Published:Updated:

விகடனில் புது வெள்ளம்!

பாரதி தம்பி, ஆ.அலெக்ஸ் பாண்டியன்படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ்

விகடனில் புது வெள்ளம்!

பாரதி தம்பி, ஆ.அலெக்ஸ் பாண்டியன்படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

தீத உற்சாகத்துடன் புத்துணர்வு பொங்கக் களம் இறங்கியிருக்கிறது 57 கல்லூரி மாணவர்கள் அடங்கிய விகடனின் 2013-14ம் ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர் படை. இரண்டு நாட்கள் பங்கு பெற்ற பயிற்சி முகாமில் ஒரு பத்திரிகையாளர் கையாள வேண்டிய நுணுக்கங்கள், ஆச்சர்யங்கள், அதிசயங்கள் என விடுகதையின் புதிரை அவிழ்ப்பதைப் போல, பல விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர், பல துறையைச் சார்ந்த பிரபலங்கள்...  

நாஞ்சில்நாடன், எழுத்தாளர்: ''குறிப்பிட்ட ஒரு விஷயம்குறித்த பன்முகப் பார்வை மிக அவசியம். ஒரு டிராஃபிக் சிக்னலில் குதிரை வண்டி ஒன்று நிற்கிறது. சிக்னல் போட்டாகிவிட்டது. ஆனால்,குதிரை நகரவில்லை. பின்னால் உள்ள பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்துக்கொண்டே இருக்கிறார். பயணிகள் எரிச்சல் அடைகின்றனர். போக்குவரத்துக் காவலரோ, 'இப்படி டிராஃபிக் ஆகிறதே... பின்னால் காத்தி ருக்கும் மந்திரி கோபிப்பாரே’  எனப் பதறுகிறார். எப்படியேனும் வண்டியை நகர்த்திச் செல்ல வேண்டும் என, குதிரை வண்டிக்காரர் குதிரையை மேலும் மேலும் அடிக்கிறார். இந்தச் சம்பவத்தை நாம் பேருந்து ஓட்டுநர், பயணி, போக்குவரத்துக் காவலர், குதிரை வண்டிக்காரர்... இத்தனைப் பேரின் கோணத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்தக் குதிரையின் கோணத்தில் இருந்தும் இதை அணுக வேண்டும். இதுதான் மாற்றுப் பார்வை. இதுதான் பன்முகத்தன்மை. இந்தப் புரிதலை இலக்கியம்தான் உங்களுக்கு வழங்க முடியும்! 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்று சொல்வது வன்மம் நிறைந்தது. 'அது என்ன காக்கைக்கும்?’ இப்படி அனைத்தையும் உடைத்துப் பார்க்கும் மாற்றுப் பார்வை ஒரு பத்திரிகையாளருக்கு மிக அவசியம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனில் புது வெள்ளம்!

செழியன், ஒளிப்பதிவாளர்: ''புகைப்படம் என்பது வெறுமனே டாக்குமென்ட் இல்லை. அது ஒரு கதையைச் சொல்ல வேண்டும். ஹென்றி கார்டியர் பிரேசன் என்கிற பிரெஞ்சு புகைப்படக்காரரை 'இதழியல் புகைப்படக் கலையின் தந்தை’ என்பார்கள். காந்தியின் கடைசி நாட்களில் உடன் இருந்துள்ளார். இப்போது நாம் பார்க்கும் ரமண மகரிஷியின் புகைப்படங்கள் அவர் எடுத்தவைதான். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியா முதல்முறையாக செயற்கைக்கோள் ஏவியபோது, புகைப்படம் எடுப்பதற்காக பிரான்ஸில் இருந்து வந்திருந்தார் ஹென்றி. ராக்கெட் ஏவும் தினத்தன்று அதிகாலையில், அவருடைய விடுதி அறையைத் தட்டி, 'ராக்கெட் ஏவும் நேரம் நெருங்கிவிட்டது. புகைப்படம் எடுக்க வாருங்கள்’ என்று அழைத்திருக்கின்றனர். அவரோ, 'நான் அந்தப் படத்தை எப்பவோ எடுத்துவிட்டேன். நீங்கள் போகலாம்’ என்று சொன்னார். 'இன்னும் ராக்கெட்டே ஏவவில்லை. அதற்குள் எப்படி எடுத்திருக்க முடியும்?’ என்று வந்தவர்களுக்குக் குழப்பம். ஆனால், ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்னரே ஹென்றி எடுத்த புகைப்படம் பின்னாளில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர், ராக்கெட்டின் மிக முக்கியமான உதிரிப் பாகம் ஒன்றை, தென்னந்தோப்புக்கு இடையில், தன் சைக்கிளில் வைத்து ஓட்டிக்கொண்டு செல்வார். அதைத்தான் அவர் புகைப்படமாக எடுத்திருந்தார். ராக்கெட் ஏவப்படுவதை எல்லோரும் எடுப்பார்கள். அது டாக்குமென்ட். ஆனால், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டின் அரசியல், பொருளாதாரப் பின்னணியை, ஹென்றி எடுத்த புகைப்படம்தான் விளக்கும். 100 பக்கக் கட்டுரை சொல்லாததை அந்த ஒரு புகைப்படம் சொல்லிவிடும்!''  

விகடனில் புது வெள்ளம்!

பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்: ''ஒரு பத்திரிகையாளன் என்பவன், சமநிலை குலையாத மனதுடன் இருக்க வேண்டும். நான் விகடன் நிருபராக இருந்த காலத்தில் என்னால் அப்படி இருக்க முடிந்தது இல்லை. தர்மபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தில் பலியான மாணவியின் வீட்டுக்கு நான் செய்தி சேகரிக்கச் சென்றுஇருந்தேன். அப்போது என்னால் துக்க வீட்டின் பதற்றத்துடன்தான் இருக்க முடிந்ததே தவிர, செய்தியாளராகப் பணியாற்ற முடியவில்லை. அப்படியான சூழ்நிலைகளில் சமநிலை உள்ள மனதுடன் செயல்பட வேண்டியது ஒரு பத்திரிகையாளரின் கடமை என்று நினைக்கிறேன். மற்றவர்கள் ஒரு சம்பவமாக கடந்து செல்வதை, 'ஏன் இப்படி நடக்கிறது?’ என்ற விமர்சனப் பார்வையுடன் ஒரு பத்திரிகையாளர் அணுக வேண்டும். தங்கள் தலைமையின் மனம் குளிர்வதற்காக, இப்படி ஒரு வெறி பிடித்த செயலை செய்யத் தூண்டுவது எது என்ற அரசியல் கலாசாரத்தின் பின்னணி குறித்து சிந்திக்க வேண்டும். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஒரு அரசியல் கட்சித் தலைவரை ரூபாய் நோட்டுகளை விசிறி அடித்து வரவேற்றுள்ளனர். பேருந்தை எரிப்பதும், ரூபாய் நோட்டுகளை விசிறி அடிப்பதும், இந்தச் சீரழிந்த அரசியல் கலாசாரத்தின் வேறு வேறு வடிவங்களே!''

திவ்யா, தமிழ்நாடு மாணவர் இயக்கம்: ''செய்திகளை, யாருடைய கோணத்தில் இருந்து நீங்கள் வழங்கப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். கூடங்குளம் போராட்டச் செய்திகளை போராட்டக்காரர்களின் குரலாக ஒலிக்கிறீர்களா..? ஆளும் வர்க்கத் தின் பக்கமிருந்து எழுதுகிறீர்களா...  அந்நிய நேரடி முதலீட்டுப் பிரச்னையில் வியாபாரி களின் நியாயத்தை எழுதுவீர்களா... அரசின் குரலாகப் பேசுவீர்களா? எல்லோரும் மாவோயிஸ்ட்களைப் பயங்கரவாதிகளாக சித்திரித்தால், அதையே நீங்களும் செய்வீர்களா? மாவோயிஸ்ட் தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்துவீர்களா? இவற்றில் தான் ஒரு செய்தியாளரின் நேர் மையும் சமூகப் பொறுப்பும் அடங்கி இருப்பதாகக் கருதுகிறேன்!''  

விகடனில் புது வெள்ளம்!

பாலாஜி, பண்பலைத் தொகுப்பாளர்: ''ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தப் புதுப் புது ட்ரெண்டுக்கு மிக முக்கியக் காரணம் இன்டர்நெட் வைரல். இன்றைய மீடியா உலகில் ஒருவர் ஒரு வேலையை மட்டும் செய்துகொண்டு இருக்க முடியாது. நியூஸ் எழுதணும், அதையே சேனலில் ரிப்போர்ட் பண்ணணும், யூடியூபில் அப்லோட் பண்ணணும், ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடணும்... இப்படி மல்ட்டி டாஸ்கிங் வேலையில் நிபுணத்துவம் பெற்றிருப்பதுதான் இன்றைய தேதிக்கு எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சவால். எஃப்.எம்-ல மட்டும் நான் பேசிட்டு இருந்தப்போ, பாலாஜின்னா...  நூறு பேர், இருநூறு பேருக்குத் தெரியும். ஆனா, என் நிகழ்ச்சிகளை நெட்ல அப்லோட் பண்ண ஆரம்பிச்ச பிறகு, லட்சக் கணக்கான பேர் அதைக் கேட்டு, பாராட்டவோ விமர்சனம் பண்ணவோ ஆரம்பிச்சாங்க. இப்போ எல்லாம் திறமை இருந்தா பேர் வாங்குறதுக்கு, 40 வயசு வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சின்ன வயசுலயே பெரிய பெரிய சாதனை களை சாதிக்கலாம்!''

சந்துரு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி: ''நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கலாமா என்பது பொதுவாக எழும் சந்தேகம். விமர்சிக்கலாம்; ஆனால், அதில் உள்நோக்கம் இருக்கக்கூடாது. அத்துடன் உங்கள் விமர்சனத்தை நிரூபிக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து எழுதச் செல் கிறீர்கள். உங்களுக்குத் தேவையான செய்தி கிடைத்துவிடுகிறது அல்லது அலு வலக நேர நெருக்கடி காரணமாக பாதி யில் வந்துவிடுகிறீர்கள். நீங்கள் வந்தபிறகு, பேசப்பட்ட சில விஷயங்கள் அவைக் குறிப் பில் இருந்து நீக்கப்படுகின்றன. இது தெரியாமல் நீங்கள் பார்த்ததை எழுதி, பத்திரிகையிலும் வந்துவிடுகிறது. இப்போது இது விதிமீறல். சட்டப்படி, குற்றம். நீங்கள் பார்த்தது, கவனித் தது எல்லாம் உண்மைதான் என்றாலும்கூட, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை. இப்படி இந்தியக் கருத்துரிமை என்பது, பல வகைகளிலும் வரம்புக்கு உட்பட்டதே. இவற்றை நீங்கள் புரிந்துகொண்டு எழுத வேண்டும்!'' என்றதோடு, மேலும் பல அத்தி யாவசியத் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

மாணவர்களிடம் வீரிய விதைகள் விதைக்கப்பட்டிருக்கிறது... மிகச் சரியாக ஒரு வருடத்துக் குப் பிறகு, அமோகமான அறுவடை காத்திருக்கிறது!

விகடனில் புது வெள்ளம்!
விகடனில் புது வெள்ளம்!

2012-13ம் ஆண்டுக்கான 'தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்’களாக ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ், செ.திலீபன், க.பிரபாகரன், ரா.மூகாம்பிகை, க.அபிநயா, உ.கு.சங்கவி, ச.பா.முத்துக்குமார், பி.விவேக் ஆனந்த், தே.தீட்ஷித் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு விகடன் வழங்கிய சான்றிதழும், நினைவுப் பரிசும் இருக்க... ஒவ்வோர் ஆண்டும் நமது மாணவப் பத்திரிகையாளர்களின் பணிகளை, விகடன் வாசகர் பா.சத்திய நாராயணன் அவர்களும் மதிப்பிடுவார். அந்த வகையில், இந்த முறை அவர் தயார் செய்திருந்த பட்டியலும், விகடன் தேர்வு செய்த பட்டியலும் 99 சதவிகிதம் பொருந்தி போயிருந்தது. வழக்கம் போல அவர் சிறப்புத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பேனா பரிசளிக்க... சர்ப்ரைஸ் சந்தோஷமாக கடந்த ஆண்டின் மாணவ நிருபர்கள் ஒன்றிணைந்து, சத்தியநாராயணன் அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்கள். மாணவப் பத்திரிகையாளர்களின் கட்டுரை, படங்களை அலங்கரிக்கும் எழுதுகோல் சின்னத்தில் விகடன் தாத்தா வீற்றிருப்பதைப் போல மாணவர்களே கைப்பட உருவாக்கிய சிலை அது. நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாக நிறைவுற்றது இரண்டு நாள் திருவிழா!

விகடனில் புது வெள்ளம்!

விஜய் சேதுபதி பளிச்

 யிற்சி முகாமின் சர்ப்ரைஸ் விருந்தினர்...  விஜய் சேதுபதி. அவரிடம், தங்கள் முதல் பேட்டியை நிகழ்த்தினார்கள் புதிய மாணவ நிருபர்கள்.

'' 'சூது கவ்வும்’ படத்துல ஆள் கடத்தலுக்கு அஞ்சு ரூல்ஸ் சொன்னீங்க. அதே மாதிரி வாழ்க்கையில் முன்னுக்குவர அஞ்சு ரூல்ஸ் சொல்லுங்க?''

''அஞ்சு ரூல்ஸ்லாம் கிடையாது. ஒரே ரூல்தான்... இப்படி யார்கிட்டயும் அறிவுரை கேட்காதீங்க. இது நம்ம வாழ்க்கை. ஒவ்வொரு முடிவையும் நாமதான் எடுக்கணும். நாம எடுத்த புது முயற்சி தோல்வியடைஞ்சாக்கூட, கவலைப்பட வேண்டாம். மத்தவங்களோட ஆலோசனைகளுக்குக் கொஞ்சம் காது கொடுங்க. ஆனா, இறுதி முடிவை நீங்க மட்டுமே எடுங்க!''

''பட்டப் பெயர், பன்ச் டயலாக். இதெல்லாம் எப்போ?''

''எனக்கு எங்க அப்பா வெச்ச பேர்... விஜய குருநாத சேதுபதி. அதுவே அழகா, கொஞ்சம் பெருசாவே இருக்கு. இதுக்கு மேல பட்டப் பேர்லாம் எதுக்குங்க?

அப்புறம் என்ன... பன்ச் டயலாக்கா? இப்போ நடிச்சுட்டு இருக்கும் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் கொஞ்சம் பன்ச் டயலாக்ஸ் பேசி இருக்கேன். அதில் என் கேரக்டர் பேரு... 'சுமார் மூஞ்சி குமார்’. வசனம்லாம் செம காமெடி. நிச்சயம் ரசிப்பீங்க. மிஸ் பண்ணிடாதீங்க!''

''காமெடி, த்ரில்லர் படங்களா பண்றீங்களே... கௌதம் மேனன் படங்கள் மாதிரி ரொமான்டிக் படம் பண்ண ஆசை இல்லையா?''

''செம சூப்பர் ரொமான்டிக் படத்துல நடிக்க ரொம்ப ஆசை. ஒவ்வொரு ஃப்ரேமிலும் காதல் ததும்பணும்... மனசை நிறைக்கணும். அப்படி ஒரு படம் சீக்கிரமே பண்ணுவேன்!''

''எந்த ஹீரோயின்கூட நடிக்க ஆசை?''

''ம்... அனுஷ்கா!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism