறி கேட்டது எந்தச் சாமி?
தவழ்ந்த வாசம் இன்னும்
தரை விட்டுப் போகலியே - என்
கண் வளர்ந்த தொட்டில் இன்னும்
காத்தசஞ்சும் ஆடலியே
பால் வாசம் மாறுமுன்னே
பால் ஊத்த விட்டீகளே
தங்கத்தைக் கருகவிட்டுச்
சாம்பலைத்தான் தந்தீகளே
கொடியில் துணி ஆடி கூப்பிட்டுப் பார்க்குதே...
அந்தக் கூடத்து மரப்பாச்சி எங்கேனு கேட்குதே...
செடியில் பூ அழுது தேன் கூட கரிக்குதே...
நான் தினம் விளக்குப் பொருத்தையில
தேகமே நடுங்குதே...
எம் புள்ள என்னோட இருந்த ஒரு பொழுத
திருப்பித் தந்திடுமா தீர்ப்பெழுதும் கச்சேரி
களவுக்கும் காவுக்கும்
கன்னக்கோல் வெச்சுருக்கும்- இந்த
எழவெடுத்த கல்விக்கு
என்னைக்குக் கருமாதி?’ ''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism